குட்டி விஞ்ஞானி!



அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஜார்ஜியா ஹட்சின்சன் புதிய சோலார் பேனல் தயாரிப்புக்காக 25 ஆயிரம் டாலர்கள் பணப்பரிசை வென்றுள்ளார்.அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக பள்ளிகளுக்கிடையே ‘பிராட்காம் மாஸ்டர்ஸ்’ அமைப்பு நடத்திய போட்டியில்தான் ஜார்ஜியா சாதித்திருக்கிறார்.

சூரிய ஒளியை  ‘ட்யூயல் ஆக்சிஸ்’ ட்ராக்கர் மூலம் சேமிக்கும் நுட்பத்தை தனது சோலார் பேனலில் முயற்சித்து பரிசை வென்றிருக்கிறார் ஜார்ஜியா. இதன்மூலம் விலை அதிகமான சென்சார்களை விட துல்லியமாக சூரியனின் நகர்வை கண்காணித்து சோலார் பேனல்களை நகர்த்திக்கொள்ள முடியும்.

“வெப்பமயமாதலால் சூழல் மாறி வருகிறது. அதை எதிர்கொள்ள இதுபோன்ற கண்டுபிடிப்புகள் உதவும்...” என்கிறார் ஜார்ஜியா. தன் கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை வாங்க விண்ணப்பித்துள்ள ஜார் ஜியா, கிடைத்த தொகையை தன் எதிர்கால கல்விக்குச் செலவிட முடிவு செய்துள்ளார். “அறிவியல் படிப்பு என்பது ஆண்களுக்கு மட்டுமானதல்ல; பெண்களும் அதில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை என் தோழிகளுக்கு ஏற்படுத்துவதே என் முதல் வேலை...” என்கிறார் ஹட்சின்சன்.