அல்சீமர் அபாயம்!



வீட்டைப்பூட்டிவிட்டு தெருவில் இறங்கியபின்பும் சரியாகப் பூட்டினோமா, கேஸ் ஸ்டவ்வை  அடைத்தோமா என்ற தவிப்பு, முந்தையநாள் பார்ட்டி கொடுத்த நண்பரின் பெயரை தேடுவதில் மூளையில் கபடி தடுமாற்றங்கள்  இருந்தால்  நியூரோடாக்டரைப் பார்த்து விடுங்கள் என தகவல் கூறுகிறது அமெரிக்க நேஷனல் இன்ஸ்டிடியூட்.  

இந்தியாவிலுள்ள தற்போதைய அல்சீமர்(டிமென்ஷியா எனும் நினைவுத்திறன் குறைபாட்டில் ஒருவகை) நோயாளிகளின் எண்ணிக்கை 4 மில்லியன். 2030 ஆம் ஆண்டுக்குள் 7.3 மில்லியனாக உயரும் என்கிறது ஆய்வு முடிவுகள். வயதாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் அல்சீமரின் தாக்கமும் உக்கிரமாவது அபாய அறிகுறி என்பதில் சந்தேகமில்லை. குணப்படுத்த முடியாத மர்ம மறதிநோயான அல்சீமர், F-actin எனும் மூளையிலுள்ள புரதம் உடைவதால் ஏற்படுகிறது என நியூரோசயின்ஸ் இதழ் தகவல் கூறியுள்ளது.  

நிகழ்வு குறித்த தகவலை மூளை சேகரித்து வைத்து தேவைப்படும் போது தருவதைத்தான் நினைவுத்  திறனாகக்  கூறுகிறோம்.  இதனை engram  என்று 1904 அன்றே  பெயரிட்டு அழைத்தார் ஜெர்மனி  உயிரியலாளரான  ரிச்சர்ட்  சீமோன். மூளையிலுள்ள நியூரான்கள்  தகவல்களைச்  சேகரித்து  பின்  தேவைப்படும்போது திரும்பத்தருகின்றன. டெக்யுகத்தில் 30-45 வயதிலும் ஞாபகமறதி சிக்கல்கள் முளைத்துவருகின்றன். டெல்லியைச் சேர்ந்த ரோஹித் 30 வயதில் நிதிநிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

மனிதவளத்துறை இயக்குநராக இரவு பகல் என வேலை செய்ததில் சில நாட்கள் தொடர்ச்சி யாக தூக்கம் குறைய, முக்கியமான மீட்டிங், டீல்களை மறக்கத்தொடங்கியபோதுதான் ரோஹித்துக்கு ஏற்பட்ட அபாயம் அவரின் குடும்பத்தினருக்கு புரிந்திருக்கிறது.‘‘குறைந்தபட்சம் 6-7 மணிநேரம் தூக்கம் குறைந்தால் நினைவு தொடர்பான பிரச்னைகள் எழுவது உறுதி” என்கிறார் மூளை மருத்துவரான அன்ஷூ ரோஹத்கி.

இந்தியர்களில் பத்தில் ஒருவருக்கு நினைவுத்திறன் பிரச்னை உள்ளது. வயது, தலையில் அடிபடுவது, தூக்கக் குறைவு, குடிநோய் ஆகியவையும் காரணமாகிறது.  அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த ஸ்டான் ஃபோர்டு இசைக்கலைஞரான எலினார் செல்ஃபிரிட்ஜுக்கு 101 வயது. இவருக்கு 70 வயதுக்கு முற்பட்ட  நினைவுகள் மட்டுமே உள்ளன. தன் நினைவுகளிலுள்ள 400 பாடல்களை இன்றும் பியானோவில் வாசிக்கிறார் என்பது மருத்துவர்களையே திகைக்க வைக்கிறது.