விக்கி பக்



பசுமை பேச்சாளர்கள் 19

நியூசிலாந்தைச் சேர்ந்த விக்கி பக் கிறிஸ்டிசர்ச் நகரின் முன்னாள் மேயர். பயோஎரிபொருளை ஆதரித்துப் பேசும் உலகளவிலான முக்கிய பசுமை பெண்மணி இவர். அக்வாஃப்ளோ என்ற நிறுவனத்தை தொடங்கி அசுத்த நீரிலுள்ள பாசிகளை சேகரித்து அதிலிருந்து உயிரியல் எரி
பொருளைத்  தயாரித்து கார், விமானங்களுக்கு பயன்படுத்தலாம் என உத்வேகப்படுத்தியவர் இவர்.

ஒரு ஏக்கரில் 680 காலன் பாமாயில் கிடைக்கிறது என்றால் விக்கி பக் கண்டு பிடித்த டெக்னிக்கில் ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் காலன் எரிபொருள் தயாரிக்கலாம் என்பது பலரையும் ஈர்த்துள்ளது.

சூழலுக்கு பொருத்தமான  வணிக  குழுக்களை ஒருங்கிணைத்து வழிகாட்டவென செல்சியஸ் இணையதளத்தை உருவாக்கிய தொலைநோக்கு பெண்மணியான விக்கி பக்,  நியூசிலாந்து அரசின் அறிவியல்  மற்றும் கண்டுபிடிப்பு கழகத்தின் உறுப்பினரும் கூட.  

“முதலில் ஆல்காக்களை பற்றி ஒன்றும் தெரியாது. பின்னாளில் அதனை பயன்படுத்தும்போது பிரமித்துவிட்டேன். நாங்கள் தற்போது 6 ஆயிரம் வகை ஆல்காக்களிலிருந்து 18 ஊழியர்களைக் கொண்டு எரிபொருள் தயாரித்துவருகிறோம்.பயோ எரிபொருள் என்பது உணவு உற்பத்திக்கு எதிரானது அல்ல என்பதே நிஜம்” உறுதியாகப் பேசுகிறார் முன்னாள் மேயரான விக்கி பக்.  

தற்போது போயிங், வர்ஜின் ஆகிய நிறுவனங்கள் விக்கி பக்கின் தொழிற்சாலையின் பயோ எரிபொருளை பரி சீலிக்கத் தொடங்கியுள்ளது இவரது தொலைநோக்கு பிளானுக்கு சாட்சி. ஆல்கா எரிபொருளை பொதுமக்கள் முன்னிலையில் செயல்படுத்தி வெற்றிகண்டுள்ளது எதிர்கால எரிபொருளுக்கான நம்பிக்கை தருகிறது.

நியூசிலாந்து அரசு விமான நிறுவனமும், அக்வாஃப்ளோ நிறுவனத்தின் பயோஎரிபொருளை விரைவில் சோதித்துப் பார்க்கவிருக்கிறது. அரசின் சூழல் குறித்த கார்பன் வணிக முயற்சியை பெரிதும் சிலாகித்து, கார்பன் நியூட்ரலிட்டியை வரவேற்கிறார் விக்கி பக்.  

கார்பன் குறைந்த தொழில் முயற்சிகளுக்கு கார்பன்ஸ்கேப், காற்றாலை நிறுவனத்தில் பணி என செய்யும் அனைத்திலும் தனது அடையாளத்தை பதிப்பது விக்கியின் ஸ்டைல். பிரேசில், இந்தோனேஷியாவில் பயோ எரிபொருளுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருவதை  கைவிடுவது, கார்பனை குறைக்கும் என்பவர், உலகளவில் பயோஎரிபொருளின் உற்பத்தி அளவு 3.4% க்கு மேல் அதிகரித்து வருவதை வரவேற்கிறார். “பெட்ரோலை விட எத்தனாலில் ஆற்றல் குறைவு என்றாலும் ஆக்சிஜன் அதிகம். வேகமாக எரியும் என்பதால் கவலையில்லை” என உற்சாகமாகப் பேசுகிறார் விக்கி பக்.