ஆரோக்கியத்தின் பாலம் கரோட்டினாய்டுகள்!



உடல் மொழி ரகசியங்கள் 31

கரோட்டினாய்டுகள் செடி, கொடி மரம் உள்ளிட்டவற்றின் மரபணுக்களைத் தூண்டி செயல்பட வைக்கின்றன. கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ள உணவுகளை உண்பதால் நமது உடலில் ஒருசில மரபணுக்களும் தன்னியல்பாக இயங்குகின்றன. இவை உடல் செல்களுக்கு அவசியமான பணிகளையும் செய்கின்றன.

இதை விஞ்ஞானிகள் ‘இடைவெளி சந்திப்புத் தொடர்பு’ என்று குறிப் பிடுகின்றனர். அதாவது செல்கள் ஒவ்வொன்றும் இணைக்கப்படாமல் தனித்தனியாகவே உள்ளன. எனவே, செல்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்வதற்கு, செல்களுக்கு இடையே உள்ள கேப் ஜங்ஷன் இணைக்கப்பட வேண்டும். இப்பணியைச் செய்வது கரோட்டினாய்டுகள்தான்.

கரோட்டினாய்டுகள் செல்கள் இடைவெளியில் நிரம்பி பாலம்போல் செயல்படுகின்றன.  அடுத்தடுத்த  செல்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள முடிகிறது. இத்தகைய செல்களின் ெதாடர்பால் அவை சூழ்நிலை மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ப செல் செயல்பாடுகளில் மாற்றம் நேர்ந்து, மரபணுக்களைத் தூண்டிச் செயல்படச்செய்கின்றன.

விஞ்ஞானிகள் இதுவரையில் 600 வகை  கரோட்டினாய்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். 600 வகை கரோட்டினாய்டுகளில், உணவு மூலம் நாம் உண்ணக்கூடிய கரோட்டினாய்டுகள்  20. பீட்டா- கரோட்டின்,  லுடெய்ன், லைக்கோபின்  ஆகியவை உடல்நலனுக்கு மிக அவசியம்.  பீட்டா கரோட்டின்:கரோட்டினாய்டுகளில் ஆற்றல் மிக்க ஆன்டியாக்சிடண்ட், பீட்டா கரோட்டின், ஃபிரிரேடிகல்களை செயலிழக்கச் செய்து, டிஎன்ஏ சிதைவுபடாமல் பாதுகாப்பதை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

தினசரி 15கி. பீட்டா கரோட்டின் தொடர்ந்து சாப்பிட்டால் டிஎன்ஏ சிதைவு குறைந்து, சீரமைக்கும் பணிகள் மேம்படுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புற்றுநோயை முடக்கும் மரபணு `P21’ வைத் தூண்டுவது பீட்டா கரோட்டின். டாக்டர் லூசியா ஸ்டிவாலா அம்மையார், இத்தாலி பாவியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், உதவியாளர்களுடன் நடத்தியுள்ள ஆராய்ச்சிகளில், பீட்டா கரோட்டின், புற்றுச்செல்கள் வளர்ச்சியைத் தடுத்து முடக்கிவிடும் `P21’ மரபணுவைச் செயல்படத் தூண்டுவதை கண்டுபிடித்துள்ளார்.

பீட்டா கரோட்டின் தோல் புற்றுநோயைத்  தடுப்பதையும் இவர் கண்டுபிடித்துள்ளார். பீட்டா கரோட் டின் `P21’ மரபணுவை செயல்
படச் செய்வதன் மூலமே தோல் புற்றுநோய் வளர்ச்சியை முடக்குகிறது. வேறு ஆராய்ச்சிகளில், வைட்டமின் இ சத்தும், `P21’ மரபணு செயல்பாடுகளை உயர்த்துவதன் மூலம் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் இ சத்து `P21’ - புரதம் உருவாகும் அளவை உயர்த்தி `P21’ மரபணுவின் செயல்திறனை உயர்த்துகிறது.

பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் இ சத்து இரண்டும் இணைந்தே செயல்பட்டு `P21’ மரபணுவின் செயல்பாடுகளை மேம்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.உணவிலிருந்து பெறும் நார்ப்பொருள் பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரில் கரையாத நார்ப்பொருள் உடலில் உறிஞ்சப்படுவது இல்லை. அதனால், அது குடல் பாதையில் ஊர்ந்து செல்லும்போது நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் நொதிப்படைகிறது. இவ்வாறு நொதிப்படையும் நார்ப்பொருள்  ‘பூடைரேட்’  எனும்  கூட்டுப்பொருளை  உருவாக்குகிறது.  இது `P21’  மரபணுவைச் செயல்படத் தூண்டி விடுகிறது.

`P21’ மரபணு, பெருங்குடல் புற்றுச்செல்கள் வளர்ச்சியைத் தூண்டிப்  பெருகச்செய்யும்  மற்றொரு மரபணுவை செயல்பட முடியாமல் தடுப்பதன் மூலமே புற்றுநோய் வளர்ச்சி தடுக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மது அருந்துபவர்களுக்கும் சிகரெட் புகைப்பவர்களுக்கும், கூடவே செயற்கை பீட்டா கரோட்டின் துணை உணவும் சாப்பிடுபவர்களுக்கு  நுரையீரல் புற்றுநோய் உருவாகும். ஆல்கஹால்  குடி மற்றும் சிகரெட் புகை இரண்டும் பெருமளவில் ஃபிரிரேடிகல்களை உருவாக்குகின்றன.

அவை உடல் முழுவதும் மரபியல்   சிதைவுகளை   உருவாக்கி  விடுகின்றன. ஆல்கஹாலும்  புகையும் பீட்டா  கரோட்டின் பயன்பாட்டை முற்றிலும் சீர்கெடுத்து விடுகின்றன. மேலும், விந்தையாக செயற்கை  பீட்டா  கரோட்டினில் இருந்தும் பெருமளவில் ஃபிரிரேடிகல்கள் உருவாகின்றன. எனவே, குடிப்பழக்கமும் புகைப் பழக்கமும் உள்ளவர்கள் ‘செயற்கை’ பீட்டா கரோட்டின் துணை உணவு  சாப்பிடக்கூடாது.

(ரகசியம் அறிவோம்)

ச.சிவ வல்லாளன்