உலகின் ரகசிய இனக்குழுக்கள்!



டிவி, ரேடியோ, இன்டர்நெட் ஆகியவற்றில்  இல்லுமினாட்டி, ப்ரீமேசன்ஸ், ஸ்கல் அண்ட் போன்ஸ், பில்டர்பெர்க் ஆகிய ரகசிய குழுக்களை ஏ டூ இசட் அறிந்திருப்பீர்கள். கீழே நீங்கள் காணப்போவதும் அதுபோல ரகசிய இனக்குழுக்களின் வரிசைதான்.
  
எக்பேஇன்றும் இயங்கி வரும் எக்பே குழுவிற்கு ஆப்பிரிக்க நாடுதான் சொந்த ஊர். எக்பே இனக்குழுவின் சடங்குகளுக்கு தலைமையேற்று நடத்துவது கண்ணுக்கு தெரியாத வனத்திலுள்ள ஒரு புனிதசக்தி என்பது இவர்கள் நம்பிக்கை. அரசியல், சட்டம் ஆகியவற்றை தமது ஏரியாக்களில் கறாராக ஃபாலோ செய்யும் கூட்டமிது.

தங்களுடைய கடமையை செய்யும்போது முகமூடி  அணியும்  இவர்களை அடையாளம் தெரிந்தாலும் மக்களிடமிருந்து ஒரு வார்த்தை வெளியே போகாது. ஏன்? இவர்களின் ட்ரீட்மென்ட் அப்படி. நைஜீரியா, கேமரூன் ஆகிய நாடுகளில் வாழும் இந்த ஆண்கள் குழுவில் முதல் கிரேடு, இரண்டாம் கிரேடு உண்டு.

இரண்டு கிரேடில் இடம்பெறவும் கரன்சியை கொட்டித்தர வேண்டும். முதல் கிரேடு எக்பே மனிதர்களான பிறகு, இனக்குழுவின் பொருளாதாரத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு. அட்லாண்டிக் கடல் தாண்டி வணிகம் செய்து வந்த சமுதாயம் இது.
  
செக்ட்டே ரூஜ் இனக்குழு!

ஹைதியில் வாழ்ந்து வந்த மனித இறைச்சி தின்னும் கொள்ளைக்காரக்கூட்டமிது. 1938 ஆம் ஆண்டு வெளியான டெல் மை ஹார்ஸ் நாவலில் இக்குழுவைப்பற்றி விவரித்த எழுத்தாளர் ஸோரா ஹர்ஸ்டன், இவர்களது ஆன்மிக, கலாசார சடங்குகள் ஸோம்பிகளை ஆராதிக்கும் வூடூ சமூகத்தினரையே ஒத்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த சமூகத்தில் இறந்து போனவர்களின் உடலை சூனியக்காரர்கள் எடுத்து  பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதையும் ப்ரூஃபின்றி நம்புகின்றனர்.

மனிதர்களையும் சூழலையும் ஆராயும் எத்னோபயாலஜி நிபுணரான வாட் டேவிஸ், “விஷமருந்தியவர்களை இறந்தவர்கள் என தவறாக நினைத்து அவர்களை அடக்கம் செய்ய முயற்சிக்கும்போது அவர்கள் குற்றுயிராக எழுந்திருக்க முயற்சித்திருப்பார்கள். அதனால் ஸோம்பி நம்பிக்கை வந்திருக்கலாம்” என்கிறார்.

கொடூரமான தோற்றத்தில் செக்ட்டே ரூஜ் இனக்குழுவினர், மனிதர்களோடு கொடூரமான சடங்குகளை அரங்கேற்றுவதை ஸோராவின் எழுத்தில் படிக்கும்போதே திடுக்கென ஆகிறது. இந்நிலையில் இன்றும் எப்படி இவர்களின் கலாசாரம் பிழைத்திருக்க முடியும்?
  
துலே இனக்குழு

1918  ஆம் ஆண்டு ஜெர்மனியில் தோன்றிய ப்யூர் ஆரியர்களை மட்டுமே வளர்த்தெடுக்கும் இனக்குழு துலே. கற்பனையாக இவர்களது நாடு வட துருவத்தினருகிலுள்ள அல்டிமா துலே, அதன் தலைநகர் ஹைபர்போரியா. நல்ல சீதோஷ்ண நிலையிலான முப்போக பூமி. யூதர்களுக்கு எதிரான இனவெறி அரசியல் அமைப்பான இவ்வமைப்பு மியூனிச் அப்சர்வர் என்று பத்திரிகையை நடத்தியது.

பின்னாளில் இதன் பெயர் பீப்பிள்ஸ் அப்சர்வர் என்று பெயர்மாற்றப்பட்டு நாஸியினரின் முன்னணி நாளிதழானது. இதில் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரும் பங்கு பெற்றிருந்தார் என்றொரு வதந்தியும் உண்டு. 1930ம் ஆண்டுக்கு முன்பாக, ரகசிய இயக்கங்களுக்கு எதிரான சட்டம் மற்றும் நாஸி அடக்குமுறைகளால் இந்த ரகசிய சமுதாயம் காற்றில் வைத்த கற்பூரமானது.
  
சிறுத்தை இனக்குழு

1900 இல் உருவானக் மனித இறைச்சிக்கு சப்புகொட்டி, மனிதர்களை கபாப் செய்யும் திகில் இனக்குழு இது. நைஜீரியா, சியாரா லியோன், ஐவரிகோஸ்ட் ஆகிய இடங்களில் வாழ்ந்த இவர்கள், சிறுத்தையின் தோலை அணிந்துகொண்டு மனிதர்களை அட்டாக் செய்து கொல்வார்கள். இறந்த மனிதர்களின் ரத்தத்தையும், இறைச்சியையும் மருந்துபோலாக்கி உண்பதன் மூலம் தமக்கு அயர்ன்மேன் எனர்ஜி கிடைக்கும் என்பது இவர்
களது 100% நம்பிக்கை.

இரண்டு உலகப்போர்களின்போதும் இன்டர்வெல் எடுக்காமல் ஆக்டிவாக செயல்பட்டு எக்கச்சக்க   மக்களைக்  கொன்று தின்றதால் அரசு உஷாராக, டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு தொடங்கியது. மக்கள் இவர்களின் மூர்க்கமான சிறுத்தைத்தோல் தாக்குதலுக்கு பயந்து ஒரு வார்த்தையும் செப்பவில்லை.

ஒரு சிறுத்தை வீரன், போலீசால் என்கவுண்டரானதும், பிற மனிதர்களைப் பற்றிய தகவல்களை மக்கள் மனப்பாடமாக போலீசிடம் சொல்லிவிட ,  அப்புறம் என்ன? குஷியாக களமாடிய  போலீசாரினால் ஆல் இன் ஆல் சிறுத்தை குழுவினருக்கும் சொர்க்கத்திற்கு டிக்கெட் கிடைத்தது.  ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இன்றும் சிறுத்தை சமூகம் உள்ளது  என்ற செய்தி பலரையும் தூக்கத்திலும் பாத்ரூம் செல்ல வைக்கிறது.
  
பசுங்கன்றுத்தலை இனக்குழு

இங்கிலாந்தின் சார்லஸ் மன்னருக்கு எதிர் கோஷ்டி இது. மன்னர் சார்லஸ் மதம் மாறி திருமணம் செய்ததற்காக ஜனவரி   30, 1649  அன்று தூக்கிலிடப்பட்டார். அவர் மரணித்த நாளன்றே பசுங்கன்றுத்தலை அமைப்பின் ஆண்டுக்கூட்டம் கிராண்டாக  நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கட்டிடங்களில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மன்னரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நக்கலடித்து சிரித்துவிருந்து தின்றுவிட்டு வெற்றிலை மென்றபடி  கிளம்பும் விநோத  குழு.

Eikon Basilike  என்ற புத்தகத்தை எரித்து, அரசருக்கு கொடுத்த மரணதண்டனையை வாழ்த்தி பசுங்கன்றின் மண்டையோட்டில் வைன் ஊற்றி, பக்குவம் செய்த மீனை வெறியேற தின்பது இக்குழுவின் உணவு ஸ்டைல். இங்கிலாந்தின் முந்தைய சர்வாதிகாரத்தை நினைவூட்டும் விருந்து இது. 1735 ஆம் ஆண்டு மறைந்துபோன அமைப்பு பின்னர் மறைவாக இயங்கி ஓய்ந்தது.

ச.அன்பரசு