சஹாராவில் அதிசயப் பனி!



சுற்றுச்சூழல்கள் மாறிவருவது அண்மையில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான். எனினும் திடீர் தலைகீழ் நிகழ்வுகள் நம்மை பதட்டப்படுத்தி கவனிக்க வைப்பது உண்மைதானே! அண்மையில் நாசாவின் ஆய்வு மைய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் வடக்கு ஆப்
பிரிக்காவிலுள்ள சஹாரா பாலைவனத்தில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு பனி கொட்டியிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நாசாவின் லேண்ட்சாட் 7 செயற்கைக்கோள்தான் சஹாராவின் மெல்லிய பனிப்படர்வை கச்சிதமாக படம்பிடித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இப்பகுதிகளில் ஏற்படும் மாறுதல்களை கடந்த 4 ஆண்டுகளாக நாசா கண்காணித்து வருகிறது.

கடந்த டிசம்பர் 19 அன்று இரண்டாவது முறையாக திடீர் பனி சஹாரா பாலைவனத்தில் கொட்டியுள்ளது. அல்ஜீரிய நகரமான ஐன் செஃப்ரா பகுதியில் நிகழ்ந்த பனிப்பொழிவை கரீம் பூச்செடாடா என்ற புகைப்படக்காரர் எதேச்சையாக தனது படங்களின் வழியே பதிவு செய்து இணையத்தில் ஏற்றியதும் பரபரப்பு பற்றிக்கொண்டது.

மொராக்கோ எல்லைப்பகுதி, அல்ஜீரியாவின் பூவர்ஃபா, ஐன் செஃப்ரா ஆகிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வந்த நாசா ஆராய்ச்சியாளர்கள் சஹாரா பனிப்பொழிவை உண்மையென உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெயில்காலத்தில் 37 செல்சியஸ் வெப்பநிலை கொண்டிருக்கும் இப்பகுதியில் பனிக்காலத்தில் ஒற்றைப்படையாக வெப்பநிலை கீழிறங்கிவிடும். ஆனாலும் இப்போது போல முழுக்க ஜில் வெப்பநிலையாக மாறுவது அரிதிலும் அரிது.

அக்வா, டெரா செயற்கைக்கோள்களில் அகச்சிவப்பு, சிற்றலை அகச்சிவப்பலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சஹாராவின் பனிப்பொழிவை படம்பிடித்துள்ளனர். இப்புகைப்படங்களில் பனிபடர்ந்துள்ள பகுதிகள் நீலமும், பச்சையும் கலந்த நிறத்திலுள்ளன.  பாலைவனத்திற்கு அருகிலுள்ள நகரங்களில் கடல்மட்டத்திற்கு மேல் 1000 மீ. உயரத்திலுள்ள பகுதியில் பொழிந்த திடீர் பனிப்பொழிவு ஒருநாள் முழுக்க அப்படியே இருந்திருக்கிறது.

ஆனால் முதல்முறை இதன் ஆயுள் 30 நிமிடங்கள்தான். “அனைவருக்கும் இது பெரிய ஆச்சரியம்தான். மிகவும் அரிதான நிகழ்வு இது” என புகைப்படக்காரர் கரீம் நெகிழ்கிறார். தற்போது வறண்டு போயுள்ள சஹாரா பாலைவனம் மீண்டும் பசுமை பெற 15 ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- கா.சி.வின்சென்ட்