பூமிக்கு மிக அருகில் நீர்!பருவமழை பொய்த்துவிட, அவ்வப்போது வரும் புயலும் மழையை விட சிக்கல்களையே அதிகம் விதைக்கிறது. கோடையில் கொதிக்கும் வெயிலில்
குடிநீருக்கு இனி என்னதான் செய்வது என்ற யோசனையும் பயமும் யாருக்குத்தான் இல்லை. பூமிக்குக் கீழே நீர் இருக்கிறது என முகத்தில் தண்ணீர் தெளித்து நம் பயத்தை போக்கியிருக்கிறார்கள் இவான்ஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
 
சென்டர் ஆப் தி எர்த் படத்தில் வருவது போல பூமிக்குக் கீழே கடல் இருப்பது இனி உண்மையாகவும் இருக்கலாம். பூமியின் கீழ்ப்பரப்பில் 1000 கி.மீ சென்றால் பல்வேறு கடல்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். “அப்படி பூமியின் கீழ்ப்பரப்பில் நீர் இல்லையென்றால் நமது நிலைமை மோசமாகிவிடும். மேலும் நீர் இருக்கும் உண்மை முன்பே ஆராய்ச்சியாளர்கள் கூறிய கருத்தை உறுதிப்படுத்துகிறது” என பரபரவென பேசுகிறார் இல்லினாய்சிலுள்ள இவான்ஸ்டன் பல்கலையின் ஆராய்ச்சியாளரான ஸ்டீவ் ஜேக்கப்சன்.

“வைரத்தை அகச்சிவப்புக்கதிர்கள் நுண்ணோக்கி வழியே பார்க்கும்போது, அவை உருவாகத் தேவையான ஹைட்ராக்சில் அயனிகள் பெரும்பாலும் நீர்மூலம் பெறப்படுபவையே” என அழுத்தமாகப் பேசுகிறார் ஜேக்கப்சன். இரும்பு, மெக்னீசியம் ஆக்ஸைடு மற்றும் பல்வேறு உலோகங்களான குரோமியம், அலுமினியம், டைட்டானியம் (ஃபெர்ரோபெரிகிளாஸ் கனிமம்) ஆகியவை வைரம் உருவாக உதவுகின்றன.

இம்முறையில் பிரேசிலின் ஜூய்னா பகுதியில் சாவோ லூயிஸ் நதியருகேயுள்ள எரிமலையில் வைரமானது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்னர் வெளியேறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

வைரம் உருவாவதற்கு பூமியின் மத்தியில் காணப்படும் நீர் உதவியிருக்கலாம். நாம் நினைப்பதை விட பூமி மத்தியிலுள்ள நீர் என்பது அளவில் மிகவும் பெரியதாகும் என்ற இந்த ஆய்வுக்குழுவினர் பூமிக்குக் கீழே 600 கி.மீ தொலைவில் நீரும் பாறையும் கலந்த கலவையைக் கண்டுபிடித்துள்ளனர். 

இந்த ஆராய்ச்சி ஒருவகையில் நம்பிக்கை அளித்தாலும் முழுமையாக உள்ள நீரின் அளவு சரியாகத் தெரியவில்லை. டெக்டோனிக் அடுக்குகளுக்கு மேலேயுள்ள வண்டல் மண் மேலோடுகளில் நீர் தங்கியிருக்கலாம். “இந்த ஆராய்ச்சியின் மூலம் பூமி தன்னை எப்படி சுழற்சி முறையில் மாற்றிக்கொள்கிறது எனப் புரிந்துகொள்ள முடியும்’’ என்கிறார் இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலையைச் சேர்ந்த லிடியா ஹாலிஸ்.

“பூமித் தட்டுகளிடையே பெருகியுள்ள இந்த பாறைகள் மிதக்கும் நீரானது, தட்டுகளிடையே உயவுப்பொருள் போல செயல்படுகிறது. இந்த ஆராய்ச்சியின் வழியே கடல் உருவானது குறித்தும் அறிய வரலாம்” விறுவிறு பேச்சில் ஏகத்துக்கும் ஆச்சரியம் தருகிறார் ஆராய்ச்சியாளர் ஜேக்கப்சன்.

- ஜா.மலர்க்கொடி.