ஆட்கொல்லியா முதலைகள்?



அண்மையில் (ஜூன் 15,2016) அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் உள்ள முதலைகள் வசிக்கும் ஏரியில் தவறி விழுந்து அவற்றினால் கடிபட்டு இறந்தான், சுற்றுலா சென்ற ஒரு சிறுவன். ‘‘இதுபோல ஒரு சம்பவம் இதுவரை நடந்தது இல்லை’’ எனக் கூறினார் நகரின் மேயர் ஜெரி டெர்மிங்.

காவிரி டெல்டா பகுதிகளில் அவ்வப்போது வாய்க்கால் வழியாக முதலைகள் ஊருக்குள் புகுந்ததாக செய்திகள் பரபரப்பு ஏற்படுத்தும். உண்மையிலேயே முதலைகள் மனிதர்களைக் கொல்லும் இயல்பு கொண்டவைதானா? அறிந்து தெளிவோம் வாருங்கள்...இரு வகை முதலைகள் இங்கு காணப்படுகின்றன.

1.5 மீட்டர் நீளம் வரை வளரும் சீன வகை முதலைகள், அதைவிட அமெரிக்க வகை முதலைகள் நீளமாக வளருபவை ஆகும். ஃப்ளோரிடாவில் இந்த சம்பவத்தைப் பார்த்தவர்கள் சொன்ன வகையில் முதலை 1.2-2 மீட்டர் நீளம் இருக்கலாம் என யூகிக்கலாம். ஆனால் இது ஒப்பீட்டளவில் சிறியதுதான். மிகப்பெரிய முதலையாக அலபாமாவில் கண்டறியப்பட்ட முதலை ஒன்றின் நீளம் 4.5 மீட்டர் என பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

ஃப்ளோரிடா மாகாணத்தில் அரசின் பாதுகாப்புத் திட்டங்களால் முதலைகள் அபரிமிதமாகப் பெருகிக் காணப்படுகின்றன என்பது உண்மைதான். உலகில் 67 நாடுகளிலும் 1 மில்லியன் அளவுக்கும் மேல் இவை வாழ்ந்து வருகின்றன. அமெரிக்காவில் லூசியானா, மிசிசிபி, வடக்கு கரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன.

ஃப்ளோரிடாவில் எந்த நீர்நிலையிலும் முதலைகள் வசிப்பதற்கான வாய்ப்புஅதிகம்  உள்ளது. ‘‘இங்கு முதலைகள் அதிகளவு இருந்தாலும் மனிதனைக் கண்டு மிரளும் இயல்பு கொண்டவை என்பதால் பெரியளவு மனிதர்கள் மீதான தாக்குதலுக்கு வாய்ப்பு இல்லை’’ என்கிறார் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியலாளர் லூகாஸ் நெல்.

தாக்கப்பட்டது எத்தனை பேர்?

1928-2009 வரை முதலைகளால் தாக்கப்பட்டவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் 2010ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன. அதில் அமெரிக்காவில் மொத்தம் முதலைகளால் தாக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 24 மட்டுமே ஆகும். இதில் பெரும்பான்மையானவர்கள் ஃப்ளோரிடாவைச் சேர்ந்தவர்களாவர். 10 ஆயிரம் மக்களுக்கு இந்த தாக்குதலை ஒப்பிட்டால் ஓராண்டு சதவிகிதம் 0.06 ஆகும்.

 ‘‘இறந்துபோன சம்பவங்களிலும் கூட விழுந்தவர்களில் நீரில் மூழ்கி இறந்த பின்னே முதலைகளால் தின்னப்பட்டிருக்கலாம்’’ என்கிறார் வடக்கு கரோலினாவின் சுகாதாரம் மற்றும் சேவைப்பிரிவுகளின் அதிகாரியான ரிக் லாங்லே.

அதே வேளையில் மேற்சொன்ன ஆண்டுகளில் நடந்த முதலைகளின் தாக்குதல் எண்ணிக்கை 567 ஆகும். இதில் 260 வழக்குகளில் மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டிருக்கிறது. முதலைகள் பெருமளவு வாழும் நாட்டிலும் தாக்குதல் அளவு 0.06 என்பது மிகவும் குறைவான ஒன்றே.
 
தடையறத் தாக்கும் முதலை எது?

23 முதலை இனங்களில் 8 இனங்கள் மட்டுமே தன்னிச்சையாக மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடியவை என்று உலகளாவிய முதலைகள் பாதுகாப்பு சங்கமான ஐயுசிஎன் (IUCN) குறிப்பிடுகிறது. இதில் அமெரிக்க முதலைகளும் உண்டு.

அமெரிக்க முதலைகள் ப வடிவ வாயைக் கொண்டிருக்கும்; சாதாரண முதலைகள் v வடிவ வாயைக் கொண்டிருக்கும். இந்த வகையில் அமெரிக்க முதலைகள் ஆபத்து குறைந்தவை என தைரியமாக சொல்லாலாம். இவை உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் தாக்குதல் நடத்துவது 6 சதவிகிதமேயாகும். உப்புநீர் முதலைகளினால் ஏற்படும் தாக்குதல் அளவு 20-50 சதவிகிதம் அளவு உள்ளது.

உலகம் முழுவதும் முதலைகளால் ஏற்படும் தாக்குதல்களை பதிவு செய்யும் ‘க்ரோக்பைட்’ எனும் தகவல் தளம், ‘உலகில் ஆண்டிற்கு 1000 நபர்கள் முதலைகளின் தாக்குதலால் இறக்கின்றனர்’ என்று கூறுகிறது.

இந்த மரணங்கள் நிகழும் பகுதியாக இருப்பது பெரும்பாலும் ஆப்ரிக்காதான். அமெரிக்க முதலைகள், மீன்கள், பறவைகள், மற்ற ஊர்வன வகை விலங்குகள், சிறிய  பாலூட்டிகள்  போன்றவற்றையே உட்கொள்கின்றன. துரதிர்ஷ்டவசமாக  சிறுவர்கள் இலக்காவதன் காரணம், அவர்களின் சிறிய உருவமே ஆகும். 2010ம் ஆண்டு அறிக்கைப்படி குழந்தைகளின் மீதான முதலைகளின் தாக்குதல் அளவு 13.1 சதவிகிதம் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலைகள் தாக்குதல் தொடர்பாக ஃப்ளோரிடா மீன் மற்றும் வனத்துறை அமைப்புக்கு ஓராண்டிற்கு 16 ஆயிரம் புகார்கள் வருவதால், 2015ம் ஆண்டு அவர்கள் ஆபத்து உள்ளதாக கருதப்படும் 7,500 அமெரிக்க முதலைகளை  மக்கள் வாழிடங்களிலிருந்து வேறிடத்திற்கு மாற்றியுள்ளனர்.

தாக்குதலைத் தவிர்க்க முதலைகளின் இயல்பைப் புரிந்துகொண்டு நடப்பது மிக முக்கியம். அவற்றை அழிக்காமல், அவற்றோடு இணைந்து வாழ்ந்து இயற்கைச்சூழலைக் காக்க மக்கள் முன்வர வேண்டும். முதலைகள் செல்லப்பிராணி அல்ல என்பதை எந்த இடத்திலும் நாம் மறக்காமலிருப்பது அவசியம். இந்த விழிப்புணர்வு நமது உயிரைப் பாதுகாத்துக்கொள்வதோடு, சூழல் கண்ணிகளையும் பலவீனப்படுத்தாமல் பாதுகாக்க உதவக்கூடும்.

- ஸ்டீவ் லோதர்