கண்டுபிடிப்பாளர் ஆவது எப்படி?



கண்டுபிடிப்பாளர் ஆவதற்கு என்ன படிக்க வேண்டும்?
- க.ராகவ், 10ம் வகுப்பு, செயின்ட் ஜோசப் பள்ளி, திருச்சி.

முதலில் அடிப்படை அறிவியல்... எந்தத் துறையில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த விரும்புகிறீர்களோ, அது சார்ந்த கல்வி அல்லது அறிவு. இதுவே கண்டுபிடிப்பாளர்களுக்கு முதல் கட்டத் தேவை. இருப்பினும், அறிவியல் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோம் எனில், அடிப்படைக் கல்விக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்ததும் உண்டு.

எப்படி இருப்பினும், கண்டுபிடிப்பாளரின் மூளை மிகுந்த ஆர்வத்துடன் இருக்க வேண்டும். ஒரு விஷயம் தன்னை எங்கு எடுத்துச் செல்லும் என்று தெரியாவிட்டாலும், அதைப் பின்தொடர்ந்து செல்லும் மனம் இருப்பவர்தான் கண்டுபிடிப்பாளர் ஆக முடியும். உலகப் போரின்போது விமானங்களையும் கப்பல்களையும் அறியும் ரேடாரை உருவாக்கும் குழுவில் இருந்த ஸ்பென்சர், மைக்ரோவேவ் அவனைக் கண்டுபிடிக்க இதுதான் காரணம்.

சில கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளில் கொஞ்சம் அதிகப்படியாகவே கவனம் செலுத்துவார்கள். அன்றாட வாழ்க்கையைவிட கண்டுபிடிப்புகள்தான் அவர்களது முக்கிய எண்ணமாக இருக்கும். அதனால் கவனக்குறைவும் மறதியும் உள்ளவர்களாக இருப்பார்கள்.ஒவ்வொருவரிடமுமே கொஞ்சம் கண்டுபிடிப்புத் திறன் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

அதனால்தான் வினோதமான கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தொப்பியோடு சேர்ந்த பைனாகுலர், ஸ்விட்ச் ‘ஆன்’ செய்தால் கோனில் உள்ள ஐஸ்க்ரீமை மேலே தள்ளும் வினோத கோன் ஐஸ், ஏ.சி. வசதியுடன் கூடிய ஷூ, சாப்பிடும்போதே உணவை ஆறச் செய்யும் ஸ்பூனுடன் சேர்ந்த மின்விசிறி, மீன் பிடிக்கும் எலெக்ட்ரிக் தூண்டில்கள், கம் தடவுவது போல ப்ரெட்டில் தடவ வெண்ணெய் ட்யூப்கள், மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்பட்ட உடனே காற்று ஊதப்பட்டு பாதுகாப்பாக நம்மை அந்தரத்தில் மிதக்க வைக்கும் உடைகள், செல்லப்பிராணிகளைத் தூக்கிச் செல்ல வசதியாக உடைகளிலேயே பொருத்தப்படும் பெல்ட்கள்... இப்படி வினோத கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீள்கிறது.
ஆமாம்... நீங்கள் என்ன கண்டுபிடிக்கப் போகிறீர்கள்?