சாலைகளே விளக்குகளாக மாறும்!



உலகத்தையே மாற்றக்கூடியது எது? டிகாப்ரியோவிலிருந்து செல்போன்காரர்கள் வரை சொல்லும்  சின்ன ஐடியாதான் அது. ஆனால் வெறும் ஐடியாவிற்கு இங்கு மதிப்பில்லை. நடைமுறையில் பயன் தந்தால்தான் நமக்கும் மதிப்பு... கல்லாவும் கட்ட முடியும். கீழே நீங்கள் படிக்கப்போவதும் ஒருவர் உருவாக்கிய ஐடியாதான்.

அதை எப்படி ஒருவர் மாற்றியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஓவியர் வான்காவின் ‘ஸ்‌டேரி நைட்’ எனும் ஓவியத்தின் அடிப்படையில் நெதர்லாந்தில் சைக்கிள் பாதை ஒன்று ஒளியுமிழும் ஓடுகளின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. பகலில் சூரிய ஒளியினை உள்ளே இழுத்து, பிறகு இரவில் உமிழும் இந்த ஓடுகளினால் மின்சார விளக்குகள் இந்த வீதியில் தேவைப்படுவதில்லை.

இப்படி ஒரு நன்மை கிடைக்கும் என்பது தெரிந்தும், இதுவரை பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் சிமென்ட், கான்க்ரீட், செங்கற்கள் போன்றவற்றில் இந்த ஒளியுமிழும் ஓடுகளைக் கலந்து எந்த கட்டிடங்களையும் கட்டாமல் தவிர்த்து வந்தனர். காரணம், நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இதில் உண்டு என்பதால்தான்.

மெக்சிகோவின் மிச்சோகேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஜோஸ் கார்லோஸ் ரூபியோ அவலோஸ், இப்படி ஒளியுமிழும் ஓடுகளைக் கலந்து நெடுஞ்சாலைகள், மோட்டார் சைக்கிள் பாதைகள் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்டவற்றைக் கட்ட முடியும் என்று நிரூபணம் செய்துள்ளார். இந்த புதிய டெக்னிக் பயன்படுத்திய சாலைகளில் மின்சார விளக்குகளை அமைக்கத் தேவையில்லை என்றால் மின்சாரம் மிச்சம்தானே!

‘‘சிமென்ட்டில் ஒளி புகாது என்பதால், அதில் மிகச்சிறிய அளவு ஒளியைப் பிரதிபலிக்கும் பொருட்களைச் சேர்க்க அதன் அமைப்பை சிறிது மாற்ற வேண்டியிருந்தது. கண்ணாடியை ஒத்த அமைப்பு கொண்ட கண்ணாடி அல்லாத சேர்மத்தினை சிமென்ட்டில் கூடுதலாகச் செலுத்தியிருப்பதால் சாலையில் வண்டி ஓட்டுபவர்களுக்கு கண் கூசுவது போன்ற தொல்லைகள் இருக்காது’’ என்கிறார் ரூபியோ அவலோஸ்.

செயற்கையான ஒளியுமிழும் மற்ற பிளாஸ்டிக், பெயின்ட் போன்றவற்றைக் காட்டிலும் அதிக காலம் உழைக்கக் கூடிய தன்மையை  சிமென்ட்டிலுள்ள ஒளியுமிழும் பொருட்கள் பெற்றுள்ளன. சூரிய ஒளியிலிருந்து (அ) விளக்குகளிலிருந்து பெறும் புற ஊதாக்கதிர்களை இந்த ஒளியுமிழும் பொருட்கள் ஈர்த்துக்கொண்டு பின்பு அதன் மூலம் ஒளிர்கின்றன.

உலகின் வறுமை  சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகளிலும், மின்சாரம் கிடைக்காத பகுதிகளிலும் இதனை செயல்படுத்த முயற்சிக்கலாம் என உற்சாகமாகப் பேசுகிறார் ஸ்பெயின் நாட்டின் தேசிய ஆராய்ச்சிக் கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளரான கார்மன் ஆண்ட்ரேட்.

- ச.அன்பரசு