கண்டுபிடிப்புகளின் வரலாறு



* இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் 1822ல் தானாக கணக்கிடும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். இது Differance Engine என அழைக்கப்பட்டது. நிதிப் பற்றாக்குறை காரணமாக இவரால் அதனை மேம்படுத்தி முழு அளவில் இயங்கக்கூடிய கருவியாக உருவாக்க இயலவில்லை. இவரே இன்றைய கணினிகளுக்கு தந்தை எனலாம்.

* MRI என்பதன் விரிவாக்கம் Magnetic Resonance Imaging என்பது ஆகும். இந்தப் பரிசோதனைக் கருவி உடல் பாகங்களை காந்த சக்தி மற்றும் ரேடியோ அலை மூலம் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்தக் கருவியில் உள்ள காந்த சக்தி, பூமியின் காந்த மண்டல சக்தியைவிட 1000லிருந்து 4000 மடங்குகள் வலிமை வாய்ந்ததாகும்.

* டிஜிட்டல் கேமராவை ஸ்டீவன் சாஸன் என்பவர் 1975ல் தன் 24வது வயதில் கோடாக் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கண்டுபிடித்தார். எனினும் இந்த தொழில்நுட்பத்திற்கான வடிவமைப்பு உரிமை 1978ல்தான் வழங்கப்பட்டது.

* ‘B’ வகை கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் நச்சுயிரியை, 1965ம் ஆண்டில் அமெரிக்க மருத்துவர் சாமுவேல் பரூக் ப்ளூம்பர்க் கண்டுபிடித்தார். பரூக் ப்ளூம்பர்க் 1976ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசை டி கார்லெடன் கைடவுக் என்பவரோடு பகிர்ந்து கொண்டார். 1969ல் மருத்துவர்கள் பிளம்பர்க் மற்றும் மில்மேன் ஆகியோர் இணைந்து இதற்கு தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். எனினும் இன்றுவரை உலகில் இந்த நோயினால் 30லிருந்து 45 வினாடிக்கு ஒருவர் இறக்கிறார்.

* ஆப்பிள் கணினியை ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர்தான் இணைந்து உருவாக்கினார்கள் என நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மூன்றாவதாக இவர்களோடு சேர்ந்து ரோனால்ட் வெய்ன் (Ronald Wayne) என்ற 82 வயது நபரும் ஆப்பிளை உருவாக்கிய பணியில் இணைந்திருந்தார்.

* அமெரிக்க கணினி விஞ்ஞானி டங்ளஸ் எங்கல்பார்ட் (1925-2013), பில் இங்கிலீஷ் என்பவரோடு இணைந்து 1960களில் மவுஸைக் கண்டுபிடித்தார். இதற்காக 1970 நவம்பர் 17ம் தேதி வடிவமைப்பு உரிமை பெற்றார். இது வணிக ரீதியாக வெற்றி பெறுவதற்கு முன்பே வடிவமைப்பு உரிமை காலாவதியாகிவிட்டதால் மவுஸ் விற்பனையால் இவருக்கு  வணிகப் பலன் ஏதும் கிடைக்கவில்லை.

*ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி அமெரிக்காவின் நாஸா விண்வெளி நிறுவனத்தின் மேற்பார்வையில் 1990ம் ஆண்டு ஏப்ரல் 24ல் விண்வெளி ஓடப் பயணத்தில் பயன்படுத்தப்பட்டது. எட்வின் ஹப்பிள் என்ற அமெரிக்க வானியல் அறிஞர் பெயரால் இது அழைக்கப்பட்டது. இந்த தொலைநோக்கி அமைப்பதற்கான கரு 1946லேயே - அதாவது நாஸா தொடங்குவதற்கு 10 ஆண்டு களுக்கு முன்பே விதைக்கப்பட்டு
விட்டது.

உலகத்திலுள்ள அறிவியல் ஆய்வகங்களில் 1954 செப்டம்பர் 29ம் தேதி தொடங்கப்பட்ட, சுவிட்சர்லாந்தில் உள்ள யுரோபியன் ஆர்கனைசேஷன் ஃபார்  நியூக்ளியர் ரிசர்ச் (CERN) என்பதே மிகப் பெரிய ஆய்வகமாகும்.1973ம் ஆண்டு அறிமுகமான உலகளாவிய இடமறிதல் முறை Global Positioning System (GPS), மனிதனின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானதாகும்.

அமெரிக்காவின் உருவாக்கமான இது 24க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களின் மூலமாக உலகின் எல்லா பகுதிகளையும் கண்காணித்து தகவல்களைத் தரும். வேறு நாடுகள் பலவும் இப்போது இதேபோன்ற கட்டமைப்பைச் செய்துவிட்டன.

1994-1996ம் ஆண்டுகளில் அறிமுகமான Universal Serial Bus, USB என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.  கணினியை டிஜிட்டல் கேமரா, பிரின்டர்கள், ஸ்கேனர்கள் மற்றும் உள்புற வன்பொருள்களோடு இணைக்க யுஎஸ்பி போர்ட் உதவுகிறது.90களில் அறிமுகமான கணினியில் உருவாக்கும் முப்பரிமாண (3டி) உருவங்களைக் கொண்டு ‘லேயர்ட் பிரின்டிங்’ - அதாவது அடுக்குப் பிரதி தொழில்நுட்பத்தின் மூலம் 3டி பொருளாக அச்சடித்து எடுப்பதுதான் முப்பரிணாம பிரின்டிங் ஆகும்.

*ஜெர்மனியின் Fraunhofer Gesellshaft என்ற நிறுவனம் MP3 தொழில்நுட்பத்தை உருவாக்கியது. Dieter Seitzer மற்றும் MP3யின் தந்தை என அழைக்கப்படும் Karltheniz Brandanburg ஆகியோர் MP3 தொழில்நுட்பம் விரிவடைய முக்கிய பங்கு ஆற்றினர்.

*செமூர் க்ரே என்ற அமெரிக்க மின்னணுப் பொறியாளர் 1950களில் உலகின் முதல் டிரான்சிஸ்டர் அடிப்படையில் அமைந்த சூப்பர் கணினியை கன்ட்ரோல் டேடா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்காக உருவாக்கினார். இவர் 1972லேயே க்ரே ரிஸர்ச் எனும் நிறுவனத்தை உருவாக்கி, உலகிலேயே அதிவேகமான பெரும் ஆற்றலுடைய சூப்பர் கணினிகளை உருவாக்கியவர்.

*வில்லியம் பெட்டர் என்பவர் ஒரு கலை இயக்குநர். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என்ற சொல்லை  முதன்முதலில் பயன்படுத்தியது இவர்தான். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் முறையில் முதன்முதலில் ஒரு மனித உருவத்தை வரைந்தவரும் இவரே.

*Hemcon என்பவர் உயிரைக் காப்பாற்றுகின்ற பேண்டேஜ் ஒன்றை 2002ல் கண்டுபிடித்தார். இதற்கு Chitosan bandage என்று பெயர்.
ரத்தத்தை 30 வினாடிகளில் உறிஞ்சும் திறன் கொண்ட பேண்டேஜான இது, போர்க்களங்களில் பெரிதும் பயன்படும்.

1988 ல் முதல் லேசர் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 1999ல் கிரேக்கத்தைச் சேர்ந்த கண் டாக்டர் பில்லகாரிஸ் என்பவரும் இத்தாலியைச் சேர்ந்த கண் டாக்டர் புர்ராடோ என்பவரும் மேற்கொண்ட லேசர் கண் அறுவை சிகிச்சை Lasik என அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையை 15 நிமிடங்களில் செய்துவிட முடியும். எனினும் இதில் 20 சதவிகித சிகிச்சைகளில் கண் வறண்டுவிடும் குறை காணப்படுகிறது.

1972ல் இங்கிலாந்து பொறியாளர் காட்ஃப்ரே ஹௌன்ஸ்ஃபீல்டு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட உடல் பரிசோதனை முறை சி.டி. ஸ்கேன் ஆகும். Computerised Tomography என்பதன் சுருக்கம் C.T. இது எக்ஸ்ரே படங்களைவிட உடல் உறுப்புகளை பல மடங்கு துல்லியமாக பல்வேறு பரிணாமங்களிலும் படமெடுத்துத் தருகிறது.

*ATM கருவியில் பணம் எடுக்கும்போது ரகசியக் குறியீட்டு எண்ணான பின் (PIN) நம்பர் பயன்படுத்தும் முறையை பிரிட்டிஷ் பொறியாளர் ஜேம்ஸ் குட்ஃபெல்லோ 1965இல் உருவாக்கினார். லண்டனில் பார்கிளேஸ் வங்கி அதனுடைய என்ஃபீல்ட் நகர கிளையில் 1967 ஜூன் 27ம் தேதி உலகின் முதல் ஏ.டி.எம். இயந்திரத்தை நிறுவியது.

*யூ டியூப்பில் முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோவிற்கு ‘Me at the Zoo’ (ஏப்ரல் 23, 2005) என்று பெயர். இதைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஜாவேத் கரீம் என்பவர் சாண் டியாகோ உயிர்க்காட்சிச் சாலையில் யானைகள் அடைத்து வைக்கப்பட்ட பகுதியிலிருந்து அதன் தும்பிக்கையைப் பற்றிப் பேசுவதை இப்படம் சித்தரித்தது.

*Polyethylene Terephthalate என்பதே PET என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது பாலியெஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்தது. 1940களின் மத்தியில் அமெரிக்காவில் DuPont என்ற ரசாயன நிறுவனம் புதிய நூலிழைக்காக பலவற்றை இணைத்து இதை உருவாக்கியது. 1950களில் PET ஃபிலிம்கள் உருவாக்கப்பட்டன. 1970களில் பெட் பாட்டில்கள் உருவாக்கப்பட்டு இன்று உலகின் முக்கிய பயன்பாட்டுப் பொருளாகத் திகழ்கிறது.

2011ல் கண்டுபிடிக்கப்பட்ட மின்சாரக் கார் மிகவும் திறமையான, மலிவான கார் ஆகும். Antro Solo என அழைக்கப்பட்ட இதில் மூவர் பயணம் செய்யலாம்.

*Geoff மற்றும் Mike Howe கண்டுபிடித்த Ripsaw என்ற டாங்கிகள் மணிக்கு 96 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியவை. 15.2 மீட்டர் உயரத்திற்கு தாண்டக் கூடியவை.

*XOS2 என்பது Raytheon Sarcas என்ற நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்காக தயாரித்த ஆடை ஆகும். இது இரும்பு மனிதன் ஆடை என அழைக்கப்படுகிறது. இதை அணிந்தவர் 90 கிலோ எடையைக் கூட தூக்க முடியும்.

- க.ரவீந்திரன், ஈரோடு.