கால்களே ஷூ ஆன கதை!



நாம் இப்போது பயன்படுத்தும் ஷூ  எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
- ஆர்.ராகேஷ்,
9ம் வகுப்பு,
கிருஷ்ணசாமி மேல்நிலைப் பள்ளி, கடலூர்.

நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பே பிரேசில் மக்கள் கால்களைப் பாதுகாப்பதற்காக ரப்பரை பயன்படுத்தியிருக்கிறார்கள். எப்படி? ரப்பர் பாலை ஒரு பாத்திரத்தில் சேகரிப்பார்கள். அதில் கால்களை நனைத்து, லேசாக சூடேற்றி உலரச் செய்வார்கள். காலோடு ஒட்டியிருக்கும் ரப்பர்தான் அவர்களின் காலணி! ரப்பர் கிழிந்து விட்டாலோ, தேய்ந்து போனாலோ என்ன செய்வார்கள்? மறுபடியும் ரப்பர் பாலில் காலை நனைப்பார்கள்!

வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது ஐரோப்பியர்கள்  ரப்பரை அறிந்து கொண்டார்கள். 1700களில் ஜோசப் ப்ரீஸ்ட்லி என்ற ஆங்கிலேயர், பென்சில் எழுத்துகளை அழிக்க ரப்பரைப் பயன்படுத்தினார். இதனால் ரப்பர் ‘காரீய தின்னி’ என்றழைக்கப்பட்டது. இதுவே பின்னர் ‘ரப்பர்’ என்ற பெயரைப் பெற்றது. வெய்ட் வெப்ஸ்டர் என்ற நியூயார்க் காரர், ரப்பர் மிகவும் பயனுள்ள பொருள் என்று கண்டுகொண்டார். அதனால் 1832ல் ரப்பரை ஷூ ஸோல்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை பெற்றார்.  வெப்ஸ்டரின் ரப்பர் ஸோல் ஷூ என்பது மிக நல்ல ஐடியா. ஆனால், அந்தக் காலகட்டத்தில் அது பெரிய முன்னேற்றத்தை அடையவில்லை. 1844ல் சார்லஸ் குட்இயர் வல்கனைசேஷன் முறைக்குக் காப்புரிமை பதிவு செய்த பிறகே, ரப்பரை ஷூக்களிலும் உடைகளிலும் அதிக அளவில் பயன்படுத்த முடிந்தது.

எரிமலை பொங்கினால் உலகின் மற்ற பகுதிகளும் பாதிக்கப்படுமா?
- அ.கலா ராணி,
10ம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.

நிச்சயமாக... எங்கோ இருக்கும் ஒரு எரிமலை பொங்கினால் கூட, முழு பூமியும் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். உலகத்தின் வெப்பநிலையையே தலைகீழாக மாற்றியமைக்கும் சக்தி எரிமலைக்கு உண்டு! கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் ஐந்து எரிமலைகள் ஒரே நேரத்தில் வெடித்து குழம்பையும் புகையையும் உமிழ்ந்தபோது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பகலே இருள் போல இருந்தது.