2016ல் கலக்கப் போகும் டி.விக்கள்!



பெரிய டி.வி நிறுவனங்களைப் பொறுத்தவரை புதிது புதிதாய் கண்டு பிடிப்புகளை உருவாக்கி, அவற்றின் மூலம் மக்களைக் கவர வேண்டும். பழைய டி.வி.யை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் தூக்கிப் போட்டுவிட்டு புதிது வாங்க வைக்க வேண்டும். வீட்டுக்குள் ஒரு திரைப்பட அரங்கு உணர்வைத் தருவதற்குத்தான் அத்தனை நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. கடந்த 2015ம் ஆண்டில் அல்ட்ரா ஹெச்.டி. தொழில்நுட்பம் புதிதாக வந்து டி.வி. உலகையே மாற்றியது. பல நிறுவனங்களும் புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்தன. இந்த வகையில் 2016ல் கலக்கப்போகும் டி.விக்கள் என்னவெனப் பார்ப்போமா?

* சோனி HDR

கம்பாட்டிபிள் டி.வி இந்த வருட ஆரம்பத்திலேயே இந்த டி.விக்களை மக்களிடம் சோனி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக மூன்று மாடல்கள் தயாராகியுள்ளன. அவை:

1. High-end Sony XBR 940D
2. சிறிய XBR X 930 D
3. XBR X 850 D சீரிஸ்...

இவற்றில் சோனி நிறுவனம்,‘ட்ரைலூமினஸ்’ டிஸ்ப்ளே டெக்னாலஜியைப் பயன்படுத்தப்போகிறது. 4K ப்ராசஸர் X1 சிலிகானைப் பயன்படுத்தி இதனைக் கவர்ச்சியாக்கியுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை ஏற்கும் ஸ்மார்ட் டி.வியும் கூட!

* எல்.ஜி OLED

இந்த நிறுவனம் தனது OLED வரிசையில் நான்கு புதிய மாடல்களை அறிமுகம் செய்யப் போகிறது. இதில் C6 என்ற மாடல், கர்வ்டு டிஸ்ப்ளே எனும் வளைந்த வடிவ ஸ்கிரீன் கொண்டது. G6 மற்றும் E6 மாடல்கள், ஒரு உயர்தரக் கண்ணாடியில் நம் முகம் பார்ப்பது போன்ற தரத்தில் காட்சிகளைத் தரும் ஃபிளாட் ஸ்கிரீன் கொண்டவை. அதோடு டால்பிவிஷன் HDR டெக்னாலஜியும் இணைகிறது. அதோடு எல்.ஜி.யின் பிரமாண்ட படைப்பான 98 அங்குல திரை கொண்ட 8K டி.வி.யும் இந்த ஆண்டு ரிலீஸ்.
 
* பானசானிக் 2016

DX 900 டி.வி எல்.சி.டி. திரையே தரமானது என பழையபடி தன் வேரைத் தேடிப் போகிறது பானசானிக் நிறுவனம். அதற்காக புது டெக்னாலஜி இல்லை என அர்த்தம் இல்லை. ஹெச்.டி என்றாலே தெளிவான காட்சிதான். அதையும் தாண்டியது Ultra HD. அதையும் தாண்டிய நியூ அல்ட்ரா HD ப்ரீமியம் பேட்ஜ் என்ற தொழில்நுட்பத்துடன் இந்த மாடல் டி.வி மார்க்கெட்டில் இறங்குகிறது. பானசானிக் டி.வி.யின் புது மாடல்களில் ‘ஹனிகோம்ப்’ எனப்படும் தேன்கூடு டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. எனவே திரையின் எந்த மூலையிலும் காட்சிகள் இருளாகத் தெரியாது. கூடுதல் தெளிவுடன் துல்லியமான காட்சிகளைக் கண்டு களிக்கலாம்!

* சாம்சங் வட்ட டி.விக்கள்

KS 9500 SUHD எனும் மாடல் நம்பருடன் வரவிருக்கும் இந்த சாம்சங் டி.வி தனது பிரத்யேக 10-பிட் குவாண்டம் டாட் நானோ க்ரிஸ்டல் வடிகட்டியைப் பயன்படுத்தி காட்சியில் உள்ள தெளிவின்மையை நீக்கும். அதிகபட்சமாக 100 கோடி வண்ணக்கலவைகளை அசல் நிறத்தோடு காட்டும் வல்லமை பெற்றது இது. திரையில் துல்லியம் பார்ப்பவர்களை அசத்தும்! உள்ளதை உள்ளபடி அசத்தலாக வெளிப்படுத்தும் இந்த வளைந்த திரை டி.வி, ஆயிரம் நிட்ஸ் வரை ஒளிர்ந்து பிரகாசமான காட்சிகளைக் காட்டக் கூடியது!

* பிலிப்ஸ் ஆம்பிலைட்ஸ் தொழில்நுட்பம்


இந்தப் புதிய தொழில்நுட்பம் பற்றி பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்தபோது, ‘‘இது ஏதோ ஜிகினா வேலை’’ என கமென்ட் அடித்தவர்கள் உண்டு. ஆனால் ஒரு அழகிய சுவரோவியம் போல காட்சிகளைத் தருவதற்கு இந்தத் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. இந்த நவீனத்துடன் பிலிப்ஸ் அறிமுகம் செய்யும் ‘8901 ஆம்பி லக்ஸ்’ எனும் மாடல் இந்த ஆண்டின் மிக முக்கியமான புதுவரவு. ஒரு பிரேம் போட்ட ஓவியத்தைவிட மெல்லிய டி.வியாக இது இருக்கும். இதில் அமேசான் இன்ஸ்டன்ட் வீடியோ மற்றும் ஆண்ட்ராய்ட் டி.வி போன்ற வசதிகளும் இடம் பெற்றிருக்கும்.

ஆக, மொபைல் போன்களை மாற்றுவது போல், டி.விக்களையும் புதியது எது எனத் தேடித் தேடி மாற்றும் டெக் பிரியர்களுக்கு இந்த வருடம் வேட்டைதான்!

- ராஜிராதா, பெங்களூரு.