செல்ஃபி வித் சயின்ஸ்



மே மாதம் பூமிக்குக் கீழே குளிர் அடிக்குமா?

இதோ கொடூரமான கோடைக்காலம் பிறக்கப் போகிறது. வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி தகிக்கும். இப்போதே, ஊட்டி, கொடைக்கானல் என்று உயரமான பகுதிக்குப் போய் கொஞ்சநாள் ‘டேரா’ போட்டுவிட்டு வரலாம் என்று நீங்கள் ஒரு திட்டம் வைத்திருக்கலாம். கிராமத்துப் பக்கம் போய் ஊருணி, கண்மாய், குளங்களில் ஊறிவிட்டு வரலாம் என்று கூட நீங்கள் நினைக்கலாம்.

குளிர்ப் பிரதேச நாடான இங்கிலாந்தில் இருந்து வந்து நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், இந்தியாவில் பெரிதும் மிரண்டது கொளுத்தும் வெயிலைப் பார்த்துத்தான்! அதிலும் கோடையில் நம் நாட்டில் கொதிக்கும் வெப்பத்தையும் அடிக்கும் அனலையும் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தார்கள். அதனால்தான் உயரமான குளிர் மலைகளைத் தேடி ஓடினார்கள். ஊட்டியில் ராணுவ முகாமும் பள்ளியும் ஏற்படுத்தப்பட்டது அவர்களின் வசதிக்காகத்தான். தமிழ்நாட்டில் எங்கு வேலை பார்த்தாலும், பிரிட்டிஷ் உயர் அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை ஊட்டியில் வைத்திருந்தார்கள்.

குறைவான வெப்பநிலையில், மிதமான காலநிலையில், இதமான குளிரில் வசிக்க வேண்டும் என்றுதான் மலைப் பிரதேசங்களைத் தேடி ஆங்கிலேயர்கள் போனார்கள். தரையிலிருந்து மேலே செல்லச் செல்ல வெப்ப நிலை குறைந்துகொண்டே செல்லும் என்பதுதான் அறிவியல் தத்துவம். மலைவாழிடங்கள் கடல் மட்டத்தில் இருந்து பல அடி உயரத்தில் இருப்பதால், அங்கு எப்போதும் வெப்பநிலை குறைவாகவே இருக்கும்.

‘பூமிக்கு மேலே மலை உச்சிக்குப் போனவர்கள், பூமிக்குக் கீழே பள்ளம் தோண்டி சுரங்கம் அமைத்து வசித்திருக்கக்கூடாதா?’ என்று நீங்கள் கேட்கலாம்.முயற்சி செய்யாமலா இருந்திருப்பார்கள்!? நூறாண்டுகளுக்கு முன்னரே இது போன்ற முயற்சியெல்லாம் செய்து பார்த்து விட்டார்கள். பூமிக்குக் கீழே பள்ளம் தோண்டி, சுரங்கம் அமைத்து வீடு கட்டி வாழலாம். ஆனால், பூமிக்குக் கீழே நிலவும் பருவ காலம் விசித்திரமாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் இருக்கிறது என்பதுதான் பிரச்னை.

நீண்ட கால வானிலையின் சராசரியை அடிப்படையாக வைத்து, கோடைக்காலம், குளிர்காலம், மழைக்காலம், வசந்தகாலம் என்று வானியல் அறிஞர்கள் காலநிலையை நான்காக பிரித்திருக்கிறார்கள். தமிழ் இலக்கியங்கள் மிக அழகாக இந்தக் காலநிலையை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்துக் கூறுகின்றன. இளவேனில்காலம், முதுவேனில்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், கார்காலம், கோடைக்காலம் என்பது தமிழ் இலக்கியப் பாகுபாடு.

‘வளர்பிறை என்பதும், தேய்பிறை என்பதும் நிலவுக்குக் கிடையாது’ என்பது இடைக்காலத்தில் வெளியான ஓர் அழகிய திரைப்படப் பாடல். அதுபோல நாம் சொல்கிற பருவகாலங்கள் எல்லாம் பூமிக்கு மேல் பகுதியில்தான். பூமிக்கு இரண்டு அடி கீழே போய்விட்டால் அங்கு இதுபோன்ற பருவ காலங்கள் எதுவும் இருக்காது. நமக்குக் கோடை கொளுத்துகிறபோது, பூமிக்குக் கீழே பனிக்காலத்தின் மிச்ச சொச்சத்தின் சுவடுகள் இருந்துகொண்டே இருக்கும்.

கடுமையான குளிரில் நீங்கள் நடுங்கிக் கொண்டிருக்கும்போது பூமிக்குக் கீழே அஞ்சி நடுங்கச் செய்கிற அனல் அடிக்கும். இந்த மாற்றங்கள் தரையிலிருந்து இரண்டு அடி ஆழத்திலேயே தொடங்கி விடுகின்றன என்பதுதான் ஆச்சரியம். இதற்குக் காரணம், தரை ஓர் அரிதிற் கடத்தியாக இருப்பதுதான். அதாவது, தரையானது வெப்பத்தை எளிதில் கடத்தும் திறன் பெற்றிருப்பதில்லை. இந்த விஷயத்தில் பூமியின் செயல்பாடு ரொம்பவே ஸ்லோ.

பூமி சூரியனைச் சுற்றி வரும் சுழற்சிதான் பூமியின் காலநிலை மாற்றத்திற்குக் காரணம். ஆனால், இந்தக் காலநிலை மாற்றத்தை பூமி உடனடியாக உள்பகுதிக்கு எடுத்துச் செல்வதில்லை. ஓர் உதாரணம் சொன்னால் இந்த விஷயம் உங்களுக்கு எளிமையாகப் புரிந்துவிடும். பூமிக்கு மேல்பகுதியில் கடுமையான குளிர் நிலவும் நாட்களில், பூமிக்குக் கீழே இரண்டு அடி ஆழத்தில் பதிக்கப்பட்டு தண்ணீர் எடுத்துச் செல்லும் கார்ப்பரேஷன் குழாய்களில் தண்ணீர் உறைவதில்லை. காரணம், பூமிக்கு இரண்டு அடி கீழே இன்னும் வெப்பமாகவே இருக்கிறது. பூமியின் மேல் பகுதியில் நிலவும் குளிர் படிப்படியாகக் கீழே செல்வதற்கு பல நாட்கள் பிடிக்கிறது.

பூமியின் மேல்பகுதியில் நிலவும் காலநிலை பூமியின் கீழ்ப்பகுதிக்குச் செல்ல எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்கிறது என்ற ஆராய்ச்சி பல வருடங்களுக்கு முன்பே ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்டது. பூமியின் மேல் ஒரு குறிப்பிட்ட நாளில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகபட்ச வெப்பநிலை நிலவுவதாக வைத்துக் கொள்வோம். இதே வெப்பநிலை தரைப்பகுதியில் மூன்று அடி ஆழத்திற்குக் கீழே செல்ல 76 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இதேபோல தரைக்கு மேல் பகுதி யில் நிலவும் அதிகபட்ச குளிர் மூன்றடி ஆழத்திற்குச் செல்ல 108 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

ஆழம் அதிகரிக்க அதிகரிக்க... இந்த வெப்பநிலை மாற்றத்துக்கான காலமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஆழத்தில் பூமியின் வெப்பநிலை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நின்றுபோய் விடுகிறது. இதற்கும் ஒரு சோதனை நடத்தினார்கள். பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் 28 அடி ஆழத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெப்பமானியை வைத்தார்கள். இன்று வரை இந்த வெப்பநிலைமானி 11.7 டிகிரி செல்சியஸ் என்ற ஒரே அளவைத்தான் காட்டிக் கொண்டிருக்கிறது.
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், ‘‘பூமிக்குக் கீழே ஆராய்ச்சி செய்ய புறப்படுபவர்கள், இது போன்ற காலநிலை மாறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்!’’

(அடுத்து என்ன?)