எறும்பிலும் உண்டு தற்கொலைப் படை!



பூச்சிப் பூக்கள் 10

ஆதிகாலத்தில் புத்தம் புதிதாய் இப்புவியில் தோன்றிய எறும்புகள் எல்லாம், வேஸ்ப் எனப்படும் ஒருவிதமான குளவியிலிருந்து கிளைத்தவைதான். அப்போது இந்த எறும்புகளுக்குப் போதுமான இரை வளமோ, இனப்பெருக்க வளமோ இருக்கவில்லை. ஹைமெனோப்டெரா (Hymenoptera) என்னும் வகைப்பாட்டின் கீழ் குளவிகளின் சகோதரக் குடும்பமாய் உதித்தவைதான் இந்த எறும்புகள்!

உயிரியல் ஆராய்ச்சியாளர்களுக்கு  எறும்பு போன்ற சிறிய ஜீவன்களை வகைப்படுத்துவதில் ஏராளமான சிரமங்கள் இருக்கின்றன. இத்தகைய நுணுக்கமான ஆராய்ச்சிப் போராட்டத்தில்தான் இருவிதமான குழுக்கள் நெறிப்படுத்தப்படுகின்றன. அதாவது இந்த எறும்புகளில் இன்று வரை 12 ஆயிரம் ரகங்கள் ஃபார்மிஸிடே (Formicidae) என்னும் குடும்பத்தின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. எனினும் இன்னும் அடையாளம் காணப்படாமல் மேலும் 10 ஆயிரம் வகை எறும்புகள் உலகத்தில் ஜீவிப்பதாக நம்பப்படுகிறது. இந்த இரண்டாவது குழுவில் உள்ள எறும்பினங்கள் காலப்போக்கில் அவ்வப்போது கண்டறியப்படும்போது, உயிரின வகைப்பாட்டில் சேர்க்கப்படும். எது எப்படியோ... இப்போது இருக்கின்ற எறும்புகளின் இம்சையே ஏராளம்.

இந்த எறும்புகள் கறுப்பு, சிவப்பு, பழுப்பு, மஞ்சள் போன்ற பல்வேறு நிறங்களில் இருக்கின்றன. பச்சை நிறம் கொண்ட இங்கிலீஷ் எறும்புகளும் உண்டு. இவற்றின் உடம்பில் தலை, மார்பு, வயிறு என மூன்று செக்மென்ட்கள். நடப்பதற்கு ஏதுவாய் 6 கால்கள். இரை கவர உறுதியுடன் கூடிய வலுவான தாடைகள். இவை 1.5 மி.மீ  5 மி.மீ நீளத்தில் இருக்கும். இப்படி சின்னஞ் சிறிதானாலும் நடப்பதில் தெரியும் ஒலிம்பிக் வேகம்!

பொதுவாக நாம் தினசரி பார்க்கும் எறும்புகளில் நான்கு வகைகள் இருக்கின்றன. இதில் சிவப்பு நிறத்தில் இருக்கும் சுள்ளெறும்பு கடித்தால் வலிக்கும். மற்றொன்று, கருப்பு நிற சாமி எறும்பு. இதை பிள்ளையார் எறும்பு என்றும் சொல்வார்கள். இவை கடிப்பதில்லை. ஆயினும் குறுகுறுவென்று வேக நடை நடக்கும். சமயத்தில் கைகால்களில் ஏறி சிலிர்ப்புகளை உருவாக்கும். இவை கடிக்காத நல்லெறும்பு!

கரிய நிறத்திலும் சற்றே பெரிய உருவத்திலும் இருக்கும் எறும்பிற்கு கட்டெறும்பு என்று பெயர். பாவம், இவ்வெறும்பு உருவத்தில் பெரியதானாலும் கடிக்கும் வல்லமை கம்மி! மற்றொரு இனமான சுறுக்கெறும்பு மிகவும் தெனாவட்டான பார்ட்டி. இதன் உடம்பின் நடுப்பகுதி மட்டும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். ஏனைய பகுதிகள் எல்லாம் கரிய நிறத்திலேயே இருக்கும். இந்த எறும்பு நம்மைப் பாசத்தோடு கடித்துவிடுமாயின், அதன் வலி தேள் கொட்டியதற்கு சமமாய் இருக்கும்!

இதுபோக இன்னும் எத்தனையோ எறும்பினங்கள் உலகெங்கிலும் வாழ்கின்றன. இதில் அமெரிக்கப் பிரஜையான நெருப்பெறும்புகள் (Fire ants), இரண்டடி உயரத்திற்கு கரையான் புற்றுபோல் புற்றமைத்து மாளிகை வாசம் புரிகின்றன. இதன் கடிக்கு தேள் கடியே தேவலாம் எனலாம். சமயத்தில் இந்த நெருப்பெறும்புகள் ஒரு தீவிரவாதக் குழு போல் பேரணியாய்த் திரண்டு படையெடுத்து வந்து வளர்ப்பு கால்நடைகளைக் கடித்தே கொன்று விடுவதுண்டு.

ஒரு வகையான மலேசியன் எறும்பிற்கு, பெரிய அளவில் தாடைச் சுரப்பி இருக்கிறது. இதனுள் எதிரிகளைக் கொல்வதற்குப் போதுமான விஷம் எப்போதும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். எனினும் இவை அவ்வளவு சுலபத்தில் இந்த விஷத்தை வீணடிக்க விரும்புவதில்லை. எனவே இவ்வெறும்புகள் எதிரியிடமிருந்து தம்மையும் தம் புற்றுவாழ் சகாக்களையும் காப்பாற்ற போராடும். இதன் எல்லாப் பிரயத்தனங்களும் வீணாகிவிட்ட பின்பே வேறு வழியில்லாமல் இச்சுரப்பியை தம் கட்டி வெடிக்கச் செய்யும்.

தெளிக்கப்பட்ட விஷத்தை முகத்தில் வாங்கிய எதிரிகள் எல்லாம் செயலிழந்து போகும். ஆயினும் இதில் ஒரு துயரம் கலந்திருக்கிறது. ஆம், சுரப்பி வெடித்ததால் எறும்பு சுகவீனப்பட்டு சில நிமிடங்களில் இறந்து போகும். போகும் தருணத்தில்கூட தன் கூட்டத்தைக் காப்பாற்றிய திருப்தியுடன் போகும் இந்த எறும்புகளின் காதில் விழும், ‘மலேஷியன் எறும்புகள் வாழ்க’ எனும் கோஷம்!
ஆப்ரிக்காவில் வாழும் பட்டாளத்து எறும்புகளுக்கு காலில் சக்கரம் இருக்கிறது போலும்!

ஒரு இடத்தில் இருக்கவே பிடிக்காது. மாதம் ஒரு ஜாகைதான். இவ்வெறும்புகள் நிலத்தில் கிடக்கும் காய்ந்த இலைகளுக்கு அடியில் ஒரு சுரங்கம் அமைத்து அதன் வழியே அடுத்த ஸ்தலத்திற்குப் புறப்படும். போகும்போது படைத் தளபதிகள் படு எச்சரிக்கையுடன் படையை நடத்திச் செல்வார்களாம். இவ்வெறும்புகளின் நடையிலும் கூட ஒரு ஒழுங்கமைப்பு இருப்பதுண்டு. ராணுவ எறும்புகள் இவை.

பிரேசில் எறும்புகளில் வேலைக்கார எறும்புகளுக்கு கடமையுணர்ச்சி அதிகம். இவற்றின் புற்றின் முன்புற நுழைவாயிலின் முன்னால் இவை ஒரு கூட்டமாக எப்போதும் காவலில் இருக்கும். எந்தவொரு சிறிய ஜீவராசியையும் வாயிலுக்குள் நுழைய விடாமல் துரத்தியடிக்கும். சமயத்தில் சமாளிக்க முடியாத அளவிலான பெரிய எதிரி வந்துவிட்டால்,  சட்டென்று நுழைவாயிலை அடையாளம் தெரியாத வகையில் மூடிவிட்டு எதிரியை எதிர்கொள்ளும். இப்போராட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தாலும் கூட தற்கொலைப் படையாய் மாறி தம் புற்று எறும்புகளைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில் ஒட்டுமொத்தக் குழுவும் போராடிச் சாகும்.

வெப்ப நாடுகளில் வாழும் கார்ப்பெண்டர் எறும்புகளுக்கு மரம் என்றால் ஐஸ்கிரீம் மாதிரி! மரத்தை அதிகம் இவை உட்கொள்வதில்லை என்றாலும், மரச்சாமான்களுக்கு பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. பொதுவாக இந்த எறும்புகள் தம் குணாதிசயங்களுக்கு ஏற்ப தமது இருப்பிடத்தை மக்கள் குடியிருப்புகளில் உள்ள மரச்சாமான்கள் மற்றும் இதர மரங்களில் சில தச்சு வேலைகளைச் செய்து அமைத்துக் கொள்கின்றன. எல்லாவித சௌகரியங்களும் அருகில் கிடைக்கக்கூடிய வுட் ஹவுஸ் அது!

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்