ரீவைண்டு... முதல் உலகப் போர்!



முதல் உலகப் போரின் நூற்றாண்டு தொடக்கத்தில் நிற்கும் இத்தருணத்தில் இந்தப் போரில் இந்தியாவின் பங்கு குறித்து தெரிந்து கொள்வது அவசியம். அந்தப் போர்க்கால நினைவுகள், துளித் துளியாய்... 

* 1914 ஜூன் மாதம் 28ம் நாள் ஆஸ்திரிய இளவரசர் ஃபிரான்சிஸ் ஃபொர்டினாண்ட், செர்பிய தேசியவாதி ஒருவரால் கொல்லப்பட்டார்.

* செர்பியா மீது போர் தொடுப்பதாக 1914 ஜூலை 28ம் தேதி ஆஸ்திரியா  ஹங்கேரி பிரகடனம் செய்தன. செர்பியா உடனே ரஷ்யாவிடம் உதவி கேட்டது. முன்னதாக ரஷ்யாவை எதிர்க்க ஆஸ்திரியா  ஹங்கேரிக்கு உதவுவதற்கு ஒப்புக் கொண்டிருந்த ஜெர்மனி, போர்ப் பிரகடனம் செய்தது. ரஷ்யாவின் கூட்டு நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போரில் நுழைந்தன. இப்படி முதலாம் உலகப்போர் தொடங்கியது.

* நேச நாட்டு சக்திகளான பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, மைய சக்திகளான ஜெர்மனி, ஆஸ்திரியா  ஹங்கேரி பேரரசுகள், ஒட்டோமான் பேரரசு உள்பட இந்தப் போரில் 30க்கும் அதிகமான நாடுகள் ஈடுபட்டன.

* 20 ஆயிரம் கோடி டாலர்களை இப்போரில் ஈடுபட்ட நாடுகள் செலவிட்டன. 30 நாடுகளைச் சேர்ந்த ஆறரை கோடி வீரர்கள் இப்போரில் ஈடுபட்டனர். இதில் ஏறத்தாழ ஒரு கோடி என்கிற அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டது. நேச நாட்டு சக்திகள் தரப்பில் 60 லட்சம் வீரர்களும் மைய சக்திகள் தரப்பில் 40 லட்சம் வீரர்களும் இறந்தனர். முதல் உலகப் போரில் ஜெர்மனிக்கும் ரஷ்யாவிற்கும்தான் அதிக இழப்பு. ஜெர்மனி 19 லட்சம் உயிர்களையும், ரஷ்யா 17 லட்சம் உயிர்களையும் இழந்தது.

* முதல் உலகப் போர்க் காலத்தில் இந்தியா பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. போரில் பிரிட்டன் கலந்துகொண்டதால், இந்தியாவில் இருந்த வீரர்களுக்கும் போர் புரிய அழைப்பு வந்தது. போரின் முடிவில் இந்தியர்களின் தீரச்செயல்களைப் பார்த்து சுதந்திரம் அளிக்கக்  கூடிய  வாய்ப்பு இருந்ததால், இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களும் பிரிட்டனை ஆதரித்தனர்.

* இந்தப் போரில் 11 லட்சம் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 ஆயிரம் வீரர்கள் நாடு திரும்பவே இல்லை.

* பெல்ஜியத்தில் மேற்கு ஃபிளான்டர்ஸில் நடந்த முதலாம் இப்ரஸ் போரில் இந்தியர்கள் போரிட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர். 1915 இறுதியில் இவர்கள் முன்னணியிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டனர்.

* பிரான்சில் வெர்டன், மார்ன், ஸோம், பெல்ஜியத்தில் இப்ரஸ், ஆப்ரிக்காவில் டாஸ்கா, கிளிமஞ்சரோ, மத்திய கிழக்கில் கலிபலீ (துருக்கி), டெஸிஃபோன் (இராக்), சாரி பேர் ஆகிய இடங்களில் நடந்த போர்களில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டு போரிட்டனர்.

* விக்டோரியா கிராஸ் எனப்படும் வீரச் செயலுக்கான 11 விருதுகள் உட்பட 9,200 மெடல்கள் இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்டன. சிப்பாய் குதாதத் கான் முதல் விக்டோரியா விருதைப் பெற்றார்.
* 1914  1916ல் இந்திய போர் வீரர்களோடு 1,72,815 மிருகங்கள் மற்றும் 36,91,836 டன் பொருட்கள் ஐரோப்பாவிற்கு சென்றன.

* சுமார் 53,486 இந்திய வீரர்கள் இறந்தனர். 64,350 பேர் காயமடைந்தனர். 3,762 பேர் காணாமல் போயினர் அல்லது சிறை பிடிக்கப்பட்டனர் என்கின்றன போர்க்காலத் தகவல்கள்.

* அதிகபட்சமாக மெஸபடோமியாவில் 30 ஆயிரம் இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். 32,000 பேர் காயமடைந்தனர்.

* இந்தியா முதலாம் உலகப் போருக்காக 8 கோடி மதிப்புள்ள பண்டங்களையும் உபகரணங்களையும் வழங்கியது. 1919  1920 வரை நேரிடையான பங்களிப்பாக 14 கோடியே 62 லட்சம் பவுண்டை இந்தியா வழங்கியது.

* இப்போரில் இரண்டு லட்சம் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 11 சதவீதம் பேர் நேரடியாக போர்க்களத்திலும் மற்றவர்கள் சாலைகள், சாக்கடைகள் அமைத்தல் மற்றும் பொருள்களை ஏற்றி இறக்குதல் போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

* வெட்டப்பட்ட அகழிகளில் பதுங்கியிருந்து படைகள் ஒன்றையொன்று தாக்குதல், எதிர்த்துத் தாக்குதல், தற்காத்துக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செயல் படுத்தும் போர்முறை, அகழிச் சண்டையாகும். முதல் உலகப்போருக்கு முன்பு இம்முறை பல போர்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் முதல் உலகப் போரின்போதுதான் முழுமையான வளர்ச்சி பெற்றது.

* முதல் உலகப் போரின்போது 1915 ஏப்ரலில், இரண்டாவது இப்ரஸ் போரில் (பெல்ஜியம்) ஜெர்மானியர்கள் முதன்முறையாக விஷவாயுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

* முதல் உலகப் போரின்போது முதன்முதலில் ஆகாய விமானங்கள் போர்க்களத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டு, பிறகு போரிலும் ஈடுபடுத்தப்பட்டன. இதற்காகவே   கிக்ஷிஸிளி   என்ற பிரிட்டன் நிறுவனம்   கிக்ஷிஸிளி   504 என்ற விமானங்களை உருவாக்கியது.

* முதலாம் உலகப் போரில் பிரான்சில் உள்ள ஸோம் ஆற்றின் வடக்குப் பகுதியில் 1916 செப்டம்பர் மாதத்தில் ஸோம் போர் நடந்தது. இதில் பிரிட்டனால் உருவாக்கப்பட்ட பீரங்கிகள் தாக்குதலை நடத்தின.

* இங்கிலாந்திலும் பிரான்சிலும் போரில் ஈடுபட்ட இந்திய போர் வீரர்கள் ஆயிரக்கணக்கான கடிதங்களை இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு எழுதினர். அப்பொழுது எழுத்தறிவு அதிகம் இல்லாததால் இவர்களுக்கு    Young Men's Christian Association (YMCA)   என்கிற அமைப்பைச் சேர்ந்த தொண்டர்களே கடிதங்கள் எழுத உதவிர்.

* முதலாம் உலகப்போரில் இந்தியாவைச் சேர்ந்த பாட்டியாலா மஹாராஜா பூபேந்தர் சிங், ரிசால்தர் மேஜர் முகமது அக்பர் அலிகான், சாட்டா சிங், கோபிந் சிங், ஜமேதார் மிர் தஸ்த், லெப்டினன்ட் இந்த்ர லால் ராய் ஆகியோர் சிறப்பாகப் பணிபுரிந்த ராணுவ அதிகாரிகள் ஆவர்.

* முதல் உலகப் போரின்போது ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பிரிட்டனின் அரசராகவும் (19101936), உட்ரோ வில்சன் அமெரிக்க ஜனாதிபதியாகவும் (1913  1921), ரஷ்யாவில் இரண்டாம் நிக்கோலஸ் மன்னராகவும் (ஜார்), பிரான்சின் பிரதமராக ஜார்ஜ் கிளமன்ஸோவும் (1917  1920), இரண்டாம் வில்லியம் ஜெர்மனியின் பேரரசராகவும் (1888  1918) லாயிட் ஜார்ஜ் டேவிட் பிரிட்டனின் பிரதமராகவும் (1916  1922) இருந்தனர்.

* இரண்டாம் மார்ன் போரில் ஜெர்மனியின் தாக்குதல்கள் நேச நாடுகளின் உறுதியான முன்னேற்றத்தால் தடுக்கப்பட்டன. பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் பெருமளவிலான பகுதிகள் 1918 அக்டோபரில் நேச நாடுகளால் மீட்கப்பட்டிருந்தன. இவற்றின் விளைவாக போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் உருவானது.

* போருக்குப் பின் 1920ல்   League of Nations   என்ற சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டது.

* போரின் விளைவாக ஆண்கள் குறைந்ததால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு பல வேலைவாய்ப்புகள் கிடைத்தன.

* ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா  ஹங்கேரி, ஒட்டோமான் பேரரசுகள் முடிவுக்கு வந்தன. சர்வதேச எல்லைகள் மறுநிர்ணயம் செய்யப்பட்டன.

* 1918ல் ரஷ்யப் புரட்சி நடந்து, லெனின் மற்றும் போல்ஷ்விக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

* ஐரோப்பாவின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சியிலிருந்து ஐரோப்பாவால் மீள முடியவில்லை. இதனால் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டது.

 க.ரவீந்திரன், ஈரோடு.