உலகின் மெகா குகை!



உலகிலேயே மிகப் பெரிய குகை எது தெரியுமா? வியட்நாமில் உள்ள சான் டூங் (Son Doong Cave) குகைதான் அது. சுமார் 8 கிலோ மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட இந்தக் குகையின் உள்ளே ஒரு காடும், ஆறும் உள்ளன. இதன் உள்ளே ஒரு 40 மாடிக் கட்டிடத்தை வைத்து விடலாம் என்றால் இதன் பிரமாண்டத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், 1991 வரை இந்தக் குகை கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதன் வாயிலில் இருந்த ‘மெகா’ பள்ளத்தைக் கண்டு யாரும் உள்ளே நுழையத் துணியவில்லை. 2009ல்தான் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் இதன் உள்ளே இறங்கினார்கள். மனிதன் இறங்க அஞ்சிய இந்த நுழைவாயில், 80 மீட்டர் ஆழம் கொண்டதாகும். பாதுகாப்பாக கயிற்றைக் கட்டிக் கொண்டுதான் இதற்குள் இறங்க வேண்டும்.

லாவோஸ்வியட்நாம் எல்லையில் அமைந்துள்ள இந்தக் குகை, 150 தனித்தனி குகைகளால் ஆன ஒரு பிரமாண்ட அமைப்பாகும். ‘சான் டூங்’ என்றால், ‘மலை ஆறு’ என்று பொருள். சுமார் 50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஆறு ஓடியதில், இந்தக் குகை உருவாகியுள்ளது. மலையின் சுண்ணாம்புப் பாறைகளை இயற்கைச் சிற்பியான ஆறு அரித்து, உள்ளே கண் கவரும் பிரமாண்ட சிற்பங்களை உருவாக்கியுள்ளது.

  ‘Dog’s Paw’   என்ற பாறையைப் பார்க்க நாயின் பாதம் போலவே உள்ளது. ‘குகை முத்துக்கள்’ என்பது இயற்கையின் மற்றொரு அற்புத படைப்பாகும். பல நூற்றாண்டுகளாக மணல் துகள்களின் மேல் ஆற்று நீர் சொட்டு சொட்டாக வடிந்து, இந்த அழகிய படிமானங்களை உருவாக்கியுள்ளது.

குகையின் கூரை ஒரு பகுதியில் உடைந்து, உள்ளே ஒரு மழைக் காடே உருவாகியுள்ளது. இந்தக் காட்டை ‘கார்டன் ஆஃப் ஈடம்’   (Garden of Edam)   என்று அழைக்கின்றனர். அடர்ந்த வனம் உருவாகி, அதில் பறக்கும் நரி, இருவாச்சி, குரங்கு, பூச்சி வகைகள் போன்ற பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன.

ஆக்ஸாலிஸ் என்ற டூர் நிறுவனம், இந்த குகைக்குள் மக்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது. மிகக் குறைந்த அளவு பயணிகளை மட்டுமே அனுமதிக்கின்றனர். இந்த சுற்றுலா சுவாரஸ்யமும் திகிலும் கலந்த சுகமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள் தேடல் மீது காதல் உள்ளவர்கள்!

 பி.அஹமது தஸ்மிலா, கீழக்கரை.