டியர் டாக்டர்
‘குங்குமம் டாக்டர்’ இதழை, படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. உள்ளே ஒவ்வொரு பகுதியும் விரிவாகவும் எளிமையாகவும் இருக்கிறது. மனம், உடல்நலம், குழந்தை நலம், உணவு, ஊட்டச்சத்து, அழகு என பல வகை தலைப்புகளை உள்ளடக்கி உபயோகமான கட்டுரைகளைக் கொடுக்கிறீர்கள். முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை படிக்க வேண்டிய புத்தகம். ‘வரும் முன் காப்போம்’ என்பதுபோல நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலம். அதற்குத் தகுந்த இதழ் இது என்றே சொல்லலாம். அருமை! அருமை!! வாழ்த்துகள்! - டாக்டர் கமலா செல்வராஜ், சென்னை-34.
ஜாலியாக பேசிக்கொண்டே வாக்கிங் செய்பவள் நான். டாக்டர் அரவிந்த் கூறியுள்ளபடி, பேசிக்கொண்டே நடப்பது தவறு என்பதையும், அதிகாலை நடைப்பயிற்சியே மிகச்சிறந்தது என்பதையும் புரிந்து கொண்டேன். ‘உடல் உறுப்பு விற்பனை’ எனும் சிவப்புச் சந்தை பற்றிய அதிர்ச்சியான தகவல்கள், ஹேர்டை பற்றிய எச்சரிக்கைகள் என்று மக்களுக்கு தேவையான எல்லா விவரங்களும் அளித்துள்ள குங்குமம் டாக்டருக்கு நன்றி. - சி.ராஜலட்சுமி, சென்னை-33.
அட்டைப் படத்தில் தொடங்கி, அதற்குரிய ஆழமான கட்டுரை வரை குங்குமம் டாக்டர் தனித்துவத்துடன் சிறந்து விளங்குகிறது. - வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.
டாக்டர் மு.அருணாச்சலம் எழுதிய வைட்டமின்கள் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுடையவை. வைட்டமின்களுக்கான உணவுகள், வைட்டமின் குறைபாடு நோய்கள் அனைத்தையும் விரிவாக பட்டியலிட்டுக் காட்டியிருப்பது குறித்து வியந்தே போனேன். - சு.இலக்குமணசுவாமி, மதுரை-6.
பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கும் நன்னாரி சர்பத் பலன் தருகிறது என்கிற சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியனின் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. ‘காதல் செய்கிறீர்களோ இல்லையோ, நடைப்பயிற்சி செய்யுங்கள்’ என நடையின் அவசியத்தை எல்லாருக்கும் புரியும்படியாக நாசுக்காக சொல்லி இருக்கிறீர்கள். -எஸ்.துரைசிங் செல்லப்பா, உருமாண்டம்பாளையம், கோவை-2.
|