அரைகிலோ ஆரோக்கியம் என்ன விலை?
முனைவர் மு.ஸ்டாலின் நாகராஜன்
நல்ல ஆரோக்கியமும் மிகச் சிறந்த மகிழ்ச்சியும் அனைவரையும் அரவணைப்பதில்லை. ஏனெனில், இவை கடைகளில் விற்கும் பொருட்களோ அல்லது விளையாட்டு கருவிகளோ அல்ல. நீங்கள் உலகத்திலேயே முதன்மை நிலையில் உள்ள நம்பர் 1 செல்வந்தராக இருந்தால் கூட, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை விலைக்கு வாங்கவே முடியாது. மேலும் அவற்றை வைத்திருப்பவர்களிடம் கடன் கேட்டும் பெற முடியாது.
தலைச்சிறந்த ஆரோக்கியம், மட்டற்ற மகிழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள்...
நீங்கள் வாழும் தினசரி வாழ்க்கை மற்றும் வாழ நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளிலேயே இந்த ரகசியம் அடங்கி இருக்கிறது. நல்ல, சரியான உணவு, தேவையான உடற்பயிற்சி, நல்ல ஓய்வு, நிம்மதியான, அமைதியான, பக்குவப்பட்ட மனநிலை... நம் முழு வாழ்க்கையில், நாம் சிலபல நோய்களுக்கு ஆளாக நேரிடும் போது மருத்துவ விஞ்ஞானம் நம்மை காப்பாற்றி வருகிறது. அது நம் உயிர் நம்மை விட்டு போகாமல் காப்பாற்றுகிறதே தவிர, நல்ல ஆரோக்கியத்தையோ, அளவற்ற மகிழ்ச்சியையோ தருவதில்லை.
உலக சுகாதார மையம் (WHO) உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஆரோக்கியமாக மட்டுமே இருக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்கான தீவிர முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. பசிக் கொடுமை, சரியான உணவின்மை (Malnutrition) ஆகியவற்றை அறவே ஒழிப்பது, அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்வது, மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது, உடல்நலக் குறைவுகளை சிறுவயதிலேயே அகற்ற தடுப்பூசிகளை போடச் செய்வது என அனைத்தையும் முழுமூச்சாக செய்து, ஒவ்வொரு நாட்டினையும் இவற்றைச் செயல்படுத்த கட்டாயப்படுத்தி வருகிறது. இவை அனைத்தையும் நாம் கட்டுப்படுத்தி வரும் இந்த காலகட்டத்தில்தான்... மாரடைப்பு, நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், மன அழுத்தம், செரிமான மண்டலப் பிரச்னைகள் ஆகியவை நடுத்தர வர்க்கம் மற்றும் பணக்காரர்களை ஆட்டிப்படைக்கின்றன.
இவை ஆரம்பத்திலேயே ஒழிக்கப்படாவிட்டால், உலக சுகாதார விஞ்ஞானிகளின் கூற்றுப்படி 2025 முதல் 2050க்குள் 30ல் இருந்து 40 வயதுக்கு உட்பட்ட ஆசிய இளைஞர்களை - குறிப்பாக இந்திய இளைஞர்களை இதய நோய், புற்றுநோய், நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், மன அழுத்தம் உள்பட பலவிதக் கோளாறுகள் தொற்றுநோய் போல விறுவிறு என பரவி அழிக்க காத்துக் கொண்டிருக்கும். அப்படி என்றால்? இப்போது பிறந்து, வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
அணுகுண்டு Vs டென்ஷன் குண்டு!
இரண்டாம் உலகப் போரின் போது அதிபயங்கரமான நியூக்ளியர் பாம்கள், ஹிரோஷிமா, நாகசாகி என்ற அழகான ஜப்பானிய நகரங்களை துவம்சம் செய்தன. ஏறக்குறைய 6 லட்சம் மக்கள் உயிர் இழந்தார்கள். அதன் பக்கவிளைவாக மேலும் 4 லட்சம் மக்கள் படிப்படியாக ஆண்டுதோறும் இறந்து கொண்டே வந்தார்கள். இந்த அகோரச் சம்பவம் அதற்குப் பிறகு நல்ல வேளையாக நடக்கவில்லை... நடக்கவும் வேண்டாம். இப்போது சாதி, மதம், நிறம், பணம், சொத்து என்ற காரணங்களாலும், காரணங்களே இல்லாமலும், ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான மனிதர்கள் அணு அணுவாக சித்ரவதைப்பட்டு, தங்களைத் தாங்களே கொன்று கொண்டி ருக்கிறார்கள். அதுதான் மன அழுத்த வெடிகுண்டு. இது போதாது என்று உலக சுகாதார மையத்தின் கூற்றின்படி, மன அழுத்தத்தின் காரணமாக அதைச் சார்ந்த மேலும் சில நோய்களால் மேலும் பல லட்சம் மக்கள் ஆண்டு தோறும் இறந்தவண்ணம் உள்ளனர். இது 2025 முதல் 4 - 5 மடங்கு உயர்ந்து, அதிகரித்துக் கொண்டே செல்லும் என WHO கூறுகிறது. மாபெரும் அபாயத்துக்கு என்ன காரணம்?
இறைவன் அன்பளிப்பாக அளித்த இந்த அழகான, அருமையான மனித உடலை, உள்ளத்தை, ஆன்மாவை அனுபவிக்கத் தெரியாமல், தவறான, முறையற்ற, தேவையற்ற வாழ்க்கை முறையை நாம் அனைவரும் பின்பற்றி வருவதே முக்கிய காரணம்.
வாழ்க்கை முழுவதும் தினசரி, தேவையற்ற மனக்கவலையை தலையிலும், உடலிலும் மேலும் மேலும் ஏற்றி மன அழுத்தத்தின் உச்சகட்டத்தை அடைவது.
தவறாக, ேதவையற்ற, அவசியம் இல்லாத உணவு வகையை நமது தினசரி வாழ்க்கை முறையில் திணித்துக் கொண்டது. உதாரணமாக இதோ சில நடைமுறைகள்...
1. உணவில் அதிக அளவில் பால் மற்றும் அதனால் தயாரிக்கப்பட்ட வகை வகையான பொருட்கள், பதார்த்தங்கள். 2. அதிக மாமிச உணவு. 3. பதப்படுத்தி மாதக்கணக்காக குளிர்சாதனப்பெட்டியில் அடைக்கப்பட்ட உணவு வகைகள். 4. தளதளவென, சுத்தமான, புதிய, நல்ல வகை காய்கறிகள், பருப்பு வகைகள், கீரைகளைச் சமைத்துச் சாப்பிட சோம்பேறித்தனப்பட்டு, திடீர் உணவு வகைகளில் மயங்கி, அடிமைப்பட்டு கிடப்பது.
அதிகரித்து வரும் குடிப்பழக்கம், புகையிலை. குடிப்பவரின் உடல், உள்ளம், மனதை மட்டும் கெடுக்காமல், அவர்களின் குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் சீரழிக்கிறது.
உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல், இயற்கையான வெயில், காற்று புகமுடியாத ஏசி அறைகள், கார்கள்... நடை என்பதையே மறந்து வீட்டின் வாசல்படியில் இருந்து வெளியேறிய உடன் செல்லும் இடங்களுக்கு வாகன வசதிகள்... இதனால் உடல், இடுப்பு, தொடை, பின்புறம், கைகள் அனைத்தும் பலூன் போல பெருத்துக் ெகாண்டு போவது... அது தெரியாமல், ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கை.
விஞ்ஞான வளர்ச்சி எனக் கூறி, தவறான வழியில் விஞ்ஞானத்தை தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தி, அதன் காரணமாக இயற்கையான காற்று, சுவையான குடிநீர், உன்னதமான உணவு என அனைத்திலும் மாசு படிந்து, தினசரி வாழ்க்கை சூன்ய மாகி, கெட்டு, குட்டிச் சுவராகி வருவது. இந்த கொடுமையான மன அழுத்தமே நூற்றுக்கணக்கான நோய்களோடு, மனித உடல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கக் காரணம்.
இதற்கு விடிவு காலம்தான் என்ன?
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த உணவு, நல்ல உடற்பயிற்சி, தேவையான ஓய்வு, ‘போதும்’ என மனநிறைவு, சமுதாயத்தோடு உண்மையான அன்யோன்யம் ஆகியவற்றுடன் யோகா. இது ஒரு அரிய, மாபெரும் மருந்தாக, பெரும் பங்கு வகுக்கிறது. ஏன் யோகா? அது அப்படி என்ன செய்யும்? உடல், மன நோய்களை விரட்டுவதில் அதன் பங்கு என்ன? அடுத்த இதழில் பார்ப்போம்.
"ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான மனிதர்கள் அணு அணுவாக சித்ரவதைப்பட்டு, தங்களைத் தாங்களே கொன்று கொண்டிருக்கிறார்கள். அதுதான் மன அழுத்த வெடிகுண்டு!"
"இன்னும் 10-15 ஆண்டுகளில் இந்திய இளைஞர்களை இதய நோய், புற்றுநோய், நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், மன அழுத்தம் உள்பட பலவிதக் கோளாறுகள் சேர்ந்து அழிக்க காத்துக் கொண்டிருக்கும்."
(ஆரோக்கியம் தொடரும்!)
|