இனி அரசுக் கல்லூரிகளில் குழந்தையின்மை மருத்துவம்!



இந்தியாவில் வட மாநிலங்களைவிட தென் மாநிலங்களில்தான் குழந்தையின்மைப் பிரச்னை அதிகம்!  இந்த அதிர்ச்சித் தகவலுடன், லேட்டஸ்ட்  சிகிச்சைகள், செலவைக் குறைக்கும் முறைகள், குழந்தையின்மை சிகிச்சைகளின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் வழிகள்... சோதனைக்குழாய் சிகிச்சையில் ஈடுபட விரும்புகிற மருத்துவர்களுக்கான  அடிப்படை ஆலோசனைகள்... சோதனைக்குழாய் மருத்துவ மையம் அமைக்கப்படுவதற்கான வழிகாட்டுதல்கள்...  நவீன  செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை களுக்கான பயிற்சிப் பட்டறை... 160 ஆராய்ச்சிகளைப் பகிர்ந்து கொண்ட மருத்துவர்கள்... இப்படி மருத்துவர்களால் மருத்துவர்களுக்கு நடத்தப்பட்டது `ஃபெர்டி கான்-2015' என்ற தேசிய அளவிலான மருத்துவ  மாநாடு!



ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையமும் டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனையும் இணைந்து  இந்த மாநாட்டை நடத்தின. கருப்பை மாற்று அறுவை சிகிச்சையை உலகிலேயே வெற்றிகரமாக செய்து சாதனை படைத்த  ஸ்வீடன் மருத்துவர் மாட்ஸ் பிரான்ஸ்டராம் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். ``தமிழகத்தில் குழந்தை இல்லாத  தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவ தால் தனி சிகிச்சையும் மருத்துவ படிப்பும் தேவைப்படுகிறது. தமிழக  சுகாதார துறை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனையுடன் இணைந்து டிப்ளமோ இன்  ஃபெர்டிலிட்டி ஃபெல்லோஷிப் என்ற 2 ஆண்டு படிப்பு, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் விரைவில்  அறிமுகப்படுத்தப்படும். இந்த படிப்புக்கு எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் தகுதியானவர்கள். இந்த பாடப்பிரிவில்,  ஐவிஎஃப், இக்சி போன்ற நவீன கருவாக்க சிகிச்சை முறைகள் மற்றும் நுண் அறுவை சிகிச்சைகள் கற்பிக்கப்படும்’’  என்றார் தமிழக அரசின் மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி.

``கர்ப்பிணிக்கு சின்னம்மை வந்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமோ  என  பயந்து போய், கருவைக் கலைக்க வேண்டும்  எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தேவையில்லை. நோய் வந்து விட்டுப் போனதும் குறிப்பிட்ட  இடைவெளிகளில் ஸ்கேன் செய்து குழந்தைக்கு குறைபாடு  இல்லை என்றால் கர்ப்பத்தைத் தொடரலாம். குறையிருந்தால்  மட்டுமே கருக்கலைப்பு செய்ய வேண்டும்’’ என ஆறுதல் தகவல் சொன்னார் Institute of Obstetrics and Gynaecology  முன்னாள் இயக்குநர் டாக்டர் ரேவதி ஜானகிராமன்.

செயற்கை கருப்பை மற்றும் கருமுட்டைகளை உருவாக்குவது தொடர்பாக உலகம் முழுக்க நடக்கும் ஆராய்ச்சிகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல் பகிர்வுகள் மாநாட்டின் ஹைலைட்!