எதையும் லெஃப்ட் ஹேண்ட்ல செய்வோம்ல!



ஆகஸ்ட் 13 இடது கைப் பழக்கத்தினர் தினம்

ஒழுங்கின்மையும் இயற்கையே... அப்படியானதுதான் இடதுகைப் பழக்கமும். பெரும்பாலானோர் உடலின் முக்கிய  இயக்கத்துக்கு வலது கையைத்தான் பயன்படுத்துவர். வலது கை முக்கிய அங்கமாக இருப்பது போல் சிலருக்கு இடது கை  முக்கிய அங்கமாக மாற்றம் பெறுவதும் உண்டு. இடது கையில் எழுதுகிறவர்களையும், கிரிக்கெட்டில் இடக்கை  பேட்ஸ்மேன்களையும் பார்க்கிறோமே. குறை அல்ல... இதுவும் இயற்கையே.

இடது கைப் பழக்கம் வருவதற்கான காரணங்களை விளக்குகிறார் நரம்பியல் நிபுணர் எஸ்.பாலசுப்ரமணியம்...

``உலக அளவில் வலது கைப் பழக்கம் உள்ளவர்களே பெரும்பான்மை. பத்தில் ஒருவர்தான் இடது கைப் பழக்கம்
உள்ளவராக இருப்பார். இரு கைகளையும் கலந்து (Mixed handedness)  பயன்படுத்துபவர்களும் உண்டு. இவர்கள் சில  வேலைகளை வலது கையிலும், சில வேலைகளை இடது கையிலும் லாவகமாக செய்ய வல்லவர்கள்.

இரண்டு கைகளையும் சரி சமமான வேகத்துடன் பயன்படுத்துபவர்களும் உண்டு. இவர்களை ஆம்பிடெக்ஸ்டர்(Ambidexter)  என்று அழைப்பார்கள். மகாத்மா காந்தி இரு கைகளிலும் சரளமாக எழுதக் கூடியவர். இரு கைகளையும்  பயன்படுத்துபவர்கள் ஒரு சதவிகிதம் மட்டுமே இருப்பார்கள்.

மனித மூளையானது வலது பெருமூளை, இடது பெருமூளை என இரு பகுதிகளை உள்ளடக்கியது. இவை கார்பஸ்  கலோசம் (Corpus callosum) என்னும் நரம்புக் கற்றையால் இணைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு இடது  மூளையே (Dominant)  பிரதானமாக உள்ளது.

ஆனால், இடது கைப்பழக்கம் உள்ளவர்களில் 70 சதவிகிதம் பேருக்கும் இடது மூளையே பிரதானமாக உள்ளது. எதனால்  இடது கைப் பழக்கம் வருகிறது என்பதற்கு குறிப்பிட்ட காரணம் இதுவரை தெரியவில்லை.

நிறைமாதத் தாயின் வயிற்றில் சிசுவின் தலை இருக்கும் நிலையில் மாறுபாடு ஏற்பட்டாலோ, தாய் வயிற்றில் குழந்தை  இருக்கும் போது எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தினாலோ, இடது கைப் பழக்கம் வருகிறது  என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆராய்ச்சி முடிவுகளில் முறையாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

பரம்பரை சார்ந்தும் இடது கைப் பழக்கம் வருகிறது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்பா, அம்மா இருவரும்  இடது கைப் பழக்கம் உடையவர்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் இடது கைப் பழக்கம் வரலாம். சில  குழந்தைகளுக்கு பிறக்கும் போது இடது பக்க மூளை சரியாக வளர்ச்சி அடைந்திருக்காது.

சில குழந்தைகளுக்கு பிறக்கும் போது இடது பக்க மூளையில் ரத்தக்கசிவு இருக்கும். இக்குழந்தைகள் வலது பக்க  மூளையை அதிகமாக பயன்படுத்துவதால் இயற்கையாகவே இடது கைப் பழக்கமுடையவர்களாக மாறிவிடுவார்கள்.
இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நடைமுறை சார்ந்து சில சிக்கல்களும் உள்ளன.

புதிதாக கண்டுபிடிக்கப்படும் எந்த உபகரணமும் வலது கைப் பழக்கம் உடையவர்களை மையப்படுத்தியே  தயாரிக்கப்படுகின்றன. அதனால், பயன்படுத்துவதில் கஷ்டம் ஏற்படும். கார் ஓட்டும் போது சமாளித்துவிடலாம். டூவீலர்  போன்ற வாகனங்கள் ஓட்டுவது கடினம்.

டூவீலரின் விசைமுடுக்கியானது வலது பக்கம்தானே அமைந்திருக்கும்?  கிதார், வயலின் போன்ற கம்பிக் கருவிகளை  வாசிப்பதும் கடினம். கணினியில் கூட மவுஸ் வலதுபுறம்தான் உள்ளது. இந்த சவால்களை எல்லாம் தாண்டி தங்களுக்கு  ஏற்ற மாதிரி அனைத்து விஷயங்களையும் வடிவமைத்துக் கொண்ட வெற்றியாளர்களே இடது கைப் பழக்கம்  கொண்டவர்களில் அதிகம்.

பெற்றோரோ, ஆசிரியரோ இடது கைப்  பழக்கம் உடைய குழந்தைகளை வற்புறுத்தி வலது கைக்கு மாற்றக்கூடாது. எந்த  கையில் நன்றாக எழுத வருகிறதோ அதில் எழுதுவதை மட்டும் ஊக்குவிக்க வேண்டும். இடது கையில் பொருட்களை  கொடுப்பதை சிலர் மரியாதை குறைவாக நினைப்பார்கள்.

நமக்கு `வலது கை’ போலவே அவர்களுக்கு ‘இடது கை’ என்பதைப் புரிந்து கொண்டு அவர்களது மனம் புண்படாமல்  நடந்து கொள்ள வேண்டும்.’’

"இடது கைப் பழக்கம் உடைய குழந்தைகளை வற்புறுத்தி வலது கைக்கு மாற்றக்கூடாது!"

- விஜய் மகேந்திரன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்