ரிஸ்க்கி பிசினஸ்!
டாக்டர் ஷாம்
4வயது சிறுவனை மது குடிக்க வைக்கும் காட்சியும், பள்ளி மாணவி குடிபோதையில் இருந்த காட்சியும் சமீபத்தில் இணையத்தில் பரவியது. பெற்றோர் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இச்சம்பவங்களின் பின்னணியில் உள்ள சமூக, அரசியல் காரணிகளைத் தாண்டி, மருத்துவ உண்மைகளையும் நாம் அறிதல் அவசியம்.
வயது குறைந்தோர், அறிந்தோ அறியாமலோ மது அருந்துகையில் என்ன நடக்கிறது? விளையாட்டு வினையாகும் என்பது இவர்கள் விஷயத்தில் மாபெரும் உண்மை. உடலியல் ரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பாதிப்புக்கு ஆளாகும் இக்குழந்தைகள், இதற்காக அளிக்கும் விலை மிக அதிகம்.
குழந்தைகள் குடித்தால்...
பார்வைத் திறன், கேட்கும் திறன், ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தற்காலிகமாகக் குறைபாடுகள் ஏற்படும். வாய் நாற்றம், ஹேங் ஓவர் பிரச்னை ஆகியவை ஒரு நாள் வரை இருக்கக்கூடும். சிரோசிஸ் (Cirrhosis), கல்லீரல் கேன்சர், பசியின்மை, தீவிரமான வைட்டமின் குறைபாடு, தொடர்ச்சியான வயிற்றுக் கோளாறுகள், மறதி நோய், ஆண்மைக் குறைவு போன்றவை நீண்ட கால விளைவுகளாக ஏற்படலாம். இவை தவிர....
மதுவே விஷமாகும்
ஆல்கஹால் பற்றிய எந்த அறிதலும் இல்லாமல் - குறைவான நேரத்தில் அதிக அளவு குடிக்கும்போது, மது விஷத் தன்மையை அளிக்கிறது. இதனால் மூளையின் அத்தியாவசியச் செயல்பாடுகள் முடங்குகின்றன. மூச்சுவிடுதலில் கூட தடை ஏற்படுகிறது. ‘ஆல்கஹால் கோமா’ என்ற அபாய நிலையும் உண்டாகக்கூடும். சில குழந்தைகள் இறந்தே விடுகின்றனர்.
கல்லீரல் பாதிப்பு உடனே தொடங்கும்
கல்லீரல் பாதிக்கிற விஷயமே அறியாமல் குடித்துக்கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு, துரதிர்ஷ்டவசமாக இதன் அறிகுறிகளும் மிகத் தாமதமாகவே தென்படுகின்றன. கல்லீரல் பாதிப்பு காரணமாக, 20 வயதிலேயே இறப்போரும் உண்டு.
நோய் தொற்றும் நிலை
மது அருந்தும் சூழல் மற்றும் மதுவின் தரக்கேடு காரணமாக, குழந்தைகளை பலவித நோய்கள் எளிதில் தொற்றுகின்றன.
பருவமும் சேர்ந்தால் பரிதவிப்பு அதிகம்
வளர் இளம் பருவமானது, குழந்தைகளுக்கு உடலியல் மற்றும் உணர்வு ரீதியாகவே மிகவும் கடினமான காலகட்டம். எதிலும் ரிஸ்க் எடுத்துப் பார்க்கத் தயங்காத இந்த வயதில், மதுவும் சேரும்போது அபாயம் பல மடங்காக அதிகரிக்கிறது.
கட்டுப்பாட்டை இழக்கிறார்கள்
குழந்தைகளும் டீன் ஏஜ் வயதினரும் மது அருந்தும்போது சுயக் கட்டுப்பாட்டை சட்டென இழந்து விடுகிறார்கள். எச்சரிக்கை சமிக்ஞைகளை அளிக்க முயலும் மூளையும் தோற்றுப் போகிறது. ஆக்ரோஷம் அதிகம் ஆகிறது. வலுச் சண்டைக்குப் போகிறார்கள்.
கல்வியில் அக்கறையின்மை
13 வயது வாக்கில் குடிக்கத் தொடங்கும் குழந்தைகளுக்கு, பள்ளிப் படிப்பில் ஆர்வம் குறைந்து போகிறது. வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு ‘கட்’ அடிக்கவே இவர்களின் மனம் விரும்புகிறது. மதிப்பெண் குறைகிறது. இதன் தொடர்ச்சி யாக இடைவிலகலோ, பள்ளியிலிருந்து விலக்கப்படுதலோ நிகழ்கிறது.
மனநலக் குறைபாடும் சேரும்
குடியில் மூழ்கும் குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளோடு, மனநலக் கோளாறுகளையும் அடைகிறார்கள். தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளும் அளவுக்குக்கூட பாதிக்கப்படுவதுண்டு.
மூளையின் செயல்திறன் குறையும்
குழந்தைப் பருவத்தில் மட்டுமல்ல... டீன் ஏஜ் பருவத்திலும் மூளையானது வளர்ச்சிக்கட்டத்தில்தான் இருக்கும். இப்பருவத்தில் மது சேரும்போது, நினைவாற்றல் செயல்பாடுகள், வினையாற்றல், கற்றல் திறன், கவனிக்கும் திறன் ஆகியவற்றில் குறைபாடுகள் ஏற்படும். தனது முழு செயல்திறனையும் வெளிப்படுத்த இயலாமல் குழந்தை திணறும்.
உடல் உருக்குலையும்
டீன்ஏஜ் பருவத்தில் நல்ல தோற்றத்துடன் இருப்பதும், அதைப் பராமரிப்பதும் இயல்பானது. மதுவின் விளைவாகவோ எடை கூடும் அல்லது குறையும். தூக்கம் தொலையும். சருமப் பொலிவு காணாமல் போகும். அடிக்கடி தலைவலி வரும். இன்னும்... இந்தப் பட்டியல் மிக நீளமானது.
போதையில் பாதை மாறும்
‘மது... சிகரெட்... அடுத்து என்ன...அடுத்து என்ன’ என்ற தேடலின் விளைவு போதைப்பொருளுக்கு இழுத்துச் செல்லும். அதன் அபாயங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
பாதுகாப்பில்லாத உறவு
டீன் ஏஜ் மதுப் பழக்கம் அதீத தைரியத்தை வழங்குவதால், தெளிவாக முடிவெடுப்பதில் குழப்பங்கள் ஏற்படும். இதனால் ‘ரிஸ்க்’ எனத் தெரியாமலேயே, மிகப்பெரிய ரிஸ்க்குகளை எடுக்கும் குழந்தைகள் பாலியல் உறவுக்குள்ளும் தள்ளப்படுவதுண்டு. பாலியல் பலாத்காரங்களிலும் சிக்குவதுண்டு. ஒரே ஒரு முறை மது அருந்திய பெண் குழந்தை கர்ப்பம் சுமந்த உண்மைக் கதைகளும் இங்குண்டு.
விபத்துகளும் காயங்களும்
உடலும் மனமும் கட்டுப்பாட்டை இழப்பதால், தீர்மானிக்கும் திறனும் ஒருங்கிணைப்புத் திறனும் குறைகின்றன. போதையின் உந்துதலால் அதீத தைரியத்துடன் தகுதியற்ற வாகனங்களைக்கூட விரைந்து இயக்கி விபத்து ஏற்படுத்துவோர் உண்டு. இதனால் குடித்தவரோடு குறுக்கே வருபவருக்கும் வாழ்வு முடிந்து போகிறது. அல்லது காயங்களால் காயப் படுகிறார்கள்.இன்றைய மாணவர்கள் (கல்லூரி அல்ல - பள்ளி மாணவர்கள்!), ‘எப்போதாவதோ, வாரம் ஒருமுறையோ, ஆண்டு இறுதி அன்-அஃபிஷியல் பார்ட்டிகளிலோ குடிப்பதில் எந்தத் தவறும் இல்லை’ என்றே கருதுகின்றனர். இந்தப் பட்டியலில் 11-15 வயதினரும் உண்டு என்பதுதான் வேதனை. இப்படியொரு எண்ண மாற்றம் நிகழ்ந்ததற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் குடியும் குடி சார்ந்த வாழ்வும் நிலவுவது. பள்ளிக்கு அருகிலும், வீட்டுக்கு அருகிலும், செல்லும் வழியெங்கும் நிறைந்திருக்கும் மதுக்கடைகள். வீட்டில் உள்ள ஒருவரோ (அப்பா, அண்ணன், உறவினர்), அண்டை வீட்டுக்காரரோ, குழந்தைகள் அறியும் வகையில் குடிப்பது அல்லது குடித்துவிட்டு வருவது. டீன் ஏஜ் பருவத்தில் இயல்பாகவே உள்ள ரிஸ்க் எடுக்கும் பழக்கம். வீட்டில், பள்ளியில், நண்பர்கள் மத்தியில் அல்லது தன்னிடமே பிரச்னைகள் இருப்பது. பெரியவர்களை, விதிமுறைகளை, எல்லைகளை, வரையறைகளைச் சோதித்துப் பார்க்க விரும்பும் டீன் ஏஜ் மனம். தான் வளர்ந்து விட்டோம் என நிரூபிக்க விரும்புவது. ஏற்கனவே குடிப்பழக்கம் கொண்ட நண்பர்கள் ‘மதுவின் சிறப்புகள்’ என அளந்து விடுவது. குழு நடவடிக்கை, அசட்டுத் தைரியம்.
இப்படி காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பாதிப்பு என்னவோ பாலகன்களுக்கே. அதனால் இந்த விஷயத்தை, பெற்றோரே மிகுந்த எச்சரிக்கையாகக் கையாள வேண்டும். எப்படி? என்ன செய்வது? அடுத்தஇதழில் பேசுவோம்.
"எதிலும் ரிஸ்க் எடுத்துப் பார்க்கத் தயங்காத வயதில், மதுவும் சேரும்போது அபாயம் பல மடங்காக அதிகரிக்கிறது."
அதிர்ச்சி டேட்டா
16 வயதுக்கு முன் குடிக்கத் தொடங்குபவர்களில் 85 சதவிகிதத்தினர் வன்முறையாளர்களாகவே மாறுகின்றனர்.
(தகவல்களைப் பருகுவோம்!)
|