மகாதமனி மாற்று சிகிச்சை



ஹைதராபாத்தை சேர்ந்த 81 வயது மூதாட்டி `அயோடிக் வால்வ்ஸ்டினோசிஸ்’ எனும் இதய நோயால் கடுமையாக  பாதிக்கப்பட்டு இருந்தார். 2004ல், அவரது மகாதமனி சுருங்கியதால், அதிலிருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு  குறைந்தது. இதனால்  செயற்கை மகாதமனி (பயோபுரோஸ்திட்டிக் அயோடிக் (Aortic) வால்வ்) பொருத்தப்பட்டது. 2014ல்,  அவருக்குப் பொருத்தப்பட்ட செயற்கை மகாதமனியும் சுருங்கி தன் செயல்பாட்டை நிறுத்தியது. அவரது இதயம் சரிவர  செயல்படாமல் பிரச்னைக்கு உள்ளானது. மீண்டும் உயிருக்கு ஆபத்தான  நிலைக்கு ஆளானார்.

ஃப்ரன்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் மூதாட்டிக்கு டிரான்ஸ்கத்தீட்டர் அயோடிக் வால்வானது (நவீன வகை  செயற்கை மகாதமனி) வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு  பொருத்தப்பட்டது. அதுவும் மார்புக்கூட்டை திறந்து  அறுவை சிகிச்சையை வழக்கமான முறையில் செய்யாமல், இடது பக்க தொடை வழியே சிறு துளையிட்டு செயற்கை மகா
தமனி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

``இந்தியாவில் முதல் முறையாக  டிரான்ஸ்கத்தீட்டர் அயோடிக் வால்வு மாற்று சிகிச்சையானது வெற்றிகரமாக  செய்யப்பட்டுள்ளது. செயற்கை மகாதமனியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால், இந்த  சிகிச்சைக்குப்  பல லட்சங்கள் செலவாகிறது’’ என்கிறார் இச்சிகிச்சைக் குழுவில் ஒருவரான இதய நோய் சிகிச்சை நிபுணர்  அனந்தராமன்.

"இந்தியாவில் முதல் முறையாக, சென்னையில்தான் மகாதமனி மாற்று சிகிச்சை வெற்றிகரமாக  செய்யப்பட்டுள்ளது!"

- சேரக்கதிர்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்