மூல நோய் மருந்துகள்



டாக்டர் மு.அருணாச்சலம்

வருடத்துக்கு இருமுறை வந்து போகும் சாதாரண ஒரு நோய் ‘பைல்ஸ்’ எனப்படும் மூலம். இருசக்கர வாகனங்களுக்குக்  கூட தினசரி பெட்ரோல், இன்ஜின் ஆயில், டயருக்கு காற்று என பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்ளும் நாம், உடலுக்கு  தேவையான தண்ணீர், காய்கறி, பழங்களுடன் கூடிய உணவு, உடற்பயிற்சி, நல்ல உறக்கம் எனத் தர மறுப்பதன் விளைவே  70 சதவிகித மூல நோயின் காரணம்.



எனது 20 வருட அனுபவத்தில், நோயாளிகளிடமிருந்து தெரிந்து கொண்டது என்ன தெரியுமா? ஒரு நவீன மருத்துவர் ஒரு  நோய்க்கான காரணத்தை உடல் அமைப்பைப் பற்றிய பாதிக்கப்பட்ட உறுப்பு, படங்களுடன் நோய் எதனால்  வருகிறது,  உறுப்பின் மீதும் உடலின் மீதும் அதனுடைய தாக்கம்  என்ன என எடுத்துக் கூறினாலும், நோயைப் பொறுத்தமட்டில்  பாட்டி சொன்னதையும், பெற்றோர் சொன்னதையும், பக்கத்து வீட்டுக்காரர் சொன்னதையும், ஏற்கனவே நோயினால்  அவதிப்பட்டவர்கள் சொன்னதையும்தான் படித்தவர்கள் கூட எடுத்துக் கொள்கிறார்கள்... நம்புகிறார்கள்... ‘உன்னையே நீ  அறிவாய்’ என்று சாமியார்கள் கூறுவதைக் கூட ஏற்றுக் கொள்வார்களே அன்றி, நவீன மருத்துவர்கள் கூறுவதை ஏற்றுக்  கொள்வதும் இல்லை... நம்புவதும் இல்லை.



மருத்துவரின் அறை வாயிலிலேயே அதை மறந்து விடுபவர்கள் உண்டு. நோய் குணமான உடனே அதை மறந்து  விடுபவர்களும் உண்டு. நவீன மருத்துவர்கள் கூறும் உடற்பயிற்சியையும் செய்வதில்லை. நோயாளிக்கே தெரிந்த  பரிசோதனைகளை (Test) எடுப்பதை விட, உடற்பயிற்சி ஒரு மருந்தாகவே செயல்படும் என்பதையும் ஏற்றுக்  கொள்வதில்லை. அன்றாட உணவில் ஒரு காய், ஒரு பழம், 2 லிட்டர் தண்ணீர்... இந்த சமச்சீரான உணவு உடலுக்கு  வைட்டமின்களையும் நார்ச்சத்தையும் தரும். வயிற்றை நிரப்பி கலோரிகளை குறைக்கும். திட உணவுடன் அது 8 மீட்டர்
உணவுக்குழாயில் நீருடன் பயணம் செய்து, பல்வேறு சத்துகளை உடலுக்கு வழங்கி, காலையில் மலச்சிக்கல் சிரமம் இன்றி உடலை விட்டு வெளியேறுகிறது.

மலச்சிக்கல் ஆசனவாயை அழுத்தி, அங்கிருக்கும் ரத்தக்குழாய்களை கிழித்து, மூலம் என்ற நோய்க்கு முக்கிய காரணமாக  அமைகிறது. காய், கனி, நீர் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தால் டயட்டீஷியன், நியூட்ரீஷியனிஸ்ட் எனப் பார்க்க  அவசியமில்லை. ஆண்டுக்கு இருமுறை கோடையில் தண்ணீர் குடித்தாலும் - போதுமானதாக இல்லாமல், மழைக்காலத்தில்  தண்ணீரே குடிக்காமல் போதுமானதாக இல்லாததால், மலச்சிக்கல் அவதி வருகிறது என்ற நவீன மருத்துவரின்  ஆலோசனையையும் கேட்காமல், யாரிடமோ தஞ்சமடைகிறார்கள்.

மூலத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மேலே கூறிய காய், பழம், தண்ணீர் தேவையான அளவுக்கு  உட்கொள்ளாததே பிரதான காரணம். உடற்பயிற்சியின்மை, அதிகமாக உட்கார்ந்திருப்பது (தையல் மெஷின், சைக்கிள்  ஓட்டுவது) போன்றவையும், பருமன், தீவிர ஓயாத இருமல், மகப்பேறு போன்றவையும் காரணங்களாகலாம்.
மனிதனுடைய மலக்குழாய் 3-4 நாட்களுக்கான மலத்துடன், விரிவடைந்து தேக்கி வைக்கும் சக்தி உடையது. ஆனால்,  ஆசனவாய் மிகச்சிறிய அளவில்தான் விரியும். உடலில் தண்ணீர் இல்லாத பட்சத்தில் மலக்குழாயில் இருந்தும் உடலுக்கு  தேவையான தண்ணீரை உறிஞ்சிவிடுவதால், மலம் மேலும் இறுகி, மலக்குழாய் சுவர்களை, ஆசனவாயை அழுத்தி  காயப்படுத்தி, வெளியே தள்ளிக்கொண்டோ, கிழித்து விட்டோ வருவதால்  ரத்தப்போக்குடனோ,  இல்லாமலோ  உள்மூலமாகவோ, வெளிமூலமாகவோ மூல நோய் உருவாகிறது.

மூலநோயின் அறிகுறிகளாக ஆசனவாயின் வீக்கம், மலக்குழாயில் வலி, ரத்தப்போக்கு சீழ்கட்டி, ஜுரம், மலக்குழாய்  வெளியே தொங்கும் அளவுக்கு நடக்க முடியாமல் போவது போன்றவை இருக்கக்கூடும். மலக்குழாயின் முடிவிலிருக்கும்  ஆசனவாயில் நல்ல ரத்தம், கெட்ட ரத்தம் என்றில்லாமல் - இரண்டும் இணைந்த மிக அதிகமான ரத்தக்குழாய்களுடன்,  தசைகளும் சதையும் இருக்கும். இவை ஆசனவாய்க்கே உரிய தனித்துவமான ரத்தக்குழாய்கள். மலத்தை அடக்குவதற்கு  வெளி மற்றும் உள் தசை வளையம் (Anal sphincter muscle) இருக்கின்றன. மூலநோய்க்கு மருத்துவ பரிசோதனை என்பது  மருத்துவரே பார்த்து (Rectal Exam) கட்டிகள், சீழ்கட்டிகள் போன்றவை இல்லை என்றபின் (Rectoscopy) மூலம்  அறியப்படும். சில வேளைகளில் MRI வரை தேவைப்படலாம். மலத்துடன் ரத்தம் வரும் போது அது மலக்குழாய் கிழிந்து  (Anal Fissure) வருகிறதா, சீழ்கட்டி (Fistula), கேன்சர் கட்டிகள் என மற்ற நோய்களிலிருந்து வித்தியாசப்படுகின்றனவா  எனப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மூல நோய்க்கு ஆரம்பத்திலேயே கூறியபடி ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு காய், ஒரு பழம், 2 லிட்டர் தண்ணீர்  முக்கியம். வீட்டு கைப்பக்குவ குழம்புகளை ஹோட்டல் குழம்புகளைப் போல செய்வதே, குழந்தைகளுக்கு இரைப்பை  வலி, மலச்சிக்கலுக்கான காரணம். இதை எப்படி படித்த மற்றும் படிக்காத தாய்மார்களுக்கு புரிய வைப்பது என்று நவீன  மருத்துவர்களுக்கு தெரியவில்லை. நோயின் ஆரம்பத்தில் உணவு தவிர, மலக்குழாயின் வலியைப் போக்க, வீக்கத்தைப்  போக்க, சாதாரண கிருமிநாசினிகள், உறைந்த ரத்தம் கரைக்கும் மருந்துகள் தவிர ஆசன வாயில் தடவும் ஆயின்மென்டுகள்,  க்ரீம்கள் மற்றும் வீக்கத்தைப் போக்கும் சுடுநீர் ஒத்தடம் போன்றவை உதவி செய்கின்றன. நோயாளியின் ஒத்துழைப்புடன்  நோயின் காரணம் தெரிந்து போக்கினால் மேலே கண்டவாறு மருந்தாலேயே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சையாக மாற்றாமல் குணப்படுத்த முடியும்.

அறுவை சிகிச்சையாக முற்றிய பின்பு ரப்பர் பேண்ட் இறுக்கிகள் (Rubber band ligation), ரத்தக்குழாயை அடைத்து போகச்  செய்வது (Sclerotherapy) அல்லது லேசர் இன்ப்ளான்ட் (Infrared radiation, laser surgery), க்ரையோ சர்ஜரி  (Cryosurgery), எெலக்ட்ரோ (Electrocautery) மூலம் ரத்தமின்றி அறுத்து எடுக்கலாம். கத்தி கொண்டும் அறுத்து எடுக்கலாம். உணவுக்குழாயை அறிந்தவர்களுக்கு, சமச்சீர் உணவில் நார்ச்சத்தின் முக்கியத்துவம் அறிந்தவர்களுக்கு, உடலுக்கு  உணவைத் தவிர நீரும் மிக முக்கியம் என அறிந்தவர்களுக்கு மூலநோய் என்றால் என்ன என்பதே தெரியாது என்பதே  சத்தியமான உண்மை!

"மூலத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் காய், பழம், தண்ணீர் தேவையான அளவுக்கு உட்கொள்ளாததே பிரதான காரணம்."

"உணவுக்குழாயை அறிந்தவர்களுக்கு, சமச்சீர்  உணவில் நார்சத்தின் முக்கியத்துவம் அறிந்தவர்களுக்கு, உடலுக்கு உணவைத்  தவிர  நீரும் மிக முக்கியம் என அறிந்தவர்களுக்கு மூலநோய் என்றால் என்ன என்பதே  தெரியாது!"