பருமன் பலன் இல்லை பயம் உண்டு!
தாஸ்
நீரிழிவை வெறுக்காதீர்கள். அதை நேசிக்கும் வழிகளை கண்டறியுங்கள்! உங்கள் எடையை கட்டுக்குள் வைப்பதன் மூலம் ஹெல்த்தியான வாழ்வைப் பெற முடியும். அது மட்டுமல்ல... நீரிழிவு உள்பட பல பிரச்னைகளைத் தவிர்க்கவும் முடியும்! நீரிழிவுக்கும் எடைக்கும் ஒருவித குழப்பமான உறவு உண்டு. டைப் 2 நீரிழிவாளர்கள் பலர் பருமனாக இருப்பதில் இருந்தே இதை அறிய முடியும். பி.எம்.ஐ. எனப்படும் பாடி மாஸ் இண்டெக்ஸ் குறைவாக உள்ளவர்களை விடவும், பருமனாக இருப்பவர்களுக்கு எல்லா விஷயங்களிலும் ரொம்பவே ரிஸ்க். ஆனால், நமக்கு இன்னொரு சந்தேகமும் எழலாம். குண்டாக இருப்பவர்கள் எல்லோருக்கும் நீரிழிவு இல்லையே... நீரிழிவுக்காரர்கள் அத்தனை பேரும் குண்டாகவும் இல்லையே!
உண்மைதான். இதில் வேறுபல காரணிகளும் செயல்படுகின்றன. எவ்வளவு காலம் பருமனாக இருக்கிறோம் என்பதும் சேர்ந்தே, நம்மை நீரிழிவுக்குள் கொண்டு செல்கிறது. பருமனால் எந்தப் பலனும் இல்லை... ஆனால், ஏராளமான பயங்கள் உண்டு!
இதய நோய்கள் / Cardiovascular Diseases (CVD)
பருமனோடு நீரிழிவோ, நீரிழிவோடு பருமனோ - எதோடு எது சேர்ந்தாலும் இதய நோய்களுக்கான வாசலை அகலமாகத் திறந்து வைக்கிறோம் என்பதே பொருள். இப்படி இரட்டைக்குழல் துப்பாக்கி போல வலம் வருபவர்களுக்கு ஹார்ட் அட்டாக், இதயச் செயலிழப்பு, ஆஞ்சினா, ஸ்ட்ரோக் உள்பட பலவித இதயக் கோளாறுகள் தாக்கும் அபாயம் உண்டு.
ஸ்ட்ரோக் / Cerebrovascular Accident (CVA)
மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு அல்லது சுருக்கம் காரணமாக தடை ஏற்படும் நிலையையே ஸ்ட்ரோக் என்கிறோம். மற்றவர்களை விட, நீரிழிவும் பருமனும் கொண்டவர்களுக்கு ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் 3 மடங்கு அதிகம் உள்ளது. அது மட்டுமல்ல... 20 சதவிகித நீரிழிவாளர்களின் மரணம் ஸ்ட்ரோக்கால்தான் ஏற்படுகிறது.
ஹைபர் கொலஸ்ட்ராலமியா/ Hypercholesterolemia
ரத்தத்தில் எல்டிஎல் எனும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு மிக அதிகமாகும் நிலை. இதனால் ஹெச்டிஎல் எனும் நல்ல கொலஸ்ட்ரால் அளவு குறையும். Triglycerides எனும் கொழுப்பும் எகிறும். அதோடு, இன்சுலின் சுரப்பும் குறையும். இந்தச் சுழற்சியின் காரணமாக, இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்படும் அபாயமும் நேரலாம்.
பார்வை இழப்பு / Blindness (Diabetic Retinopathy)
பருமன் காரணமாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக, கண்ணின் ரெட்டினாவிலுள்ள சிறிய ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை ஆகியவை தொடர்ந்து அதிகமாகவே இருப்பின், டயாபடிக் ரெட்டினோபதி பிரச்னை தீவிரமாகி, பார்வையே பறிபோகலாம்.
கேன்சர் / Cancer
பலவிதமான கேன்சர்களுக்கும் பருமனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உணவுக்குழாய், கணையம், பெருங்குடல், மலக்குடல், மார்பு (மெனோபாஸ் பருவத்துக்குப் பிறகு), எண்டோமெட்ரியம் எனும் கருப்பை உள்ளுறை, சிறுநீரகம், தைராய்டு, பித்தப்பை, புரோஸ்டேட் சுரப்பி ஆகியவற்றிலும் கேன்சர் பாதிக்கக்கூடும்.
மனச்சோர்வு / Depression
ஐந்தில் ஒரு சர்க்கரைகாரர் மனச்சோர்வுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார். சாதாரணமானவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாவதை விடவும், பருமனான நீரிழிவாளர்கள் பாதிக்கப்படுவது 2 பங்கு அதிகம்.
தீவிரமான சிறுநீரகப் பிரச்னை / Chronic Kidney Disease (CKD)
குறைக்க முடியாத பருமனும், கட்டுப் படுத்தப்படாத நீரிழிவும் சேர்ந்து தீவிரமான சிறுநீரகப் பிரச்னைகளை உண்டாக்கும். இது இறுதிநிலை சிறுநீரகச் செயல் இழப்பு வரை செல்லும்.
உறக்க மூச்சின்மை பிரச்னை/ Obstructive Sleep Apnea (OSA)
பருமன்காரர்களோடு, அதிக எடை கொண்டோரையும் சேர்த்து பாதிக்கும் நோய் இது. குறிப்பாகக் கூறுவதானால், பருமனாக இருப்பவர்களில் 40 சதவிகிதத்தினருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. இவர்களுக்கு நிம்மதியான தூக்கமும் ஓய்வும் கிட்டாது. இந்த நோயைப் பற்றிச் சொன்னால், கொஞ்சம் மிரட்டலாகத்தான் இருக்கும். தூக்கத்தின் இடையே மூச்சு விடுதலே சில நொடிகள் நின்றுபோகும். ஒரே இரவில் 100 முறை கூட இப்படி நிகழலாம். இதனால் உடலின் முக்கிய உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் தடை படும்... செயல்பாடுகள் பாதிக்கப்படும். ரத்த ஓட்டத்திலும் ஆக்சிஜன் அளவு குறைவதால், ஹைப்போஎக்சிமியா எனும் குறைபாடு ஏற்படும். இதன் தொடர்ச்சியாக சகலமும் சிக்கலாகும். இவ்வளவு கொடூரமான விளைவுகளை பருமனும் நீரிழிவும் சேர்ந்து தருவதை எண்ணி கலங்க வேண்டாம். மூன்றே மூன்று விஷயங்களை கறாராகச் செயல்படுத்தினால், எந்தப் பிரச்னையும் இல்லாத நல்வாழ்வு நிச்சயம்!
கலோரியை குறையுங்கள்
நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து கிடைக்கும் கலோரி அளவைக் கட்டுப் படுத்தினாலே, நிச்சயம் எடை குறைக்க முடியும். பொதுவாக 1,000 முதல் 1,600 கலோரி அளவு வரை எடுத்துக் கொள்வோருக்கு எடை மேலும் அதிகரிக்காமல் இருக்கும்.
அளவாகச் சாப்பிடுங்கள்
நிறை கொழுப்பு கொண்ட (Saturated fat) உணவுகள் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் கொழுப்பும் ஒன்றுசேர்ந்து இதயநோய் களை இழுத்து வரும். அதனால் கொழுப்பு குறைவான, கலோரி குறைவான உணவு களைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
உடல் உழைப்பு அவசியம்
உணவைக் குறைத்தால் மட்டுமே போதாது... உடல் உழைப்பும் இணையும்போதுதான் எடை குறையும். உடற்பயிற்சிகளால் இன்னும் பல பலன்களும் உண்டு. இதய நோய்கள், மாரடைப்பு, நீரிழிவு, கேன்சர் ஆகியவை ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும். இதயத்தைப் பலப்படுத்தும். நுரையீரல் சிறப்பாகச் செயல்பட உதவும். தசைகளை வலுவாக்கி, மூட்டுகளை நல்ல நிலையில் வைக்கும். எலும்பு இழப்பைத் தள்ளிப்போடும். மன அழுத்தத்தைப் போக்கும். ரிலாக்ஸாக தூங்கவும் வழிவகுக்கும்.
பி.எம்.ஐ. அளவு 40 என்கிற பேரளவைத் தாண்டியவர்கள் மட்டும், வேறு முயற்சிகள் பலன் அளிக்காத பட்சத்தில், எடை குறைப்பு அறுவை சிகிச்சையை தேர்வு செய்யலாம். ஸ்லீப் அப்னியா போன்ற மரண பயம் உள்ள பிரச்னைகளோடு, பி.எம்.ஐ. அளவு 35 என இருந்தாலும், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இவை எல்லாம் நம்மை அண்டுவதற்கு முன், மேலே கூறிய மூன்றே மூன்று விஷயங்களைக் கவனத்தில் கொண்டாலே, மனதை இழக்காமல் எடையை மட்டும் குறைத்து, இனிதே வாழலாம்!
"ஐந்தில் ஒரு சர்க்கரைகாரர் மனச்சோர்வுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்."
"இந்த நோயைப் பற்றிச் சொன்னால், கொஞ்சம் மிரட்டலாகத்தான் இருக்கும். தூக்கத்தின் இடையே மூச்சு விடுதலே சில நொடிகள் நின்று போகும். ஒரே இரவில் 100 முறை கூட இப்படி நிகழலாம்."
ஸ்வீட் டேட்டா
90 சதவிகித நீரிழிவாளர்கள் (டைப் 2) பருமன் ஆகவோ, அதிக எடை உடனோ இருக்கிறார்கள்.
(கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்!)
|