டியர் டாக்டர்*மக்களிடையே அதிகரித்து வரும் வீட்டுத் தோட்டம் அமைக்கும் பழக்க வழக்கங்களுக்கு உரமிட்டு, நீர் பாய்ச்சி இருந்தது ‘ஆரோக்கியம் அளிக்கும் வீட்டுச்செடிகள்’. வீடுகளில் செடிகளை வளர்ப்பதினால் மருத்துவரீதியான நன்மைகள் ஆச்சரியமளிப்பதாகவும் இருந்தது.   
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

* தொடர்ந்து பலதரப்பட்ட அரசு மருத்துவமனைகளை வெளிக்காட்டி தற்போது நடைமுறையில் அங்கும் செயல்பட்டு வரும் அலட்சியங்களை மூன்று பாகங்களாக பிரித்து விளக்கிய கவர் ஸ்டோரி மிக அருமை. இவ்விஷயத்தில், ‘குங்குமம் டாக்டர்’ டீமுக்கு ஒரு ராயல் சல்யூட்டே செலுத்தலாம்.

* இஞ்சியை மெச்சி எழுதியவை போலிருக்கிறது என வாசித்தால் சித்தரத்தைப் பற்றிய மருத்துவ குணங்கள், பாட்டி வைத்தியம் எவ்வளவு முக்கியம் எனப் புரிய வைத்தது. மஜாவாக மசாஜுக்குப் போகலாம் என்று நினைக்கிறவர்களுக்கு சரியான எச்சரிக்கையினைத் தந்து அசத்திவிட்டீர்கள். மூக்கு பற்றி சொல்லிய தகவல்கள் ஒவ்வொன்றும் வியப்பால் மூக்கின் மேல் விரலை வைக்க வைத்து விட்டன.
- சுகந்தி நாராயண், வியாசர் நகர்

*  உடல் செயல்பாட்டிற்கு ஆதாரமாக உள்ள எலும்புகளில் உண்டாகிற விரிசல் குறித்து விவரித்த எலும்பு மூட்டு மருத்துவர் ராதாகிருஷ்ணன் அவர்கள், எலும்புகளைப் பாதுகாக்க உடற்பயிற்சி அவசியம்; அதுவே, அதிகமானால், ஆபத்தாகிவிடும் என எச்சரித்தது ‘நச்’ சென்று இருந்தது.
- சி.கோபாலகிருஷ்ணன், கிழக்கு தாம்பரம்.

*வெட்டி எறியப்படும் நகங்களும் நம் உடலுக்கு எந்த அளவிற்கு ஆரோக்கியம் என சரும நல மருத்துவர் வானதி அவர்கள் சொல்லி இருந்தது எங்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.
- வளர்மதி, சுப்புலட்சுமி, மதுரை.

*  மாங்க் ஃபுரூட் என்றொரு புதிய வகை பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி கூறி இருந்தது அதனை சுவைக்கத் தூண்டியது. ஃபிட்னெஸ் டிரெய்னர் சாரா வொர்க் அவுட் செய்யும்போது, கவனத்தில் கொள்ள வேண்டியவற்றை விளக்கியதோடு, தவறுகளையும் சுட்டிக்காட்டியிருந்தது எல்லாருக்கும் பல சந்தேகங்களை போக்கியிருக்கும்.
- வேலன், திருவல்லிக்கேணி.