செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைரவுண்ட்ஸ்

சென்னையின் அடையாளமாகவும், கௌரவமாகவும் பல்வேறு அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அவற்றுக்கிணையாக இயங்கி வருகிறது ‘செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை’. ஏறக்குறைய 340 ஏக்கர் அளவில் பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருக்கும் இம்மருத்துவமனை, நகரைச் சுற்றியுள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாகவும் இருக்கிறது.

குழந்தைகள் நலம், மனநலம், அவசர சிகிச்சைப் பிரிவு போன்ற பிரபலமான துறைகளோடு இயங்கி வரும் இம்மருத்துவமனை பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவமனையின் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் உஷா சதாசிவன்.

‘‘செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு நகராட்சியின் அப்போதைய தலைவர் வேதாசலம் முதலியார் என்பவர் 340 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்து இம்மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்க உதவி புரிந்தார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவக்கல்லூரியாகவும், மருத்துவமனையாகவும் இயங்குகிறது. இது முற்றிலும் தமிழக அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனம், இந்தியா, புதுதில்லி, இந்திய மருத்துவ கவுன்சில் என்ற மருத்துவ கற்பித்தல் நிறுவனம் ஆகும்.

இந்த மருத்துவமனையில் இயங்கும் கல்லூரியில் 500 மருத்துவ மாணவர்களும், 150 முதுநிலை மருத்துவ மாணவர்களும் மருத்துவ கல்வி பயில்கிறார்கள். இம்மருத்துவமனையில் பொதுநலபிரிவு, சிறுநீரகத்துறை, இதயவியல் துறை, சிறுநீரகவியல் துறை, குழந்தைகள் அறுவைசிகிச்சை துறை, ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவத்துறை, குழந்தைகள் நலத்துறை, முடநீக்கியல் துறை, பொது அறுவைச்சிகிச்சை துறை, மயக்கவியல் துறை, தோல் நோய் மருத்துவம், பால்வினை நோய் பிரிவு, நுண்கதிர் வீச்சுத்துறை, நரம்பியல் துறை, 24 மணிநேர ஆய்வக கூடம், 24 மணிநேர ரத்த வங்கி ஆகியவை உள்ளன. இங்கு செவிலியர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகின்றன.

அவசர சிகிச்சை பிரிவு, அறுவைசிகிச்சை பிரிவு, TAIE அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நல பிரிவு, முதியோர் மருத்துவ பிரிவு, நீரிழிவு சிகிச்சை பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு என 10-க்கும் மேற்பட்ட துறைகள் சிறப்பாக இயங்குகிறது. இங்கு மொத்தம் 150 மருத்துவர்கள், 143 செவிலியர்கள் மற்றும் 159 அரசு மருத்துவ பணியாளர்கள், தற்காலிக பணியாளர்கள் 250 பேர் இங்கு பணிபுரிகிறார்கள். இந்த மருத்துமனைக்கு ஒரு நாளைக்கு புற நோயாளிகளாக சுமார் 4000 பேரும், உள்நோயாளிகளாக 1,200 பேரும் அவசர பிரிவில் ஒரு நாளைக்கு 250 பேரும் பயன்பெறுகிறார்கள். இங்கு உள்நோயாளிகளுக்கு தரமான முறையில் உணவும் வழங்கப்படுகிறது’’ என்கிறார்.

மனநல மருத்துவ பிரிவில் பணிபுரியும் டாக்டர் சுதாகரிடம் பேசினோம்...
‘‘இந்த மருத்துவமனை 1965-ல் தொடங்கும்போது மனநல சிகிச்சை பிரிவோடு தொடங்கியது. இன்று வரை சிறப்பாக இயங்குகிற துறையாக மனநல மருத்துவப் பிரிவு இருக்கிறது.

இங்கு மனநோயாளிகள் குடிபோதை மனநோயாளிகள், உளவியல் ரீதியான மனநோயாளிகள், பெண்கள், குழந்தைகள், மூளை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என தனித் தனியாக சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு புறநோயாளிகள் 200-க்கும் மேற்பட்ட வர்கள் வருகிறார்கள். உள்நோயாளிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இங்கு உள்நோயாளிகளாக இருப்பவர்களுக்கு அனைத்து நவீன சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. உளவியல் சிகிச்சை, மருந்து மாத்திரை சார்ந்த சிகிச்சை, மின்கதிர் சிகிச்சை என அனைத்து சிகிச்சைகளும் அளிக்கிறோம்.’’
அவசர சிகிச்சை பிரிவு பற்றி டாக்டர் வளர்மதியிடம் பேசினோம்...

 ‘‘அவசர சிகிச்சைப் பிரிவு என்பதால் 24 மணிநேரமும் சிறப்பாக இயங்கும் பிரிவாக இருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட
புறநோயாளிகள் தினமும் அவசர சிகிச்சை பெறுகிறார்கள். இதில் சாலை விபத்தால் மட்டும் 70 சதவீதத்தினர் அவசர சிகிச்சை பெறுகிறார்கள். இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அவரின் உடல் பாதிப்புக்கு ஏற்ப உடனடியாக சிகிச்சை அளிக்க கூடிய வசதி இங்கு உள்ளது. தலையில் காயம் பட்டு வருகிறவர்களுக்கு நியூரோ சிகிச்சை  வசதி இங்கு இல்லாததால் அவர்களுக்கு ஆரம்பகட்ட சிகிச்சை அளித்து அவர்களை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம்.

இந்த அவசர சிகிச்சை பிரிவில் 7-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் இருக்கிறோம். மேலும் TAIE என்கிற அவசர சிகிச்சை பிரிவும் இங்கு செயல்படுகிறது. அதாவது நோயாளி விபத்துக்குள்ளானதும் அவருடைய பாதிப்பின் விவரத்தை தொலை பேசி மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் நாங்கள் நோயாளி வருவதற்கு முன்பு அவருக்கு சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தி அவர் வந்தவுடன் உரிய சிகிச்சை அளிக்கிறோம். இதனால் உயிரிழப்புகளை தடுக்க முடியும். இதற்காக பி.ஏ.ஐ தொலைபேசி நம்பர் இருக்கிறது. 93848 11232 இந்த நம்பருக்கு போன் செய்து, விபத்துக்குள்ளானவரின் அருகில் இருப்பவர் போன் செய்து முன்கூட்டிய தயாரிப்பு மருத்துவத்தின் மூலம் பயன்பெறலாம்’’ என்கிறார்.

எல்லம்மாள் (நர்சிங் சூப்பிரடெண்ட்)‘‘சின்ன வயதில் மருத்துவமனைகளுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கிருந்த நர்ஸுகளின் வெள்ளை யூனிஃபார்மை பார்த்த பிறகு செவிலியர் வேலையில் ஆர்வம் வந்தது. நோயாளிகளுக்குச் சேவை செய்வதால், ஒருவிதமான மன திருப்தி கிடைக்கும். அதனால், நர்சிங் கோர்ஸ் முடித்ததும் 1993-ம் வருடம் இவ்வேலையில் சேர்ந்தேன்.

இங்கு செங்கல்பட்டு மருத்துவமனையில், சுமார் 25 வருடங்களாக செவிலியராகப் பணியாற்றி வந்தேன். சமீபத்தில்தான் செவிலியர் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு கிடைத்தது. நர்ஸாக வேலையில் சேர்ந்தது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், இது வேலை என்பதைத் தாண்டி மற்றவர்கள் மீது கவனம் செலுத்தி அக்கறையுடன் பார்க்க வேண்டிய வேலை என்பதை உணர்ந்து என்னுடைய குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதனால்தான், எந்த நேரமும் மனதளவி சாந்தா (புறநோயாளி - செங்கல்பட்டு)
‘‘எனக்கு தலைவலி அதிகமாக இருப்பதால் சிகிச்சை பெற வந்திருக்கிறேன்.

காலையில் OP சீட்டு சீக்கிரமாக கொடுத்து விடுகிறார்கள். அதன் பின்பு டாக்டரை பார்ப்பதற்கும், மருந்து வாங்குவதற்கும் ரொம்ப நேரம் ஆகிறது. ரொம்ப கூட்டமாகவும் இருக்கிறது. நோயாளிகளின் கூட்டத்திற்கு தகுந்த மாதிரி டாக்டர்கள் போதுமான அளவில் இல்லை. அதனால் அவர்களிடம் சண்டை போடுவதிலும் பயன் இல்லை என்று நினைக்கிறேன். முக்கியமாக இங்கு குடிநீர் வசதி ஒழுங்கா இல்லை. டாக்டரைக் கவனிக்கிறதுல எந்தக் குறையும் இல்லை’’ என்கிறார்.

குழந்தைகள் நல பிரிவு பற்றி டாக்டர் டயானா கிரேஸ் பேசுகிறார். ‘‘பீடியாட்ரிக் பிரிவு, பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டு, குழந்தைகளுக்கான பிரிவு என இரண்டு தனித்தனி பிரிவுகளாகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தைகள் வார்டில், பிறந்தது முதல் 28 நாட்கள் வரை ஆன சிசுக்களை பராமரித்து வருகிறோம். சுகப்பிரசவத்தில் பிறக்கிற குழந்தைகள் மற்றும் எடை குறைவாக பிறக்கிற குழந்தைகள் ஆகியோரை நியோ நேட்டாலஜி வார்டில் வைத்திருப்போம். சுகப்பிரசவத்தில் பிறக்கிற குழந்தைகளில், சில குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நச்சுநீரைக் குடித்தல், அழாமல் இருத்தல் போன்ற பாதிப்புகள் இருக்கும்.

எடை குறைவாக பிறக்கிற குழந்தைகள் 700 கிராம், 800 கிராம் என சராசரி உடல் எடையைவிட அண்டர்வெயிட்டில் குழந்தைகள் என இரு தரப்பினரையும் மருத்துவமனையில் சேர்த்து கண்காணித்து வருகிறோம். அது மட்டுமில்லாமல், என்ன மாதிரியான பிரச்னைகள் அவர்களுக்கு உள்ளன, என்ன மாதிரியான பாதிப்புகள் தாய்க்கும், சிசுக்கும் வரக்கூடும் என்பதை முன்னரே, தீர்மானித்து அதற்கேற்றவாறு சிகிச்சைகள் தந்து, இருவரும் முழுவதுமாக குணமான பின்னர்தான் டிஸ்சார்ஜ் செய்கிறோம்.

இங்கு ‘கங்காரு மதர் கேர்’ என்ற சிறப்பு பிரிவு ஒன்று உள்ளது. பிரசவத்துக்குப் பின்னர், இளம் தாய்மார்கள் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு, இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள். அதன்பிறகு, எடை குறைவாக உள்ள சிசுக்களின் அம்மாக்களை இங்கே வரவழைப்போம். தாய்-சேய் இருவரையும் ஒன்றாக தங்க வைப்போம். அந்த சமயங்களில், தாயின் மார்பை அணைத்தவாறு குழந்தைகளை இருக்க செய்வோம். கதகதப்பான சூழலில், பச்சிளம் குழந்தைகள் தொடர்ந்து பால் குடிப்பதால், நாளடைவில் அவற்றின் உடல் எடை கணிசமாக அதிகரிக்கும். இதற்கென்று தனியாக வார்டு உள்ளது.

பிரசவத்துக்குப் பிறகு, சில பெண்களுக்குப் பால் சரியாக சுரக்காது. வேறு பலர் உடல்நிலை காரணமாக, சரியாக பால் புகட்ட முடியாமல் கஷ்டப்படுவார்கள். இக்குறைபாட்டைச் சரி செய்வதற்காக, அண்மையில், தாய்ப்பால் வங்கியைப் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தொடங்கி, செயல்படுத்தி வருகிறோம். இளம் தாய்மார்களிடம் இருந்து பெறப்பட்ட பால் இங்கு சேகரித்து வைக்கப்படுகிறது. தாய்ப்பால் கிடைக்காமல் அவதிப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த வங்கி மூலமாக பால் கொடுத்து பராமரித்து வருகிறோம்.

நுரையீரல் சளி, வைரஸ் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் அதிகளவில் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். குழந்தைகளுக்குச் சிறுநீரக பாதிப்பு உள்ளதா? என்பதைக் கண்டறிய, டயாலிசிஸ் யூனிட் ஒன்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. எங்களிடம் சிகிச்சைக்காக வருகிற குழந்தைகளின் உடல் நலத்தைத் தொடர்ந்து கண்காணிக்க District Early Intervention Center இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இம்மையத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து ஆலோசனை வழங்குவார்கள். பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியரின் ஆரோக்கியத்தில் உணவு முக்கியமான இடம் பெறுகிறது.

எனவே, பெற்றோர்களுக்கு உணவு பாதுகாப்பு பற்றி கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். குளிர் காலங்களில், இனிப்பு வகைகள், குளிர் பானங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. நொறுக்குத் தீனிகள், துரித உணவுகள் சாப்பிடுவதால், உடல் பருமன் அதிகரிக்கும். இதனால், குழந்தைகளுக்குச் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வரலாம். இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் பாதிப்பு அடையும். எனவே, உணவு விஷயத்தில் விழிப்புணர்வு வர வேண்டும். மருத்துவர்கள் சொல்வதோடு, ஆசிரியை, ஆசிரியர்கள் இது பற்றி சொன்னால், பெற்றோர்களும், குழந்தைகளும் நிச்சயம் கேட்பார்கள்’’ என்கிறார்.

அறுவை சிகிச்சை துறை பற்றி டாக்டர் செல்வராஜிடம் கேட்டோம்...
‘‘1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவக் கல்லூரியில், 1982-ம் ஆண்டு மாணவனாகச் சேர்ந்தேன். அப்போது, ஒரேயொரு பில்டிங்தான் இருந்தது. அறுவை சிகிச்சைக்கென ஓர் ஆபரேஷன் தியேட்டர்தான். நான்கு யூனிட் செயல்பட்டு வந்தது. எனவே, அவர்களை மாற்றிமாற்றி அறுவை சிகிச்சை செய்து வந்தோம்.

இப்போது, சர்ஜிகல் பிளாக் எனத் தனியாக உள்ளது. 6 யூனிட் இருக்கிறது. தற்போது, இந்த துறையில் 6 பேராசிரியர்கள், 13 உதவிப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆசன வாய், பெருங்குடல் போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டு கீழ்பகுதி வழியாக ரத்தம் வெளியேறினால், அதனை சரி செய்ய Colonoscopy முறை பயன்படுத்தப்படுகிறது.

எங்களுடைய மருத்துவமனையில், 2012-ம் ஆண்டில் இருந்து லேப்ரோஸ்கோப்பி முறையிலும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த டிரீட்மென்டில், பித்தப்பை கற்கள், குடல் வால் தொற்று போன்றவை சரி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு முன்பு எல்லாமே ஓபன் சர்ஜரிதான்.

முதலில் ஒரேயொரு Intensive Care Unit-தான் இருந்தது. அதில்தான், மகப்பேறு, பொது அறுவை சிகிச்சை எல்லாமே நடந்து வந்தது. இப்போது, சர்ஜரிக்கு என்றே தனி ICU உள்ளது. சீரியஸாக உள்ள நோயாளியை வென்டிலேட் வசதியுடன் இரண்டு, மூன்று நாட்கள் வைத்து காப்பாற்ற முடியும். முன்னெல்லாம் இந்த வசதி கிடையாது. சர்ஜரி பண்ணிய பிறகு ஜெனரல் வார்டில்தான் பேஷன்டை வைப்போம். இதுதவிர Post Opertative Ward தனியாக உள்ளது.

ஆப்ரேஷன் பண்ண பிறகு, கொஞ்ச நாளுக்கு பேஷன்ட்டை இங்கே வைத்து கண்காணிப்போம். முழுக்கமுழுக்க ஏ.சி. என்பதால், நோயாளிக்கு வலி குறைவாக இருக்கும். அது மட்டுமில்லாமல், வசதியாக இருப்பதாக உணர்வார்கள். இதற்காக, எவ்வித கட்டணமும் வசூலிப்பது இல்லை. முற்றிலும் இலவசம்’’ என்கிறார்.

மணி (கல்பாக்கம் - உள்நோயாளி)‘‘ஆந்திராவில் நெல் மில்லில் பணியாற்றும் போது எனக்கு மின்சாரம் தாக்கி என்னுடைய தலை வெந்துபோச்சி. மருத்துவர்கள் மண்டை ஓட்டை அகற்றிவிட்டு எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார்கள். இந்த சிகிச்சையை ஒரு மாதத்திற்கும் மேலாக பெற்றுவருகிறேன். பாத்ரூம் டாய்லெட் வசதி பரவாயில்லை. இங்கு தரும் உணவு எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் வெளியில் இருந்து வாங்கி சாப்பிடுகிறேன்.’’

- விஜயகுமார், க.இளஞ்சேரன்
படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்