ப்ரொக்கோலி ஸ்பெஷல்



உணவே மருந்து

ஐரோப்பிய நாடுகள் முதலான மேலை நாட்டு உணவுப்பண்டம் என்றாலே எங்கும், எப்போதும் அதற்கு ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் ப்ரொக்கோலி இப்போது அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளின் காய் என்பதால் இதை உபயோகிக்கும் விதம், இதில் காணப்படுகிற சத்துக்கள் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரிவது இல்லை. இது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் வினிதா கிருஷ்ணன் விவரிக்கிறார்...

* மேலை நாட்டைப் பின்புலமாகக் கொண்ட ப்ரொக்கோலி முட்டைக்கோஸ்(Cabbage) குடும்பத்தைச் சார்ந்தது.

* இன்று எல்லாவிதமான உணவுகளையும் ஃப்ரிட்ஜில் இரண்டு, மூன்று நாட்கள் வைத்து
சாப்பிடும் வழக்கம் காணப்படுகிறது. அதுபோல் ப்ரொக்கோலியையும் ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், சமைப்
பதற்கு எடுக்கும்போது சுத்தமான தண்ணீரில்
நன்றாகக் கழுவினால் போதும்.

* சமைப்பதற்கு முன்னரே சுத்தம் செய்யக் கூடாது. அப்போதுதான், இதில் காணப்படுகிற ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்கும். எந்தக் காரணத்துக்காகவும் ப்ரொக்கோலியை வெளியே வைக்கக் கூடாது.

*சிறு குழந்தைகள் தொடங்கி, முதியோர் வரை அனைத்து வயதினரும் பரொக்கோலி சாப்பிடலாம். தாய்மை அடைந்த பெண்கள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு இது சிறந்த உணவாகும்.

* உடல் பருமன், கொலஸ்ட்ரால், நீரிழிவு போன்றவற்றுக்கு இக்காய்கறி மிகவும் ஏற்ற உணவாகும். ஏனென்றால், இதில் கார்போ ஹைட்ரேட் குறைவாக காணப்படும். பரொக்கோலியில் அல்சர் காம்போனட்ஸ்(Ulcer Components) ஏராளமாக உள்ளன. எனவே, பெருங்குடல்(Colon) மற்றும் நுரையீரலில் உண்டாக்குகிற புற்றுநோய் வராமல் தடுக்க இதனால் முடியும்.

* பெண்களைப் பாதிக்கிற கர்ப்பப் பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மை இக்காய்கறியில் அதிகம் உள்ளதாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. சருமம் தொடர்பான பிரச்னைகளுக்கும் இது ஏற்ற உணவாக திகழ்கிறது.

* எலும்பு முறிவைத் தடுக்க உதவும் வைட்டமின்-கே ப்ரொக்கோலியில் அதிகளவில் காணப்படுகிறது. இவை தவிர சரும நலன் காக்கும் வைட்டமின் ஏ மற்றும் இ யும் அதிகம் உள்ளன.

* நம்முடைய அன்றாட உணவில், ஒரு கிண்ணம் ப்ரொக்கோலியை சேர்த்துக் கொண்டால், ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் - கே சத்து கிடைத்து விடும்.

* தோலில் ஏற்படுகிற சுருக்கம், தோல் தளர்ந்து போதல்(Collagen) போன்ற குறைபாடுகளை சரி செய்யவும் ப்ரொக்கோலி உதவுகிறது.

* ப்ரொக்கோலியில் நமது உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டசத்துக்கள் ஏராளமாக உள்ளன. உதாரணத்துக்கு, எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்தும் கால்சியம் 43 மில்லி கிராம் உள்ளது. ஒரு கப் ப்ரொக்கோலியில் வைட்டமின் சி 81 மில்லி கிராம் உள்ளது.

* உடலில் காணப்படுகிற நச்சுப்பொருட்களை வெளியேற்றி, செரிமானத்துக்கு உதவும் ப்ரொக்கோலியில் நார்சத்து அதிகமாக உள்ளது.

* ஆன்டி-ஆக்சிடென்ட் இதில் ஏராளமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, நம்மை முழு ஆரோக்கியத்துடன் வாழ வழி செய்கிறது. மேலும், எல்லாவிதமான ஒவ்வாமையையும் குறைக்க உதவுகிறது.

* கீல்வாதம்(Arthritis) ஏற்படாமல் தடுக்க உதவும் Omega-3 Fatty Acid ப்ரொக்கோலியில் ஏராளமாக காணப்படுகிறது. இந்தக் காய்கறி, மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது.

* Cataract போன்ற கண் பார்வை தொடர்பான குறைபாடுகளைச் சரி செய்ய உதவும். ப்ரொக்கோலி சூப் செய்தும், சாலட்டாகவும் சாப்பிடலாம். சாண்ட்விச்சுடன் சேர்த்தும் உண்ணலாம்.

தொகுப்பு : விஜயகுமார்