மாலை நேரத்து மயக்கம்



வணக்கம் சீனியர்

மாலை நேரம் வந்துவிட்டாலே பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்லும் சந்தோஷமான மனநிலைக்கு வந்துவிடுவோம். பகல் முழுவதும் ஆற்றல் செலவழிக்கப்பட்டு, மாலையின் நிதானமான இயல்பிற்கு ஏற்ப, உடல் மாறும் தருணம் அது என்பதால் மனதுக்கு இதமான மாலை வேளையை நாம் அனைவருமே கொண்டாடி வரவேற்கிறோம்.
ஆனால், எல்லோருக்கும் மாலை நேரம் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை.
குறிப்பாக முதியோருக்கு மாலைப் பொழுது பதற்றமானதாக அமைந்துவிடுகிறது. குழப்பம், கிளர்ச்சி மற்றும் அதீதமாக கோபப்படும் ஒரு நேரமாக மாலை வேளை அவர்களுக்கு அமைந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம் என்று மன நல மருத்துவர் வசந்தா ஜெயராமனிடம் கேட்டோம்...

முதியவர்களைக் கூர்ந்து கவனித்தால் மதியத்துக்குப் பின், மாலை நெருங்கும் வேளைகளில் அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்டறிய முடியும். இதை நாங்கள் Sun downing அல்லது Sundown syndrome என்கிறோம். குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து, ‘காலையில் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள், சாயங்கால நேரத்தில் மட்டும் இப்படி நடந்து கொள்கிறார்களே, வேண்டும் என்றே இப்படி செய்கிறார்களா? என்று எங்களிடம் கேட்கிறார்கள்.

உண்மையில், டிமென்ஷியா நோயாளியின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அவரின் உள் உடல் கடிகாரத்தை’ பாதிப்பதாக உளவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நீங்கள் விழித்திருக்கிறீர்கள் அல்லது நித்திரையில் இருக்கிறீர்கள் என்பதை அடையாளம் காணும் மூளைப் பகுதியானது அல்சைமர் நோயாளிகளிடத்தில் சேதமடைந்துவிடுகிறது. 

இதற்கான அறிகுறிகள்...
உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் மிகவும் சோர்வாகவோ, மன அழுத்தத்தாலோ அல்லது தூக்கமின்மையால் வதிப்பட்டுக்கொண்டிருந்தாலோ அவர்களுக்கு இந்த சன் டவுன் சிண்ட்ரோம் இருக்கலாம். எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, அமைதியற்ற நிலை, எரிச்சலடைவது, குழப்பமான மனநிலை, நிலை தடுமாறுதல், சந்தேகப்படுவது அல்லது கேள்விகளாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அதுமட்டுமில்லாமல்,  ‘திடீரென்று சத்தம் போடுவது, அங்கும் இங்குமாக பரபரப்பாக நடப்பது; இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்வது; அடிக்கடி மாறும் மனநிலை என வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். அல்ஸைமரோ, டிமென்ஷியாவோ இல்லாத வயதானவர்களும் இதுபோல் நடந்து கொள்ளலாம்.

இவர்களை எப்படி சமாளிப்பது?

உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்கள் வித்தியாசமாக நடந்து கொண்டால், அவர்களோடு வாதிடாமல், அவர்களை மிரட்டாமல் பணிவாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு’ போன்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளை அவர்களிடம் சொல்ல வேண்டும். அவர்களுக்கு உதவி தேவைப்படும் வேளைகளில் கனிவோடு செய்ய வேண்டும். அவர்களாகவே செய்யும் வேலைகளையும் தடுக்காமல், உங்கள் கண்காணிப்பில் செய்ய விடலாம்.

உணவு, தூக்கம் இரண்டிலும் நேரம் தவறாமை இவர்களுக்கு முக்கியம். என்னென்ன விஷயங்கள் இவர்களைத் தூண்டுகிறது என்பதை கண்டறிந்து அவற்றை தவிர்ப்பது அல்லது குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காலை எழுவது, குளிப்பது, உடற்பயிற்சி செய்வது, வாக்கிங் போவது போன்றவற்றில் தொடங்கி, இரவு தூங்கப்போகும் நேரம் வரை எல்லாவற்றிலும் அவர்களுக்கான நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். நிம்மதியான தூக்கம் அவர்களுக்கு முக்கியம். தூக்கம் கெட்டால், அவர்களுடைய பிரச்னை அதிகமாகிவிடும்.

காபி, புகை, மது போன்ற பழக்கங்கள் அவர்களின் தூக்கத்தை கெடுப்பவை. அதனால் மாலை நேரங்களில் அவற்றை தவிர்க்க வேண்டும். காலை, மதிய நேரங்களைவிட மாலை நேர உணவை மிதமாக எடுத்துக் கொள்வது நல்லது. கூடியவரை 6 மணிக்கு முன்னதாக இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும். 4 மணி நேர்த்துக்கு முன்பு குட்டித் தூக்கம் போடுவதோ, உடற்பயிற்சி அல்லது வாக்கிங் போவதோ கூடாது.

சூரிய ஒளி மறைந்து, நேரம் ஆக, ஆக இருள் பரவ ஆரம்பிக்கும்போது இவர்கள் நடத்தையில் வேகம் தூண்டப்படுவதால், வீட்டினுள்ளே நல்ல வெளிச்சமாக வைத்துக் கொள்வது நல்லது. இருட்டாக இருக்கும் அறை இவர்களின் பயத்தை மேலும் அதிகப்படுத்தும். இரவு முழுவதும் மெல்லியதாக ஒளி பரப்பும் விளக்குகளை எரிய விடவேண்டும். அறையின் வெப்பம் அவர்களுக்கு செளகரியமானதாக இருக்க வேண்டும்.

வீட்டில் குழந்தைகள் போடும் சத்தம், இளையவர்கள் சத்தத்தோடு கேட்கும் இசை, தொலைக்காட்சி பெட்டியின் ஒலி முதியவர்களுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தும். சிறியவர்களுக்கு புரிய வைத்து குறைத்து வைக்கச் சொல்லுங்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் முதியவர்களுக்கு வரும் இந்த பிரச்னையைப் புரிந்து கொண்டு, அவர்களோடு இணக்கமாக நடந்து கொண்டால் அவர்களை சமாளித்து விடலாம். நிலைமை மிகவும் மோசமாக இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வதில் தாமதிக்க வேண்டாம்.

- உஷா நாராயணன்