ஹெல்த் காலண்டர் சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...

சர்வதேச புற்றுநோய் தினம் பிப்ரவரி 4


புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, மருத்துவம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, புற்றுநோயால் ஏற்படும் சமூக ஒதுக்கத்தை நீக்குவது, புற்றுநோயை எதிர்த்து போராடுவது போன்றவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் நாள் சர்வதேச புற்றுநோய் தினம் (Word Cancer Day) கடைபிடிக்கப்படுகிறது.

தனி நபர், குடும்பம் மற்றும் சமுதாயத்தின் மீது ஏற்படும் புற்றுநோய் தாக்கத்தின் பளுவைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு மக்கள் அனைவரையும் வலிமைப்படுத்துவதும் இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கமாக உள்ளது. மரபியல் பிறழ்ச்சி போன்ற மரபியல் சார்ந்த காரணிகள், சூழலியல் காரணிகள் அல்லது அறியப்படாத காரணிகளாலும் புற்றுநோய் உருவாகலாம்.

இவற்றில் சிலவற்றைத் தடுக்கலாம், சிலவற்றைத் தடுக்க இயலாது. ஆனால் சில புற்றுநோய்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் புகையிலை, மது போன்ற ஆபத்துக் காரணிகளைத் தவிர்ப்பதன் மூலம் வராமல் தடுக்கலாம். வேதிச்சிகிச்சை, கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன மருத்துவ முன்னேற்றங்களைக் கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்தலாம். முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், மருத்துவத்தின் மூலம் நோயாளியால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியும்.

தற்போது உலகளவில் புற்றுநோய் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இது அதிகமாகப் பேசப்படும் ஒரு பயங்கரமான நோயாகவும், மரண பயத்தோடு இணைந்த நோயாகவும் கருதப்படுகிறது. புற்றுநோய்க்கு மருத்துவத்தின் மூலம் முழுமையான ஒரு தீர்வு கிடைக்காவிட்டாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் இந்த நோயோடு இணைந்துள்ள சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துக் காரணிகளை நம்மால் குறைக்க முடியும்.

நோய் குறித்த சொந்த அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும். ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல் மூலம் உரிய சிகிச்சைகள் அளித்து உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம்.

தேசிய குடற்புழு நீக்கும் தினத்தை (National Deworming Day) இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 2015-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கத் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் பிப்ரவரி 10-ம் நாள் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்து அவர்களுக்கு நல்ல உடல்நலமும் சிறந்த வாழ்க்கையும் அளிப்பதே இந்த நாளை அனுசரிப்பதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

குடற்புழுக்களை நீக்கும் பூச்சி மருந்து இலவசமாக பள்ளிகளிலும், அங்கன்வாடி மையங்களிலும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தியாவில் 1 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 24.1 கோடி சிறுவர்கள் மாசு கலந்த மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று ஆபத்துடன் வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இப்படி மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று (Soil-transmitted helminths-STH) ஒருவருடைய வளர்ச்சி
யிலும், உடல் உருவாக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

STH தொற்றுள்ள நபரின் ஊட்டச்சத்து நிலையில் ஏற்படும் பாதிப்புகள்

* மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று ஏற்பட்டுள்ள நபரின் ரத்தம் மற்றும் திசுக்களை அந்த புழுக்கள் உண்பதால் அந்த நபர்களுக்கு இரும்பு மற்றும் புரத இழப்பு உண்டாகிறது.

* இந்த புழுக்கள் குடலில் ஊட்டச்சத்து உறிஞ்சலைப் பாதிக்கின்றன. உருண்டைப் புழுக்கள் குடலுக்குள்
வைட்டமின் ஏ-வை பெறுவதற்கு போட்டியிடுகின்றன.

* சில வகை குடற்புழுக்களால் பசியின்மை உண்டாகிறது. இதனால் ஊட்டச்சத்து உள்ளெடுப்பில் குறைபாடும், உடல்தகுதிக் குறைவும்
ஏற்படுகின்றன.

*இவ்வகை புழுக்களால் வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு ஏற்படும் ஆபத்துகளும் அதிகரிக்கிறது.
STH தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்

* மண் மூலம் பரவும் குடற்புழு தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதற்கு, சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.

* உணவு உண்பதற்கு முன்னும், கழிவறையைப் பயன்படுத்திய பின்னும் சோப்பு மற்றும் நீரைப் பயன்படுத்தி கைகளை சரியான முறையில் கழுவ வேண்டும்.

* பாதுகாப்பான காலணிகளை அணிய வேண்டும்.

* பச்சைக் காய்களையும் பழங்களையும் சுத்தமான நீரில் நன்கு கழுவி உண்ண வேண்டும்.

* திறந்த வெளியில் மலம் கழிக்காமல் கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

* கை மற்றும் கால்களிலுள்ள நகங்களை வெட்டிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை சரியான முறையில் கடைபிடிப்பதன் மூலம் குடற்புழு தொற்றினைத் தடுத்து ஆரோக்கியமாக வாழலாம்.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 12-ம் நாள் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார விழிப்புணர்வு தினம் (Sexual and Reproductive Health Awareness Day) கடைபிடிக்கப்படுகிறது. பாலியல் மற்றும் இனப்பெருக்கப் பிரச்னைகள் பற்றிய கல்வியை மக்களுக்குப் புகட்டி பால்வினை நோய் பரவலைக் குறைப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

பால்வினைத் தொற்று நோய்கள் பெரியளவிலான பொது சுகாதாரப் பிரச்னைகளில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்த பிரச்னைகளைத் தடுப்பதற்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகள், பிரச்சாரங்கள் மேற்கொள்வதோடு, அந்த பிரச்னைகள் தீவிரமடையாதவாறு தடுத்து உயிர்களைக் காப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

பால்வினை சுகாதாரம் என்பது ஒரு நபரின் உடல், மனம் மற்றும் சமூகநல நிலை போன்றவற்றை உள்ளடக்கியது என்கிறது உலக சுகாதார நிறுவனம். பாலுறவை நேர் சிந்தனையோடும் கண்ணியத்தோடும் அணுக வேண்டும். இன்பம் அளிப்பதோடு பாதுகாப்பான அனுபவமாகவும் அந்த பாலுறவு இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதில் வற்புறுத்தலும், பாரபட்சமும், வன்முறையும் கண்டிப்பாக இருக்கக் கூடாது.

பால்வினை சுகாதாரம் என்பது பரந்துபட்ட ஒன்றாகும். அதற்குள் பல சவால்களும் பிரச்னைகளும் அடங்கியுள்ளன. பால்வினை சுகாதாரம் சம்பந்தமான மனித உரிமைகள், உடலுறவு இன்பம், பாலுணர்வு மற்றும் நிறைவு, பால்வினைத் தொற்று நோய்கள், இனப்பெருக்கப் பாதைத் தொற்று மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் போன்ற நோய்கள், வன்முறை, பெண்ணுறுப்பு சிதைத்தல், பாலியல் செயலிழப்பு, பாலியல் சுகாதாரத்தோடு தொடர்புடைய மனநலம் போன்ற அனைத்துமே கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகளாக இருக்கிறது.

பாலியல் மற்றும் இனவிருத்தி சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கவும், அந்தரங்க ஆலோசனை சேவைகளுக்காகவும் தேசிய மக்கள் தொகை நிலைத்தன்மை நிதியம் ஒரு தொலைபேசி இணைப்பைத் தொடங்கியுள்ளது. இனப்பெருக்க சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குழந்தைகள் நலம் பற்றிய அதிகாரப்பூர்வமான தொலைபேசி தகவலைப் பெற விரும்புபவர்கள் 1800-11-6555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தொலைபேசி உதவி தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கிடைக்கிறது.

பால்வினை சுகாதாரம், பால்வினை நோய்கள், கருத்தடை, கர்ப்பம், மலட்டுத்தன்மை, கருக்கலைப்பு, பின் மாதவிடாய் நிலை, பருவமடைதல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, ஆண்கள் மற்றும் பெண்களின் இனப்பெருக்க மண்டலம் செயல்படும் விதம் குறித்தும் உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு விளக்கமளிக்கின்றது.

இந்தியா போன்ற நாடுகளில் பால்வினை நோய்கள் என்பது ஒரு சமூக விலக்கான பிரச்னையாகவே தற்போதுவரை கருதப்பட்டு வருகிறது. மேற்சொன்ன தொலைபேசி இணைப்பு இது போன்ற தவறான கருத்துகளைப் போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நட்பு வட்டம், வலைத்தளம், வாய்வழி செய்தி பரிமாற்றத்தைக் காட்டிலும் சரியானதொரு இடத்திலிருந்து பெறும் ஆலோசனையாக இருப்பதால் பொதுமக்கள் இச்சேவையை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

 தொகுப்பு: க.கதிரவன்