வலிப்பினை அறிய வாண்ட் கருவி



மகிழ்ச்சி

இதயம் இயங்குவதற்குத் தேவையான மின் துடிப்புகள் சீராக இல்லை என்றால் அதை சீராக்க பேஸ் மேக்கர் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. அதேபோல மூளையில் மின் அலைகள் தாறுமாறாக ஏற்பட்டு வலிப்பு வரும் போது அதை சீராக்க  வாண்ட் என்கிற புதிய கருவியை கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மூளையில் எண்ணங்களையும், உணர்வுகளையும் உருவாக்குவதில் மிக மெல்லிய மின் அலைகள் பெரும் பங்கு  வகிக்கின்றன. இந்த மின் அலைகள் தாறுமாறாகிவிட்டால் நோயாளிக்கு வலிப்பு ஏற்படுகிறது. வலிப்பு தாக்கும்போது  நோயாளிக்கு அருகே மருத்துவர் இருக்க முடிவதில்லை. இந்த சிக்கலை இந்தப் புதிய கருவி தீர்க்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

மூளை மீது பதிய வைக்கும் உணரிகள் மற்றும் மின் முனைகள் மற்றும் தலையின் வெளிப்பகுதியில் பதிய வைக்கும்  கருவி என்று இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது இந்த வாண்ட் கருவி. இதிலுள்ள உணரிகள், மூளைக்குள் 128 இடங்களில்  ஏற்படும் வலிப்பு அலைகளை துல்லியமாக உணர்ந்து தலைக்கு வெளியே பதிக்கப்பட்டிருக்கும் வாண்ட் கருவிக்கு அனுப்புகிறது.

இதன் மூலம் ஒரு நோயாளிக்கு எந்தவிதமான வலிப்பு வந்துள்ளது என்பதை துல்லியமாக பதிவு செய்ய  முடியும். வலிப்பு சமிக்ஞை வரும்போதே இந்தக் கருவி மின் அலைகளை மூளைக்குள் பதியப்பட்டுள்ள மின் முனைகளுக்கு அனுப்புவதால் நோயாளிக்கு வலிப்பை உடனே நிறுத்திவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக நோயாளிக்கு ஏற்ற வகையில் சிகிச்சை தரும் அறிவை வாண்ட் கருவியிலுள்ள சில்லுக்கு தருவதற்கான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

- அஜி