சூடா ஒரு லெமன் கிராஸ் டீ...



உணவே மருந்து

அருகம்புல், கோதுமைப்புல் போல சமீபகாலமாக எலுமிச்சைப் புல்லும் பிரபலமாகி வருகிறது. பல இடங்களில் இதற்கான விளம்பரங்களும் அதிகம் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. மக்களால் பரவலாக விரும்பி சுவைக்கப்படும் பானமாகவும் லெமன் கிராஸ் டீ மாறி வருகிறது. லெமன் கிராஸ் டீயில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று டயட்டீஷியன் அம்பிகா சேகரிடம் கேட்டோம்...

* லெமன் கிராஸ் சுவையானது மட்டுமல்லாமல் மனித உடல்நலனுக்குத் தேவையான பல நல்ல விஷயங்களைக் கொண்டு இருப்பதால் தற்போது மக்கள் இதனை அதிகம் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழில் இதற்கு எலுமிச்சைப்புல்(Lemon Grass) என்று பெயர்.

* எலுமிச்சைப் புல்லின் அறிவியல் பெயர் Cymbopogon. இதன் தாயகம் இலங்கை மற்றும் தென் இந்தியா. தற்போது லெமன் கிராஸ் பல நாடுகளிலும் விளைவிக்கப்படுகிறது.

* எலுமிச்சைப்புல் எல்லா இடங்களிலும் வளர்வதில்லை. ஊட்டி, கொடைக்கானல், மூணாறு மாதிரியான குளிர்பிரதேசங்களில் மட்டும்தான் வளரும். பல்வேறு சிறந்த மருத்துவ குணங்கள் கொண்ட இந்த எலுமிச்சைப்புல்லில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த காரணத்தினால்தான் லெமன் கிராஸினை புற்றுநோய் மற்றும் பூச்சிக்கடி போன்ற பிரச்னைகளுக்காகத் தயாரிக்கும் மருந்துகளில் பயன்படுத்துகிறார்கள்.

* லெமன் கிராஸ் நல்ல வாசனை உடைய உணவுப்பொருள் என்பதனால் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், சூப் போன்ற உணவுப்பொருட்களை தயாரிக்கும்போதும் அதில் சேர்மானமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் நல்ல மணத்தின் காரணமாக ரூம் ஸ்பிரேக்கள் மற்றும் நறுமண பொருட்கள் தயாரிக்கும் முறையிலும் சேர்க்கப்படுகிறது.

* லெமன் கிராஸ் செரிமானக் கோளாறுகளை சரி செய்கிறது. நோய்த் தொற்றையும் தடுக்கும் ஆற்றலும் உடையது.

* லெமன் கிராஸ் பாக்டீரியாக்களை அழித்து, சுத்தம் செய்யும் தன்மை உடையது. இதன் காரணமாக இந்த புல் விளையும் இடங்களில் உள்ளவர்கள் பச்சையாக வாயில் போட்டு மெல்வார்கள். இது வாய் மற்றும் பல் ஆரோக்கியத்தை காக்கும். பற்குழிகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் வலிமை இதற்கு உண்டு.

* லெமன் கிராஸ் வலியை குறைக்கும் ஆற்றல் உடையது. அதனால் லெமன் கிராஸ் எண்ணெயை வலியை குறைக்கப் பயன்படுத்துகிறார்கள். ஸ்பாக்களிலும் அரோமா தெரபியிலும் இயற்கை மருத்துவத்திலும் தசை வலி, மூட்டு வலி போன்றவற்றை குறைக்க இந்த எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். மசாஜ் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.

* ஹோமியோபதியில் மன அழுத்தத்தைக் குறைக்கவும், தூக்கக் கோளாறுகளை சரி செய்யவும் இந்த எண்ணெயை பயன்படுத்து கிறார்கள்.

* லெமன் கிராஸ் எண்ணெய் அழகு சாதனப்பொருட்கள் மற்றும் இயற்கையாக சுத்தம் செய்யும் பொருட்களிலும் பயன்படுத்துகிறார்கள். தலைமுடியை பாதுகாக்கும் சிறந்த மாய்ச்சரைஸராகவும் பயன்படுகிறது. இது ஆன்டி பாக்டீரியல் என்பதால் கொசுக்கடி மற்றும் பூச்சிக்கடிகளுக்கு ரெப்பலண்டாகவும் பயன்படுத்துகிறார்கள்.

* நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை குறைக்கும் தன்மை உடையதால் சருமப் பிரச்னைகளுக்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் இதன் எண்ணெயை (நு)முகர்வதன் மூலம் தங்கள் டென்ஷனை குறைத்துக்கொள்ள பயன்படுத்துகிறார்கள்.

* லெமன் கிராஸில் தயாரிக்கப்படும் தேநீர் ரொம்பவே பிரசித்தம். பொதுவாகவே புத்துணர்ச்சிக்காக தேநீரை அருந்துவது மக்கள் வழக்கம். அதிலும் லெமன் கிராஸில் தயாரிக்கப்படும் தேநீர் சாதாரண தேநீரை விட அதிகமாக பதற்றத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டிருப்பதால் இப்போது நன்கு பிரபலமாகி வருகிறது.

* லெமன் கிராஸ் டீ பாதுகாப்பான முறையில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் தன்மை உடையது. இதனால் உடல் எடையைக் குறைக்க டயட் இருப்பவர்கள் இந்த டீயை விரும்பி அருந்துகிறார்கள். இதில் இரும்புச்சத்து அதிகமிருப்பதால் தொடர்ந்து லெமன் கிராஸ் டீயை அருந்தி வரும்போது உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும்.

* மற்ற பானங்களை விடவும் லெமன் கிராஸ் டீயைக் குடிக்கும்போது சிறுநீர் அதிகமாக வெளியேறும். எனவே, உடம்பில் அதிகம் நீர் சேர்ந்திருக்கும்போது இதை அருந்துவது உபயோகமாக இருக்கும்.

* இந்த செடியின் தண்டுகளை உணவில் நேரடியாக பயன்படுத்துவார்கள். லெமன் கிராஸின் உலர்ந்த இலைகளில் லெமன் கிராஸ் டீக்கான தூள்
எடுக்கப்படுகிறது.

* லெமன் கிராஸ் எண்ணெயை உள்ளே உட்கொள்ளக் கூடாது. உடலுக்கு வெளியே மட்டும் பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணெய் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம் என்பதால் அதனை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம். கை மூட்டியில் சிறிதளவு பயன்படுத்திப் பார்த்து எந்தவித பாதிப்புகளும் ஏற்பட வில்லை என்று உறுதி செய்த பின் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.  

* தலைக்குப் பயன்படுத்தும்போது கண்களில் படாதவாறு பயன்படுத்த வேண்டும். கண்களில் பட்டுவிட்டால் கண்களை உடனடியாக குளிர்ந்த நீரால் அலசி கழுவ வேண்டும். பின் மருத்துவரை கலந்தாலோசிக்கலாம்.

* பழங்கால இந்தியாவில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கைக் குறைக்க இதனை பயன்படுத்தி இருக்கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

- தொகுப்பு: சக்தி