ரசாயன அபாயத்திலிருந்து எப்படி தப்பிப்பது?!Centre Spread Special

பழங்கள் மிகச் சிறந்த உணவு என்பதில் எல்லாம் எந்த சந்தேகமும் இல்லை. குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிற உணவுதான். ஆனால், பழங்களில் தெளிக்கப்படும் நச்சுக்கொல்லிகள் என்பவை மிகவும் அச்சுறுத்தக் கூடிய ஒன்றாகவேதானே இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?!
- விளக்கமளிக்கிறார் இயற்கை மருத்துவர் கீர்த்தனா.

"மரத்தில் இருக்கும்போதே இருக்கும்போதே ரசாயனம் ஏற்றி பழுக்க வைக்கும் முறை, மரத்தில் இருந்து பறித்த பிறகு அவைகளைப் பதப்படுத்தி குடோனில் வைத்து ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கும் முறை என இரண்டுவிதமாக ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் சாதாரண வயிறு தொடர்பான நோய்கள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, சுவாசம் தொடர்பான பிரச்னைகள் என்பதிலிருந்து புற்றுநோய் வரை உண்டாக வாய்ப்பிருக்கிறது.

இந்த விஷயத்தில் விவசாயிகளும், வியாபாரிகளும் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். பழங்களை பதப்படுத்துவது, பழுக்க வைப்பதற்கென சில ரசாயனங்களை அனுமதிக்கப்பட்ட அளவில்தான் இருக்கின்றனவா என அரசு கண்காணிப்பது அவசியம். இவை ஒரு புறம் இருந்தாலும், நாம் பழங்களை பாதுகாப்பான முறைகளில் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களையே வாங்க வேண்டும். குறிப்பிட்ட பருவம் கடந்தும் விற்கப்படுகிற பழங்களை வாங்கக் கூடாது. கண்ணைப் பறிக்கும் வகையில் அதிக நிறத்துடனும், ஒரே மாதிரியான அளவில் இருக்கும் பழங்களையும் வாங்கக் கூடாது.
இயற்கையில் பழங்கள் அப்படி விளைவதில்லை... காட்சியளிப்பதுமில்லை.

பழங்களை வாங்கியவுடன் முதலில் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு வேறு சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். ஓடும் நீரில் கழுவுவது இன்னும் சிறப்பு. வாய்ப்பு கிடைப்பவர்கள் ஒரு கோப்பை வெள்ளை நிற வினிகரில் கழுவலாம்.

வினிகரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு, பழங்களை அதில் ஊற வைத்த பிறகு நல்ல தண்ணீரில் அலசி பயன்படுத்தலாம். இதேபோல் தண்ணீரில் 1 டீஸ்பூன் உப்பு போட்டு, ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றிய தண்ணீரிலும் பழங்களை ஊற வைத்து 15 நிமிடம் கழித்து பயன்படுத்தலாம்.

முக்கியமாக, தற்போது உள்ள சூழலில் பழங்களை தோல் சீவி பயன்படுத்துவதும் நல்லது. மெழுகைத் தடவியுள்ள பழங்களை லேசான வெந்நீரில் ஒரு டீ ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கை வைத்து அழுத்தினால் மெழுகு விலகிவிடும். மேலும் எலுமிச்சைப்பழம், உப்பு, வினிகர், பேக்கிங் சோடா போன்றவற்றை பயன்படுத்தி பழங்களை சுத்தம் செய்து சாப்பிடுங்கள். காய்கறிகளை மஞ்சள், உப்பு நீரில் 5 நிமிடங்கள் ஊற  வைத்து
கழுவிய பின்பு பயன்படுத்துங்கள்!"

-  க.இளஞ்சேரன்