தமிழர்களின் உணவுமுறை அறிவியல்பூர்வமானது!



சிறப்பு கட்டுரை

‘‘தமிழ் பண்பாட்டு உணவுமுறை கிடைத்ததை சாப்பிடுகிற வழக்கம் கொண்டதோ, சுவையின் அடிப்படையை மட்டுமே கொண்டதோ அல்ல. ‘காரணம் இல்லாமல் காரியம் இல்லை’ என்பார்கள் பெரியவர்கள். அதுபோல், நம்முடைய ஒவ்வொரு உணவுப் பழக்கத்தின் பின்னும் அறிவியல் பூர்வமான பல ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.

தமிழர் திருநாள் என்ற தை பொங்கலுக்கு எல்லோரும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், நாம் அனைவரும் அதை தெரிந்துகொள்வதும், மீண்டும் அவற்றைப் பின்பற்றுவதும் நம் ஆரோக்கிய வாழ்க்கைக்குப் பெரிதும் உதவும்’’ என்கிறார் சித்த மருத்துவர்
காசிப்பிச்சை.என்னென்ன வழிகளில் அறிவியல் பார்வை நம்மிடம் இருந்தது?

பார்ப்போம்...

காலை உணவு கஞ்சி மட்டுமே...

காலை உணவு கஞ்சி மட்டுமே என்கிற பழமொழி பண்டைய தமிழ்ச்சமூகத்தில் இருந்தது. புன்செய் நிலங்களில் விளையும் தானியங்களான கம்பு, சாமை, கேழ்வரகு போன்றவற்றில் செய்த கஞ்சி, கூழ் போன்றவையே அன்றைய காலை உணவாக இருந்தது. கேழ்வரகில் செய்த பால், கஞ்சி, கூழ் போன்றவை குழந்தைகளுக்கான உணவாகக் கொடுக்கப்பட்டு வந்தது.

இதுபோன்ற திரவ உணவுகளை குறைவாக எடுத்துக் கொண்டாலும், அதன் மூலம் நமது உடலுக்குத் தேவையான சத்துக்களும், ஆற்றலும் நிறைவாகக் கிடைத்தது. குறைவாக சாப்பிடுவதால் உணவு செரித்தலுக்காக வயிற்றுக்கு அனுப்பப்படும் ரத்த ஓட்டம் குறைவாகச் செல்கிறது. இது கை, கால்கள் போன்ற உடலின் மற்ற உறுப்புகளின் இயக்கத்துக்குத் தேவையான ரத்த ஓட்டம் சீராகச் செல்வதற்கு உதவுகிறது. இதன் மூலம் உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலும் நிறைவாக கிடைக்கிறது.

தமிழர்கள் பழங்காலத்தில் வரகு, தினை, குதிரை வாலி, சாமை போன்ற சிறு தானியங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கேழ்வரகுக் களி, சோளக்களி, கம்புக்களி, வெந்தயக் களி, உளுந்தங்களி போன்ற களி வகைகளை திட உணவாக எடுத்துக் கொண்டார்கள்.

மேலும் உடல் இளைப்பதற்கு, குழந்தைப் பேறுக்குப் பின் என்று பலவகையான மருத்துவ குணமுடைய கஞ்சிகளை பயன்படுத்தினார்கள். இதுபோன்ற
கஞ்சிகளும், களிகளுமே அவர்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கும், உடல் வலுவுக்கும் காரணமாக இருந்தது.

மதிய உணவு மதிக்கு உகந்தது மதிய வேளையில் தேவையான சத்துக்களும், ஆற்றலும் கிடைக்கக்கூடிய உணவு வகைகளை எடுத்துக் கொண்டார்கள். கம்பு, வரகு, சாமை மற்றும் அரிசி போன்றவற்றைச் சமைத்து சாப்பிட்டார்கள். அதோடு காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டார்கள்.

காய்கறி என்பதற்கு காயும் கறியும் என்று பொருள். காய் என்பது மரம், செடி, கொடிகளில் விளைகிற காய்களையும், கறி என்பது கறிக்காய் என்று அழைக்கப்படுகிற மிளகையும் குறிக்கிறது. பண்டைய காலத்தில் செய்கிற குழம்புகளில் காய்களோடு காரத்துக்காக மிளகையே பயன்படுத்தினார்கள். எந்த மாதிரியான விஷத்தையும் முறிக்கும் தன்மையுடையது மிளகு. இதைத்தான் அப்போது ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’ என்று சொல்லியுள்ளனர்.

இரவு உணவு இருட்டுக்கு முன்...

இரவு உணவு இருட்டுக்கு முன்பு என்று சொன்னதைப் போலவே மாலை வேளையிலேயே உணவருந்திவிடுவார்கள். அந்தக் காலத்தில் மின்சார வசதிகள் இல்லை என்பது காரணமாக இருக்கும் என்று நாம் மேலோட்டமாக நினைக்கலாம். விளக்கு வெளிச்சத்தில் சாப்பிட முடியாதா என்ன? இன்று நட்சத்திர ஓட்டலில் அரை இருளில் சாப்பிடுகிறார்களே...

விஷயம் அதுவல்ல. உறங்கச் செல்லும் 2 மணி நேரத்துக்கு முன்பு சாப்பிட்டிருப்போம். சீக்கிரம் உறங்குவதற்கு உடலும், மனமும் தயாராகிவிடும். இது அடுத்த நாள் அதிகாலையில் துயில் எழுவதற்கும் உதவி செய்யும். அதையே இன்று நவீன மருத்துவத்தில் மாலை 7 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.

மாலைநேர உணவுக்குப் பின்னர் போதிய நேரம் கழித்து தூங்கச் செல்வதால் குடல் உட்பட உடலின் பல உறுப்புகளுக்கும் போதுமான ஓய்வு கிடைக்கிறது. மாலை நேர உணவுக்குப்பின் அதிக நேரம் கழித்து அடுத்தநாள் காலை உணவு உட்கொள்ளும் சூழல் இருந்தது.

இப்படி அதிக இடைவெளிக்குப் பிறகு சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது நீராகாரமே. ஏனென்றால் அது வயிற்றின் அமில கார நிலையை சீராக வைத்துக் கொள்வதற்கு பெரிதும் துணைபுரிகிறது. உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு, அதை முடிக்கும்போது பழச்சாறு போன்ற திரவ உணவுகளைக் கொடுப்பதற்கு பின்னிருக்கும் அறிவியலும் இதுதான்.

உணவுப்பொருளின் தன்மையை உணர்ந்திருந்தார்கள்பண்டைய காலத்தில் ஒவ்வொரு உணவுப் பொருளும் எந்த மாதிரியான குணமுடையது என்பதை வகுத்து வைத்திருந்தனர். அதன்படியும், தன்னுடைய உடல்கூறுக்குத் தகுந்தபடியும் எந்த உணவை எந்தப் பருவத்தில் சாப்பிட வேண்டும் என்கிற வாழ்வியல் முறைகளைப் பகுத்தாய்ந்து சித்தவைத்திய நூல்களிலும், பண்டைய இலக்கியங்களிலும் எழுதி வைத்துள்ளனர்.

கேழ்வரகு, சாமை, கொள்ளு, அவரைக்காய் ஆகிய இந்நான்குமே தமிழ்நாட்டின் பிரதான உணவு வகைகளாக இருந்ததாக புறநானூற்றுப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது. பழந்தமிழர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள். இதனால் உணவே மருந்தாக அமைந்திருந்தது.

அவர்களுடைய சமையலறையில் மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி (தனியா), மஞ்சள் போன்ற மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன. உணவுப்பொருள் வேகும்போது அதன் சத்துக்கள் இழக்காமல் இருப்பதற்கு மஞ்சள்பொடி உதவுகிறது. மேலும் அது குடல் புண்ணை ஆற்றுவதோடு, கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

கறிவேப்பிலை கரைத்த நீர்மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். விசேஷ நேரங்களிலும், விருந்தினர்களுக்கும் வாழையிலையில் உணவு பரிமாறி சாப்பிடும் வழக்கம் இருந்தது.

உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கும் எல்லோருக்கும் ஏற்ற ஓர் உணவு என்று சாதாரண சோற்றையும், சின்ன வெங்காயத்தையும் தயிரில் ஊறவைத்து சாப்பிடுவதைக் கூறலாம். இந்த உணவோடு பச்சையான வெண்டைக்காயையும் சேர்த்து ஊறவைத்து சாப்பிட்டால் இன்னும் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும். இது உலகளவில் பலராலும் அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உணவுமுறை.

 உணவுக்கலவை விகிதம் நம் உணவினை அமிலவகை உணவுகள், காரவகை உணவுகள் என்று இரண்டு வகைப்படுத்துகிறோம். மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அமிலவகை உணவுகள் என்றும் நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை காரவகை உணவுகள் என்றும் வகைப்படுத்துகிறோம்.

நாம் சாப்பிடும் உணவுகளை 80% காரநிலை, 20% அமிலநிலை உணவுகளாக எடுத்துக்கொள்வதே சீரான உணவு செரிமானத்துக்கு உதவியாக இருக்கும்.
கறிவேப்பிலை, கடுகு, சீரகம், பூண்டு, மிளகு, மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் போன்றவை 80% காரநிலையுடைய பொருட்கள். இதுபோன்று நாம் உணவில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் பல்வேறு மருத்துவச் சிறப்புகளை உடையது.

உணவு செரிமானத்தின்போது வயிற்றில் சுரக்கும் நொதிகள் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் தன்மையை சரியாக மாற்றும் உணவு பதார்த்தங்களை உடையதாகவே நமது உணவுமுறை அமைந்திருக்கிறது.

உணவு உட்கொண்ட முறைகள்பழந்தமிழர்களிடத்தில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் பழக்கமிருந்தது. அவர்கள் 12 முறைகளில் உணவுப் பொருட்களை உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த வகைப்பாடுகள் அவர்கள் உட்கொண்ட உணவுப் பொருட்களின் தன்மை, உண்ணும் முறை, சுவை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தது.

1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக் கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5.தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்.
7. நக்கல் - நாக்கினால் துலாவி     உட்கொள்ளல்.
8. நுங்கல் - முழுவதையும் ஒரு வாயில்    ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளல்.
9. பருகல் - நீரியற் பண்டத்தை     சிறுகக் குடித்தல்.
10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளல்.
11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்து நன்கு மென்று உட்கொள்ளல்.
12.விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளல்.

இப்படி உணவுப் பொருட்களை உணர்வுகளோடு இணைந்து பலவிதமாக உட்கொண்ட பாரம்பரியமுடையது நமது உணவுமுறை. ஆனால், தற்போது அவசரகதியில் உண்ணுதல், கிடைத்ததை எல்லாம் தின்னுதல் என்ற பழக்கத்துக்கு ஆளானதால்தான் பல ஆரோக்கிய பிரச்னைகளுக்கும் ஆளாகி வருகிறோம். நல்லெண்ணெய் பயன்படுத்தியதற்கான காரணம்கெட்ட கொழுப்புகள் இல்லாததே நல்லெண்ணெய். நம் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் அதிகமுடையது என்பதாலேயே அதற்கு இந்தபெயர் வந்தது.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் நல்லெண்ணெயை உள்ளங்காலில் தேய்த்துவிட்டு சென்று படுப்பதால், கண்பார்வை தெளிவாக இருக்கும். இன்று முதல் நல்லெண்ணெய் பயன்படுத்தத் தொடங்கினால்கூட பல்வேறு நோய்கள் நம்மைவிட்டு நீங்கிவிடும். அது மட்டுமல்லாமல் மேற்சொன்ன அந்த உணவு விகிதத்தின்படி இதை உணவில் எடுத்துக் கொள்வதே நமது உடல் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

அரிசி உணவு அளவோடுதான்அரிசியை அளவோடு உட்கொண்டு வந்த பண்பாடுதான் நம்முடையது. பெரும்பாலும் சிறுதானியங்களையும், காய்கறிகளையும் கொண்ட உணவுமுறையே நம்முடையது. விசேஷ தினங்களில் மட்டுமே அரிசி சோற்றை சாப்பிட்டு வந்திருக்கின்றனர்.

ஆனால், காலப்போக்கில் அந்நிய உணவு கலாச்சாரங்களால் அரிசி சாதம், இட்லி, தோசை என்று அளவுக்கதிகமாக அரிசி உணவை சேர்த்துக் கொண்டுவிட்டு இப்போது அரிசியே ஆபத்து என்று அலறுகிற நிலை வந்துவிட்டது.

நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிறைந்த சிறுதானிய உணவுப் பொருட்களின் பயன்பாடுகள் பெருமளவில் குறைந்துவிட்டது. பல தலைமுறைகளாக, பாரம்பரியமாக நமது உடல் பழகிவந்த உணவு பழக்கவழக்க முறைகளை சமீபத்திய 50 வருடங்களில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் மறக்கடிக்கச் செய்ததோடு, நம்மை நோயாளிகளாகவும் மாற்றிவிட்டது.

பாரம்பரிய உணவுக்குத் திரும்புவோம் நாகரீகம் என்ற பெயரில், அந்நிய நாட்டு உணவு கலாச்சாரத்துக்கு அடிமையாகி, நாவின் ருசிக்கு மயங்கி, கண்ட வேளைகளில் கிடைக்கிற உணவுகளை எல்லாம் உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வருகிற சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை சமைத்து சாப்பிடுகிற பழக்கத்துக்கும் பலர் ஆளாகி வருகிறார்கள்.

இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு, மீண்டும் நமது பண்டைய உணவுமுறையின் சிறப்புகளை உணர்ந்து
பின்பற்றுவதே ஒரே வழி!

- க.கதிரவன்