டயாலிசிஸ் கவலைக்கு தீர்வு இல்லையா?!



அலசல்

நிரந்தர சிறுநீரக செயலிழப்புக்கு ஆளானவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வது அல்லது டயாலிசிஸ் செய்வது என்ற இரண்டு வழிகள் தீர்வாக இருக்கிறது. இதில் டயாலிசிஸ் செய்துகொள்வது என்பது வலி மிகுந்ததாகவும், டயாலிசிஸ் மேற்கொள்பவர்கள் மனவிரக்தியுடனும் வாழ்வைத் தொடரும் நிலையே பல இடங்களிலும் காண முடிகிறது.

அதேபோல், டயாலிசிஸ் செய்வதற்கான பொருளாதார செலவுகளும் சவால் மிகுந்ததாகவே இருக்கிறது. உடல்வலி, அதிக கட்டணம் இதற்கு தீர்வே இல்லையா என்று சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் பலராமனிடம் கேட்டோம்...

‘‘உங்கள் கேள்வியிலும், ஆதங்கத்திலும் உண்மைகள் இருக்கிறது. ஆனால், இப்போது நிலைமை மெல்ல மெல்ல மாறிவருகிறது. இதுபற்றி, கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும். டயாலிசிஸ் மேற்கொள்ளும் நபர்களின் வாழ்க்கை முறை பற்றி மக்கள் பல்வேறு தவறான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். ஒருவரது வாழ்க்கைத் தரத்தை தீர்மானிப்பது அவரேயன்றி மற்றவர்கள் இல்லை.

மருத்துவர் நோயாளியிடம் ‘நீங்கள் இனி தொடர்ச்சியாக டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டும்’ என்று சொன்னவுடன், அவரது மனதில் தோன்றும் முதல் எண்ணமே இது வலிமிகுந்தது என்பதுதான்.

சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டியிருக்கும் என்ற எண்ணமே இன்னும் பயத்தை அதிகரித்துவிடுகிறது. ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியால் டயாலிசிஸ் சிகிச்சைமுறை நோயாளிகளுக்கு எளிதானதாக தற்போது மாறியுள்ளது.’’

நீண்ட தூரப் பயணம்செய்கிறவர்களின் நிலை பற்றி...
‘‘நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நேரங்களிலும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள் அதை தவறவிடக்கூடாது. டயாலிசிஸ் செய்துகொண்டால் அந்தப் பயணம் கடினமானதாகிவிடும் என்ற நம்பிக்கையும் மிகப் பரவலாக காணப்படுகிறது. இந்த தவறான நம்பிக்கையை மாற்றும் வகையில், 8 பைக்கர்கள் கொண்ட டயாலிசிஸ் குழு ஒன்று சமீபத்தில் ஒரு நீண்ட தூர பைக் சாகச பயணத்தை மேற்கொண்டனர். ஒரு நிபுணரின் பராமரிப்பின் கீழ், டயாலிசிஸ் நோயாளி தன் வாழ்க்கையை வழக்கமானதாக மட்டுமின்றி, மகிழ்ச்சியாகவும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பைக் சாகசப்பயணம் வெளிப்படுத்தியது.

ஒரு நெறிமுறைப்படுத்தப்பட்ட மருத்துவ சேவை மூலம், டயாலிசிஸ் அமர்வுகள் பாதிக்காத வண்ணம் தங்களது பயண அட்டவணையை ஒரு நோயாளி தயக்கமில்லாமல் தீர்மானித்துக்கொள்ள முடியும். தற்போது ஹாலிடே டயாலிசிஸ் போன்ற நவீன சேவைகள் டயாலிசிஸ் சிகிச்சையில்
சாத்தியமாக்கப்பட்டுள்ளன.’’

டயாலிசிஸ் வலிமிகுந்த சிகிச்சையாக ஏன் இருக்கிறது?

‘‘இது பழைய கதை. தற்போது, நவீன சிகிச்சைமுறையில் வெட்டுதல் அல்லது தைத்தல் போன்றவை இல்லை. எனவே, டயாலிசிஸ் என்பது முற்றிலும் வலியற்ற சிகிச்சைமுறையாக மாறிவிட்டது. எனினும், சில நேரங்களில் நோயாளிக்கு ஏதேனும் சில வலிகள் ஏற்படும்போது, அவர் உடனடியாக மருத்துவரிடம் தெரிவிப்பது மேற்கொண்டு சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சிறுநீரகத்தை பாதிக்காத முறையான உணவுமுறை, திரவ உணவு கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடித்தால் இத்தகைய பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.’’சிறுநீரக செயலிழப்புக்கு டயாலிசிஸ்தான் இறுதி கட்டமா?

‘‘ஒரு நோயாளியின் சிறுநீரகங்கள், இயற்கையாக ரத்தத்தை சுத்திகரிக்கும் செயல்பாட்டை இழந்துவிட்டதால், வெளி ஆதரவாக ஒர் இயந்திரம் மூலம்தான் சுத்திகரிக்க முடியும். இதை ஒரு மருத்துவர் அறிவித்தவுடன், பலர் தங்களது வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால், அப்படி விரக்தியடைய வேண்டியதில்லை. 25 ஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸ் செய்தபடி, வழக்கமான மற்றும் மகிழ்ச்சி
கரமான வாழ்வை வாழும் எண்ணற்ற நோயாளிகள் உண்டு.’’

டயாலிசிஸ் கட்டணம் எட்டாக்கனியாக இருக்கிறதே...‘‘தற்காலத்தில் பல டயாலிசிஸ் மையங்கள், பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சிகளின் வழியாக டயாலிசிஸ் செலவுகளை குறைப்பதில் அதிகப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதுமான அளவு மருத்துவக் காப்பீட்டு வசதிகள், சலுகைகள், பேக்கேஜ்கள், காம்போ சலுகைகள் போன்றவைகள் டயாலிசிஸ்  நோயாளிகளுக்கு பல தன்னார்வ மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

டயாலிசிஸ் சிகிச்சையின் கூடுதல் செலவைக் குறைக்கும் வகையில் மேலும் சில முன்னணி மையங்கள் இன்னும் சற்று கூடுதலாக, குறைந்த செலவில், அதே நேரத்தில், நோயாளிகளின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பை பேணும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய அமைவிடங்களின் ஒட்டுமொத்த செலவுகளை சில சுகாதார நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன.’’ டயாலிசிஸ் நோயாளிகளுக்குச் சொல்ல விரும்புவது...

‘‘தங்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தயக்கமின்றி கேட்க வேண்டும். தங்களால் இயலும்போது பிறருக்கு உதவ வேண்டும். டயாலிசிஸ் சிகிச்சைகளுக்காக தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். புதியதொரு வழக்கமான டயாலிசிஸ் வாழ்வுக்குத் தங்களை தயார் செய்து கொண்டால், மிகச்சிறந்த டயாலிசிஸ் பராமரிப்புகளுடன் மற்றவர்களைப் போலவே சாதாரண வாழ்க்கை வாழலாம்.

டயாலிசிஸ் சிகிச்சையில் மேம்படுத்தப்பட்ட இயந்திரத்தின் வடிவமைப்பில் ஒரு செல்போன் சைஸில் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளக்கூடிய வகையிலான முயற்சியில் ஆய்வாளர்கள் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். விரைவில் அது நடைமுறைக்கு வருமேயானால் இவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியான வாழ்வு நிச்சயம்!’’

- இந்துமதி