சாகறதுக்கு நூறு வழி... வாழறதுக்கு ஆயிரம் வழி!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா...
ஒவ்வொரு 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். 78 சதவீத தற்கொலைகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளிலும், அதில் 15-29 வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் எனவும் தெரிய வருகிறது.சர்வதேச அளவில், ஒவ்வொரு வருடமும் 8 லட்சம் பேர் தற்கொலையால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தங்கள் பிரச்னையை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமாக யோசிக்க மறுக்கிற பலரும், தற்கொலைகளில் மட்டும் பலவிதமாக சிந்தித்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்பது வேதனைக்குரிய ஒரு செய்தி.
இணையத்தில் லைவ்வாக செய்து கொள்ளும் நவீன தற்கொலையிலிருந்து, தற்கொலைகள் பலவிதங்களில் இருந்தாலும் பெரும்பாலும் தீ வைத்துக் கொள்வது, தூக்க மாத்திரைகள் சாப்பிடுவது, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்வது, பூச்சி மருந்து அல்லது ரசாயன அமிலங்களை குடிப்பது போன்ற சிலவகை தற்கொலை முறைகள் அதிகம் காணப்படுகின்றன.
இதில் எப்படி உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தாலும் உயிரிழப்பது எத்தனை கொடுமையானதோ அதற்கு இணையாக உயிர் பிழைத்துக் கொள்பவர்கள் படும் வேதனைகளும் கொடுமையானவையே. அதைப் பார்த்தாலோ, தெரிந்துகொண்டாலோ தற்கொலை எண்ணம் கனவிலும் தோன்றாது என்பதே உண்மை.
ஸ்னேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனரும், அறங்காவலருமான லஷ்மி விஜயகுமார் இதுபற்றிப் பேசுகிறார்.‘‘நம் நாட்டைப் பொறுத்தவரை தற்கொலைகள் அதிகம் ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. குடும்ப பிரச்னை, காதல் தோல்வி போன்ற காரணங்களையெல்லாம் பின் தள்ளிவிட்டு, இப்போது அரசு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியிடும் நாட்களில் மாணவர்கள் தற்கொலை அதிகம் நடக்கிறது.
வாழ்க்கையில் விரக்தி, பயம், தனிமை உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவர்கள் பலவிதமான தற்கொலை முயற்சிகளில் இறங்குகிறார்கள். இவர்கள் பின்விளைவை நினைத்துப் பார்ப்பதில்லை’’ எனச் சொல்லும் மருத்துவர் லக்ஷ்மி விஜயகுமார் தற்கொலை முயற்சிகளின் வகைகளையும் அதன் விளைவுகளையும் பட்டியலிடுகிறார்.
‘‘உடலில் தீ வைத்துக் கொள்பவர்களுக்கு அதனால் ஏற்படும் காயங்களைப் பொருத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தீக்காயங்கள் முதல், இரண்டாம், மூன்றாம் டிகிரி என்று வகை பிரிக்கப்படுகிறது. இதில் மூன்றாம் டிகிரி தீப்புண் ஏற்பட்டவர்களுக்கு ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்னும் திரவம் தீக்காயத்தால் சேதமடைந்த ரத்தக்குழாய்கள் வழியே வெளியேறிவிடும். ரத்த அழுத்தம் குறைந்து, சிறுநீரகம், இதயம், இரைப்பை போன்றவை பாதிக்கப்படும்.
தசையோடு ஒட்டிய தசைநார்கள், நரம்புகள் போன்றவையும் பாதிக்கப்படுவதால் கை,கால் தசைகள் இறுக்கமாகிவிடும். விரல்கள் மற்றும் கைகளை அசைக்க முடியாது. குடலில் ஏற்படும் புண்ணால் உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் நீண்ட நாட்கள் வேதனைப்பட வேண்டியிருக்கும்.
தீக்காய தழும்புகள் ஆற வெகுநாட்கள் பிடிக்கும். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பழைய நிலைக்கு கொண்டு வந்தாலும் வாழ்நாள் முழுவதும் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கும்.
தங்கள் உருவத்தைப் பார்த்து இவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். சிலர் அமிலத்தை(Acid) குடித்துவிடுவார்கள். தொண்டையில் புண், வீக்கம் ஏற்படுவதால் மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலி, அடிவயிறு வலி, ரத்த வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படும். உணவுக்குழாய், இரைப்பைகளில் புண் ஏற்பட்டு சாப்பிடவே முடியாத நிலை ஏற்படும். மேற்புறத்தோல், கண்களில் பட்டுவிட்டால் புண், கொப்புளங்கள், புண் பயங்கரமான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, சிலருக்கு கண் பார்வையே பறிபோகும் அபாயம் உண்டு.
தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சிசெய்தால் கயிறு இறுக்கி கழுத்து எலும்பு உடைந்துவிடும். மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் தடைபடுவதால் மயக்கமடைந்துவிடுவார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்கள் அடைபட்டு ரத்த ஓட்டம் நின்றுவிடும். அவர்களை உடனே காப்பாற்றி உயிர்பிழைத்தாலும், நினைவுத்திறன், மூளை செயல்பாட்டுத்திறன் குறைய வாய்ப்புண்டு. முன்புபோல் அவர்களால் பணியில் திறம்பட செயல்பட முடியாது.
உயரமான கட்டிடங்களிலிருந்து விழுபவர்களின் உடலில் கை, கால் எலும்புகள் முறிந்துவிடும். சிலருக்கு முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டு. வாழ்க்கையே முடங்கிப் போனவர்கள் உண்டு. சிலர் மணிக்கட்டுப் பகுதியில் ரத்தக் குழாயை துண்டித்துக் கொள்வார்கள். அதிக அளவில் ரத்தம் வெளியேறி, ரத்தம் ஏற்ற வேண்டிய சூழல் ஏற்படும். இவர்களுக்கு நரம்பு பாதிப்புகள் ஏற்படலாம்.
விவசாயத்துக்கு உபயோகிக்கும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை குடித்தவர்களை காப்பாற்றுவதில் 50 சதவீத வாய்ப்பு மட்டுமே உண்டு. உயிர் பிழைத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் நுரையீரல் நோய் பாதிப்பால் அவதிப்படுவார்கள். இப்படி எந்த முறையில் தற்கொலைக்கு முயற்சித்தாலும், உயிர் பிழைத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்படைவதை எண்ணியாவது தன்னை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்தைக் கைவிடவேண்டும்.
ஏதேனும் பிரச்னை என்றால் தங்களுக்கு நம்பகமானவர்களிடம் அதுபற்றி சொல்ல வேண்டும். தேவைப்படுகிறவர்களிடம் தயங்காமல் உதவிகள் கேட்க வேண்டும். உளவியல் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். சாவதற்கு நூறு வழிகள் இருக்கும்போது, வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்காதா என்ன?’’ என்று எதிர்கேள்வி கேட்கிறார்.ஆயிரமாயிரம் அர்த்தம் கொண்ட கேள்வி அது!
- என்.ஹரிஹரன்
|