இனிமே இப்படித்தான்! # 2018 Health Trends Update
ஆரோக்கியம் குறித்த அக்கறையும், ஆர்வமும் முன்னெப்போதையும் விட மக்களிடம் இன்று அதிகரித்திருக்கிறது. உணவுமுறையிலும், உடற்பயிற்சிகளிலும் புதுப்புது விஷயங்களை ஆர்வமாகத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்த வகையில்தான் மெடிட்டேரியன், ஃப்ரூட், பேலியோ என வித்தியாசமான டயட் வகைகள், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் பானங்கள், நடன அசைவுகளில் உடற்பயிற்சிகளை இணைக்கும் பெல்லி டான்ஸ், ஸும்பா டான்ஸ் போன்றவை முந்தைய வருடங்களில் பிரபலமடைந்தன.
இதேபோல், 2018-ல் ஹெல்த் ட்ரெண்ட்ஸாகப் போகும் விஷயங்கள் பற்றியும் நிபுணர்கள் ஒரு பட்டியலைக் கணித்திருக்கிறார்கள்.பாரம்பரிய உணவுகள், இயற்கைக்கு ஆதரவான கட்டிடங்கள் (Eco friendly building), இயற்கை நூலிழைகளாலான துணி வகைகள் மற்றும் பொருட்கள்(Organic dress material) என எதிலும் இயற்கையே இனி வரும் காலங்களில் கோலோச்சும் என்றும், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் குறிப்பிடுகிறார்கள். அந்த பட்டியலைப் பார்க்கலாமா...
Farm to Dining
வீட்டுத்தோட்டம் இந்த ஆண்டின் ட்ரெண்டிங்காக இருக்கும். என்னதான் காய்கறிகளையும் பழங்களையும் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் அது ஃப்ரெஷ்ஷானதா என்ற சந்தேகம் வரும். வாரம் ஒருமுறை வாங்கி வந்து ஃபிரிட்ஜில் அடைத்து வைத்து சாப்பிட வேண்டுமா என்ற எண்ணமும் தோன்றும்.
எனவே, வீட்டுத் தோட்டத்தில் அப்போதே பறித்து, பசுமை வாசனை மாறாமல் சுவைக்கும் சுகத்தைப் பலரும் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இது இனி அதிகரிக்கும். இதேபோல், வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்குள் வளர்க்கப்படும் Indoor Plants கலாசாரமும் அதிகமாகும்.மூலிகைச் செடிகளுக்கு மவுசுசின்ன தலைவலிக்குக்கூட மாத்திரை எடுத்துக் கொள்ளும் நமக்கு போகப்போக மாத்திரைகளே உணவாகிவிடுமோ என்ற பயம். இதனால் மூலிகை மருந்துகள், ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த துவங்கிவிட்டார்கள்.
பெப்பர்மின்ட் ஆயில், லெமன் ஆயில், டீ ட்ரீ ஆயில் போன்ற மூலிகை எண்ணெய்களை அழகு பராமரிப்புக்கு மட்டும் உபயோகித்துவந்த நிலை மாறி மருத்துவத்துக்கான பயன்பாடும் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். தற்போது நம்நாட்டு மூலிகைகள் வெளிநாட்டினரையும் ஈர்த்திருப்பது கவனத்துக்குரியது.
கவனம் பெறும் இயற்கை விவசாயம் உலக அளவில் அதிக கவனம் பெறப்போவது இயற்கை விவசாயம்.செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் நிலத்தில் போட்டு விளைவிக்கும் உணவுப்பொருட்களை உண்ணும் மனிதனுக்கு இன்று புதிதுபுதிதாய் நோய்கள். இவற்றால் நிலங்களும் கெட்டுப் போகின்றன.
இயற்கை விவசாயத்தில் தரமான விதைகளையும், இயற்கை உரங்களையும் கொண்டு விளைவிக்கும் உணவுப் பொருட்களை உபயோகிக்கும் நாம் எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதால் இயற்கை விவசாயத்தை நோக்கி உலகத்தின் பார்வை திரும்பியுள்ளது.
ஃபேஷனாகிறது பாரம்பரிய மருத்துவம்நோய் வந்துவிட்டால் உடனே மருத்துவமனை நாடுவதை இன்று பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. அதனால், பாரம்பரிய மருத்துவங்கள் இப்போது புத்துயிர் பெறுகின்றன.
மூளைத்திறனுக்கு முக்கியத்துவம்முதியோருக்கு மறதிநோய் அதிகரித்து வருவதும், மாணவர்களின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யவும், மூளைத்திறனை வளர்க்கும் விஷயங்களில் மக்கள் இப்போது அதிக கவனம் செலுத்துகின்றனர். இனி இது மேலும் அதிகமாகும். வெண்டைக்காய், தயிர், வல்லாரைக்கீரை போன்றவற்றை பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு செய்து கொடுக்கலாம். இந்த பாட்டி வைத்தியங்கள் மீது நம்முடைய கவனம் குறைந்தாலும், வெளிநாட்டினரை வெகுவாக ஈர்த்துள்ளது.
தூக்கம்
அதிகரித்துவரும் உடல்பருமன் முதல் ஹார்மோன் பிரச்னைகள் வரை அத்தனை நோய்களுக்கும் மூலகாரணம் தூக்கமின்மை. உடல்சோர்வு, மன அழுத்தம், வேலையில் ஈடுபாடின்மை இவையெல்லாமே குறைவான தூக்கத்தால் வருபவை. நரம்பியல் நிபுணர்களும், உளவியல் நிபுணர்களும் நல்ல தூக்கத்தை பரிந்துரைக்கிறார்கள். இதனால் தூக்கத்தை அதிகரிக்கும் உணவுகள், வசதியான படுக்கை அறை போன்றவற்றில் மக்களின் கவனம் திசை திரும்பியுள்ளது.
படுக்கை அறையின் மேல் கூரையில் நட்சத்திரங்கள், நிலா போன்று இயற்கை அலங்காரங்கள், வெளிர் வண்ணம் தீட்டப்படும் சுவர்கள், அலங்கார திரைச்சீலைகள் என நவீன படுக்கையறைகள் கட்டுவதில் முனைப்புடன் இறங்கியுள்ளார்கள். விரதம் நல்லது உடல் எடை குறைப்பு விஷயத்தில் விதவிதமான உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் வந்தாலும், இடையிடையே மேற்கொள்ளும் உண்ணாநோன்பையும் வலியுறுத்துகிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
முன்னோர்கள் ஏற்படுத்திய அமாவாசை விரதம், கிருத்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதங்களெல்லாம் சும்மா ஏற்படுத்தப்படவில்லை என்றும் பெருமையோடு நினைவுகூர்கிறார்கள். ஒருநாளைக்கு ஒருவேளையோ, வாரத்தில் ஒரு நாளோ விரதம் இருக்கலாம் தப்பில்லை என்கிறார்கள்.
மூலிகைக் குளியல் ஸ்பா, மசாஜ் போன்று தற்போது மூலிகைக் குளியல், ஆயுர்வேதக் குளியல் போன்றவை பிரபலமாகி வருகிறது. டென்ஷன், ஸ்ட்ரெஸ் என அலையும் நகர மக்கள் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய காலத்தில் மாதம் ஒருமுறை அருமையான மருத்துவக் குளியல் எடுப்பது இனி ஃபேஷனாகவே மாறும்.
Plant based Protein
இறைச்சியிலிருந்துதான் மனிதனுக்கு தேவையான புரதம் கிடைக்கும் என நம்புகிறோம். ஆனால், இறைச்சி உடலில் கொழுப்பையும் சேர்த்தே அதிகரிக்கிறது. சிறுநீரகத்துக்கு அதிக வேலைப் பளுவை கொடுப்பதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சிவிடும். இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் மற்றும் கோழிகளுக்கு நோய் தாக்காமல் இருப்பதற்காகவும், எடை அதிகரிக்கவும் ஆன்ட்டிபயாடிக், ஸ்டீராய்டு ஊசிகளை போடுகிறார்கள்.
அவற்றின் இறைச்சிகளை சாப்பிடுவதால், மருந்துகள் நம் உடலிலும் ஊடுருவி சிறுநீரக பாதிப்பு, செரிமானக் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். தாவரங்களில் இருந்து பெறப்படும் புரதச்சத்தில் இந்த பிரச்னை இல்லை. இதனால், தாவரங்களிலிருந்து பெறப்படும் புரதம் அல்லது Whey Protein என்று சொல்லப்படும் பால், தயிரிலிருந்து பெறப்படும் புரதங்களுக்கு வரும் நாட்களில் அதிக மவுசு கூடப்போகிறது.
Tai Chi
தற்போதைய தேவைக்கேற்ப முதுகுத் தண்டுவட வலி, கழுத்துவலி, இடுப்பு வலிகளைப் போக்கக்கூடிய யோகாசனங்களை, யோகா ஆசான்கள் கண்டுபிடிக்கத் தொடங்கிவிட்டனர். ஃபேஸ்புக்கில் திரைபிரபலங்கள் உடற்பயிற்சி மையங்களில் எடுக்கும் தங்கள் கட்டுடல் புகைப்படங்களை வெளியிட்டுவந்த நிலை மாறிவிட்டது.
உடல் ஆரோக்கியத்துக்கும், மன ஆரோக்கியத்துக்கும் யோகா, தியானம் போன்றவற்றை பின்பற்றத் தொடங்கி விட்டார்கள். தற்போது தியானம், யோகா போன்றே Tai Chi என்னும் தற்காப்பு கலைமீது உலகத்தின் கவனம் திசை திரும்பத் தொடங்கியுள்ளது.
இந்த டாய்ச்சி பயிற்சி மன அழுத்தத்துக்கான மருந்தாகவும் செயல்படுவதால், சீனாவில் ஆரம்பத்தில் குங்ஃபூ, கராத்தே போன்று தற்காப்பு கலையாக பின்பற்றுப்பட்டு வந்த பின்னர் யோகா போலவே தியானக்கலையாக உலகம் முழுவதும் பரவியது.
‘தினமும் இப்பயிற்சி யைச் செய்வதால்எலும்பு களுக்கு இடையே நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டு கை, கால்களை எளிதாக இயக்க முடியும். மனதுக்கும் புத்துணர்வு கிடைக்கும். மூச்சுப்பயிற்சிகள் இருப்பதால் ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்மந்தமான நோயாளிகள் எளிதில் சுவாசிக்க முடியும்.உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஆற்றல் கிடைக்கும்.
இதற்காக எந்த உபகரணங்களும் தேவையில்லை. எளிதானது, மலிவானது. இந்த பயிற்சியை முறையாக கற்றுக் கொண்டு தான் இருக்கும் இடத்திலேயே சிறுவர் முதல் வயதானோர் வரை யார் வேண்டுமானாலும் எளிதாகச் செய்ய முடியும். மூட்டுவலி, முடக்குவாதம், முழங்கால் வலி உள்ளவர்களும் சிரமமின்றி இந்தப் பயிற்சிகளை யாருடைய உதவியும் இன்றி செய்யலாம்.
இதைச் செய்வதன் மூலம் வயதானவர்களுக்கு நடக்கும் போதும், பொருட்களை தூக்கும்போதும் ஏற்படும் நடுக்கங்கள் குணமாகும். உடலில் சமநிலை அதிகரிக்கும். மனப்பதற்றம், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.
தூக்கமின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு சிறந்த பயிற்சி. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ரத்த அழுத்தத்தை குறைக்கும். ரத்த ஓட்டம் சீரடைவதால் இதயத்துக்கும் நல்லது’ என்று இதன் புகழ் பாடுகிறார்கள் வல்லுநர்கள்!
|