இங்க என்ன சொல்லுது...



உள்ளுணர்வு ரகசியம்

‘முக்கியமான தருணங்களில் முடிவு எடுக்கத் தடுமாறுகிறீர்களா?


கொஞ்சம் அமைதியாக அமர்ந்துகொள்ளுங்கள்... ஆழமாக சுவாசியுங்கள்... தர்க்க ரீதியிலான காரணங்களைவிட உங்களுக்குள் ஒலிக்கும் குரலைக் காதுகொடுத்துக் கேளுங்கள். அதுதான் நீங்கள் செல்ல வேண்டிய பாதை. அந்த வழிகாட்டியின் பெயரே உள்ளுணர்வு’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

‘என்னன்னு தெரியலை... ஆனா தோணுச்சு’ என்று நாம் தினசரி வாழ்வில் சொல்கிறோம். ‘மூளையைக் கேட்டு முடிவு எடுக்க மாட்டேன். இதயத்திலிருந்துதான் முடிவு எடுப்பேன்’ என்ற பாட்ஷா ரஜினி வசனம் நமக்குத் தெரியும். இதுதான் உள்ளுணர்வு.இந்த உள்ளுணர்வு(Instinct) என்ற வார்த்தையை 18-ம் நூற்றாண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் Wilhelm Wundt என்ற ஜெர்மானிய மருத்துவர்.

தத்துவார்த்தமான விஷயங்களை விரும்பியவராக இருந்ததால் இவர் உள்ளுணர்வு தொடர்பாக நிறைய ஆய்வுகளையும் செய்திருக்கிறார். இவரைப் போலவே பல உளவியல் மருத்துவர்களும், பேராசிரியர்களும் உள்ளுணர்வின் சக்தி பற்றி ஆய்வுகள் செய்திருக்கிறார்கள்.

உடல் உறுப்புகள் செயல்படாமல் ஸ்தம்பித்துப் போகும் நிலையை Paralysis என்கிறது மருத்துவம். அதேபோல், பலவித எண்ணங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் ஸ்தம்பித்துப் போகும் நிலையை Analysis paralysis என்று குறிப்பிடுகிறார்கள். அத்தகைய நெருக்கடியான நிலையில் உள்ளுணர்வு தரும் முடிவு நமக்கு கை கொடுக்கிறது என்று தங்களுடைய ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த உள்ளுணர்வு என்பது நீங்கள் மரபியல் ரீதியாக உங்களுடைய முன்னோர்களிடமிருந்தும், மில்லியன் கணக்கான வருடங்களிலிருந்து உங்களுடைய மரபணுவில் பதிந்த பிரபஞ்சத்தோடு தொடர்புடைய அறிவு என்றும் விளக்குகிறார்கள். எனவேதான், சில சமயங்களில் இது நடக்கும் நடக்காது என்று முன்னரே சரியாக கணிக்கிறோம்.

உள்ளுணர்வானது மனிதர்களைவிட விலங்குகளுக்கு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே உணரக்கூடிய விலங்குகள் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் சென்றுவிடுவதன் காரணம் உள்ளுணர்வே! இயற்கையை விட்டு விலகி, தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கையினை மனிதர்கள் வாழ்வதால் தங்களது உள்ளுணர்வை இழந்துவிட்டார்கள் என்றும் வருத்தம் கொள்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான நிர்வாக இயக்குனர் என்று புகழ் பெற்றவர் கோபால கிருஷ்ணன். இவர் தன்னுடைய The case of the bonsai manager என்ற புத்தகத்தில், முடிவுகள் எடுப்பதில் உள்ளுணர்வு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறதென குறிப்பிடுகிறார். ‘ஆர்க்மிடீசுக்கும் நியூட்டனுக்கும் கூட இந்த உள்ளுணர்வுகள்தான் அவர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக இருந்தன’ என்றும் குறிப்பிடுகிறார்.

ஆப்பிள் கம்பெனியின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ், ‘அமெரிக்காவில் நாம் அறிவைப் பயன்படுத்துகிறோம். இந்தியாவில் உள்ளுணர்வைப் பயன்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அறிவைவிட சக்தி கொண்டது உள்ளுணர்வுதான்’ என்று வர்ணித்திருக்கிறார். Have the courage to follow your heart and intuition.

They somehow already know what you truly want to become. Everything else is secondary என்ற இதுதொடர்பான ஸ்டீவ் ஜாப்ஸின் பஞ்ச் டயலாக்கும் மிகவும் பிரசித்தம்.இந்த உள்ளுணர்வு நமக்கு உதவி செய்ய நல்ல சூழலில் அமைதியாக தியானம், உடற்பயிற்சிகள் போன்றவை செய்வதின் மூலம் பெற முடியும் எனவும் பல ஆய்வுகள் கூறுகிறது. முயற்சி செய்துதான் பாருங்களேன்!

- எம்.வசந்தி