எடையைக் குறைக்கும்... புற்றுநோயைத் தடுக்கும்... பலே... பனங்கிழங்கு!



இயற்கையின் அதிசயம்

‘‘நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருட்களில் பனங்கிழங்குக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஒரு சிலர்தான் இன்றும் உணவில் தவறாமல் சேர்த்து வருகின்றனர். அதன் பெருமைகளை எல்லோரும் முழுமையாகப் புரிந்துகொண்டால் எங்கு பார்த்தாலும் பனங்கிழங்கை விடவே மாட்டார்கள்’’ என்கிறார் சித்த மருத்துவர் க.வெங்கடேசன்.

‘‘பனங்கிழங்கு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனைப் பல வழிகளில் உணவாக பயன்படுத்தலாம். கிழங்கினை நன்றாக வேகவைத்து மிளகு, உப்புத்தூள் தடவி சாப்பிடலாம். நன்றாக வெந்த பின்னர் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக அரைத்து தேங்காய்ப்பால், வெல்லம், ஏலக்காய் சேர்த்து புட்டு செய்தும் சாப்பிடலாம்.

பனங்கிழங்கு மாவுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து அடை செய்தும் உண்ணலாம். இதில் அதிக நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தாது உப்பு, சிறிதளவு புரதம் மற்றும் சர்க்கரை, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த அமிலம், பொட்டாசியம், வைட்டமின் பி, பி1, பி3, சி ஆகியவை அதிகம் காணப்படுகின்றன.

பனங்கிழங்கு உடலுக்குப் பொலிவைத் தந்து அழகைக் கூட்டும். தசைகளை வலிமைப்படுத்தும். தற்கால சூழலில் நமக்குப் பலவகையான காய்ச்சல்கள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்று, எலும்பைப் பற்றும் காய்ச்சல். இது ரத்த புற்றுநோயின் அறிகுறி. ரத்த புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி, தீவிரம் அடையாமல் தடுக்கும் ஆற்றல் பனங்கிழங்குக்கு உண்டு.

இதில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. பெருங்குடலில் நச்சுத்தன்மை உள்ள பொருட்கள் சேர்வதைக் கட்டுப்படுத்தி, கழிவுகளை முழுமையாக வெளியேற்றுகிறது. இதனால், பெருங்குடலில் உண்டாகிற புற்றுநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் உடல் வலிமை, மூளை வளர்ச்சி, எலும்புகளை பலம் பெறச் செய்தல் ஆகியவற்றுக்குத் துணை செய்கிறது. சி வைட்டமின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.

பசியை கட்டுப்படுத்துகிற திறன் உண்டு என்பதாலும், கொழுப்பு சத்து இல்லாத கிழங்கு என்கிற காரணத்தாலும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, வாய், வயிறு ஆகிய உறுப்புகளில் ஏற்படுகிற புண்களையும் குணப்படுத்துகிறது. கோடைக்காலத்தில் வருகிற வியர்க்குரு மற்றும் தேமலை சரிசெய்ய, இக்கிழங்கினைப் பாலில் வேகவைத்து, சருமத்தில் தடவி வர உடனடியாக பலன் கிடைக்கும்.

இதுபோல் எண்ணற்ற மருத்துவ குணம் கொண்டது என்பதற்காக, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், வயிற்றுவலி, சொறிசிரங்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன’’ எனவும் அறிவுறுத்துகிறார். 

- விஜயகுமார்

படம்: ஆர்.கோபால்