காது கேளாமை சிகிச்சையை மேம்படுத்தும் முப்பரிமாண கருவி!



நம்பிக்கை

செவித்திறனை இழந்து அவதிப்படுகிறவர்களுக்காக, காதில் பொருத்திக் கொள்ளக்கூடிய சிறிய உபகரணங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. இந்த கருவிகளைவிடவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அதிநவீன சாதனம் ஒன்றை விஞ்ஞானிகள் சமீபத்தில் வடிவமைத்துள்ளனர். முப்பரிமாணம் என்கிற 3D பிரின்டட் முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த சாதனம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று மருத்துவ உலகம் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இதுவரையிலும் செவிட்டுத்தன்மையைக் குணப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள் சரியான வடிவத்திலும், அளவிலும் இல்லாத காரணத்தால், அறுவை சிகிச்சைகள் அடிக்கடி தோல்வியில் முடிந்துவிடுகின்றன. வழக்கமாக செவிட்டுத்தன்மையை சரி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சையில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் செய்யப்பட்ட சிறு கம்பி, செராமிக் கப் ஆகியவை
உபயோகப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் காதின் பழுதடைந்த நடுப்புறப் பகுதிக்கு மாற்று கருவியாக, மிகத்துல்லியமாக செயற்கை முறையில் இந்த உபகரணம் தயாரிக்கப்பட்டுள்ளது நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. இதன்மூலம் கேட்டல்திறனில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்கான அறுவை சிகிச்சைமுறையும் வளர்ச்சி அடையும் சாத்தியம் அதிகரித்திருக்கிறது.

‘‘காது குறைபாட்டுடன் வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் செயற்கை முறையில் வடிவமைக்கப்பட்ட உபகரணங்களைப் பொருத்துவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த அறுவை சிகிச்சைகள் பெருமளவில் தோல்வியில் முடிகிறது. மேலும், செவியின் உட்புறத்தில் காணப்படும் சிற்றெலும்புகளின் அளவு மற்றும் செயற்கை உபகரணங்கள் சரியான அளவில் செய்யப்படாத காரணத்தாலும் பெரும்பாலும் இத்தகைய அறுவை சிகிச்சைகள் தோல்வியில் முடிவதாக அமைந்துவிடுகின்றன.

நோயாளிகள் தங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு செய்து கொள்ளும் செயற்கைக் கருவிகள் சரியாக பொருந்துவதாக அமைந்துவிட்டால், இத்தகைய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்படுவது அதிகரிக்கும். மேலும், தோள் மற்றும் மூட்டு இணைப்புகள், மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை, ஃபேஷியல் ஆகிய பாதிப்புகளும் சரி செய்யப்படும். அதற்கேற்ற வகையில் நம்பிக்கை தருவதாகவே இக்கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது’’ என்கிறார் இக்கருவியை வடிவமைத்த அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகப் பேராசியர் ஜெஃப்ரி ஹிர்ஷக். மகிழ்ச்சி!

- வி.ஓவியா