டாக்டர் ஷில்பா ஷெட்டிசர்ப்ரைஸ்

ஷில்பா ஷெட்டியிடம் ஒரு நடிகைக்கு உண்டான எந்த அறிகுறியையும் இப்போது பார்க்க முடியவில்லை. பேசுவது, எழுதுவது, நடந்துகொள்வது என எல்லாமே ஒரு அனுபவம் மிக்க மருத்துவரின் செயல்களைப் போலவேதான் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைவிட ஆரோக்கியம் சார்ந்த கருத்தரங்குகளிலும், கண்காட்சிகளிலும் அதிகம் கலந்துகொள்கிறார்.

ஒருவேளை போன ஜென்மத்தில் டாக்டராக இருந்தாரோ என்னவோ என்று நம்மைக் குழப்புகிற அளவுக்கு அவரின் அன்றாட முகநூல் பதிவுகள் கூட இருக்கின்றன. தனக்கென்று வைத்திருக்கும் இணையதளத்திலும் டயட், ஃபிட்னஸ், நவீன சிகிச்சைகள் என்று ஒரே ஆரோக்கியமயம்தான். மருந்துக்குக் கூட சினிமா சம்பந்தப்பட்ட எந்த செய்திகளும் புகைப்படங்களும் இல்லை.

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக இருந்த ஷில்பா ஷெட்டியின் இந்த தலைகீழ் மாற்றத்துக்கு என்ன காரணம்? ஒரு பிரபல தொழிலதிபருடனான திருமண வாழ்க்கைக்குப் பின்னும் இந்த மாற்றம் தொடர்வதன் ரகசியம் என்னவென்று ஆராய்ந்தால் அதில் சுவாரஸ்யமும் இருக்கிறது... நமக்குத் தேவையான உபயோகமான தகவல்களும் இருக்கிறது.

‘பாஸிகர்’ திரைப்படத்தின் மூலம் 1993-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான ஷில்பாஷெட்டி, ஒரு சராசரி நடிகையாகத்தான் வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டிருந்தார். 2007-ம் ஆண்டில் ‘Phir milenge திரைப்படத்தில் எச்.ஐ.வி நோயாளியாக நடித்த பிறகு அதீத மாற்றங்கள் ஷில்பாவின் மனதுக்குள் ஏற்பட்டிருக்கிறது. அதுவே, இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாகவும் ஆகிவிட்டது.

‘எச்.ஐ.வி நோயாளிகளின் துயரத்தை உணர்ந்த பின்னர் சமூக நடவடிக்கைகளில் என்னை அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். எச்.ஐ.வி நோய் பிர சாரங்களிலும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டேன்’ என்கிற ஷில்பா ஷெட்டி, மனிதநேய செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்கான சில்வர் ஸ்டார் விருதையும் இதன் எதிரொலியாகப் பெற்றார்.

2007-ம் ஆண்டில் இங்கிலாந்தின் செலிபிரிட்டி பிக் பிரதர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர், அதில் வெற்றி பெற்றதன் மூலம் உலகளாவிய கவனத்தை சம்பாதித்தார். கூடவே, அதன் மூலம் கிடைத்த பணம் முழுவதையும் எச்.ஐ.வி நோயாளிகள் அமைப்பிற்கே கொடுத்துவிட்டது நெகிழ வைக்கும் தகவல். இதனால் ஆச்சரியமான இங்கிலாந்து மெட்ரோபோலிடன் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டத்தை அளித்து கௌரவித்தது.

எய்ட்ஸ், எச்.ஐ.வி, நோயின் அபாயத்தில் உள்ள இளைஞர்கள், சமுதாயத்தில் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், கல்வி வசதியில்லாத பிள்ளைகள், மருத்துவ வசதி பெற முடியாதவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு என பல்வேறு சமூக சேவைகளையும் அதன் பிறகு செய்யத் தொடங்கிவிட்டார் ஷில்பா.

ஆரோக்கியம் என்பது எத்தனை முக்கியமானது என்பதை உணர்ந்த பிறகு, ‘The great indian diet’ என்னும் புத்தகத்தையும் எழுதி வெளியிட்டார். அமிதாப், ஹ்ரித்திக் ரோஷன் முன்னிலையில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. ‘தற்போது இந்திய மக்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் மேற்கத்திய உணவுகளையும், பழக்கங்களையும் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நம் நாட்டு உணவுப் பொருட்களிலேயே நோய் தீர்க்கும் தானியங்கள், காய்கறிகள், மசாலா பொருட்கள் என ஏராளமான பொக்கிஷங்கள் இருக்கின்றன. இந்தியர்களின் உடலுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவுப்பயிர்கள் இங்கேயே விளைகின்றன.

உணவுக் கட்டுப்பாட்டுக்கான விஷயங்களும் ஏராளமாக நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களிலேயே இருக்கின்றன. இதை உணராமல் நாம் வெளிநாட்டவர்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்’ என தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். குறிப்பாக, இந்திய உணவுகளின் சிறப்புகளையும், புறக்கணிக்கப்பட்ட சில இந்திய உணவுகளைப்பற்றிய கண்ணோட்டத்தைத் தகர்க்கும் தகவல்களையும் இதில் விளக்கியிருப்பது பெருமை கொள்ளத்தக்கது.

உடலை சீராகப் பராமரிக்கக்கூடிய உணவுகள், உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் பற்றிய ஆலோசனைகளை புத்தகங்களாகவும், டிவிடிக்களாகவும் அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இதன் அடுத்தகட்டமாக, டிஜிட்டல் தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார் ஷில்பா ஷெட்டி. https://www.theshilpashetty.com/ என்ற அவரது இணையதளத்தில் சமையல், ஆரோக்கியக் குறிப்புகள், உடற்பயிற்சி குறிப்புகள் போன்றவை தொடர்ச்சியாக வீடியோக்களாக வெளியிடப்படுகின்றன.

‘என்னுடைய பார்வையாளர்களுக்கு நல்ல விஷயங்களை பரவலான முறையில் சேர்க்க விரும்புகிறேன். சரியான தகவல்களைப் பெறுவதன் மூலம் உடல்நலத்தை மேம்படுத்துவது இன்னும் எளிதாக இருக்கும் என்றும் நம்புகிறேன். நான் கற்றுக் கொண்ட உடல் வலிமைப்பயிற்சிகள், யோகா, சமையல் குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகள் என அனைத்து ஆரோக்கியம் சார்ந்த கலவையான தகவல்களை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய விருப்பம் என்கிற ஷில்பா ஷெட்டி, பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பாகவும் தனது இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்.

‘ஆரோக்கியத்தின் முதல் ரகசியம் நம் உடலைப் புரிந்து கொள்வதில் இருக்கிறது’ என்கிற ஷில்பா, Shilpa Shetty Kundra என்ற யூ டியூப் வலைதளத்தில் சிறப்பான யோகாசனங்களையும், சமையல் குறிப்புகளையும் செய்து வழிகாட்டுகிறார். https://www.facebook.com/TheShilpaShetty/posts என்ற அவரது முகநூலும் இதே ஆரோக்கிய அலப்பறைதான்.

‘நீங்கள் விரும்பிய உடல் அமைப்பைப் பெறுவதற்கானது அல்ல உடற்பயிற்சி. உடல் உறுப்புகளை சரியாகப் பராமரிப் பதற்கு உதவக்கூடியதும், தினசரி வாழ்வில் ஓர் அங்கமாக பின்பற்றப்பட வேண்டியதுமான உடற்பயிற்சிகளை இந்த வலைதளத்தின் மூலம் உங்களுக்கு சொல்லித் தருகிறேன்’ என்பவர் சொல்லித்தரும் மலையேற்றப் பயிற்சி (Mountain climber).

‘‘ஒரு சுத்தமான விரிப்பில் கீழே பார்த்தவாறு கைகள் மற்றும் கால்களில் நிற்க வேண்டும். கால்கள் பின்புறம் நீட்டியவாறு தலை உடலுக்கு நேராக இருக்க வேண்டும். கைகள் இரண்டும் தோள்களை ஒட்டியவாறு பக்கவாட்டில் உடல் எடையைத் தாங்கியவாறு இருக்க வேண்டும். மெதுவாக வலதுகாலை தரையிலிருந்து எடுத்து வலது முழங்காலை மார்புக்கு நேராக மடக்க வேண்டும். பழைய நிலைக்குத் திரும்பி இப்போது இடது முழங்காலை மார்புக்கு நேராக மடக்க வேண்டும். இதுபோல் 20 முதல் 30 வினாடிகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இந்த மலையேற்றப் பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உடல் இயக்கத்தை அதிகரிக்கிறது, முழு உடல் பலம் அதிகரிக்கிறது, கட்டான வலிமைக்கு உதவுகிறது’’ என்கிறார். சரி... மற்றவர்களின் ஆரோக்கியத்துக்கு இத்தனை ஆலோசனைகள் சொல்லும் ஷில்பாவின் லைஃப் ஸ்டைல் இது...

காலை உணவாக நெல்லிக்காய், கற்றாழை ஜுஸ், பழங்கள் அல்லது பழச்சாறு மற்றும் முளைகட்டிய தானியங்களையும், மதிய உணவாக சப்பாத்தி, தால், ப்ரௌன் ரைஸுடன் காய்கறி சாலட்களை எடுத்துக் கொள்கிறார். காய்கறிகள் சாலட், சூப் போன்ற இரவு உணவுகளை 8 மணிக்குள் முடித்துவிடுகிறார். பவர் யோகா, தியானம், பிராணாயாமம் வாரத்தில் 2 நாட்கள். வலிமை தரும் பயிற்சிகள் 2 நாட்கள்.பளுதூக்கும் பயிற்சி 2 நாட்கள். தினமும் தியானம். இதுவே ஷில்பாவின் டயட் மற்றும் ஃபிட்னஸ் மந்திரங்கள்.

பீன்ஸ் கிரேவி
* என்னென்ன தேவை?
பீன்ஸ் - 1/2 கிலோ (நார் நீக்கி, நீளமாக நறுக்கியது),
நிலக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்(வறுத்தது),
பூண்டுப்பல் - 4 (நசுக்கியது),
எள் - 1 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
சோயாசாஸ் - 1 டேபிள் ஸ்பூன்,
தேங்காய் பூ துருவல் - 1 டீஸ்பூன்,
உப்பு - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்.

* செய்முறை
பீன்ஸை வேகவைத்து நீரை வடிகட்டிக் கொள்ளவும். நீர் நன்றாக வடிந்து காய வேண்டும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய வைக்கவும். காய்ந்தவுடன் பூண்டு போட்டு பொன் நிறமாக வரும் வரை வதக்க வேண்டும். அதன்மேல் வறுத்த நிலக்கடலை மற்றும் எள் போட்டு புரட்டவும். இப்போது எள் வறுபட்டு வெடிக்க ஆரம்பிக்கும். அதில் பீன்ஸை போட்டு 5 நிமிடம் எல்லா பொருட்களும் கலக்குமாறு வதக்கவும். இப்போது தேங்காய் பூ துருவலை மேலாக தூவ வேண்டும். மேலாக சோயா சாஸை ஊற்றி அடுப்பை அணைத்து விட வேண்டும். இறுதியாக மிளகுத்தூள், மிளகாய்த்தூள் தூவ வேண்டும்.

* பயன்கள்
நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ் செரிமானத்தை அதிகரிக்கிறது. மேலும் மலச்சிக்கல், வாய்வுக்கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகிறது.
- உஷா நாராயணன்