எண்ணத்தில் இருக்கிறது எல்லாம் !ஒருவரின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் அளவுக்கு, எண்ணங்களுக்கு அப்படி என்ன சக்தி இருக்கிறது என்று மனநல மருத்துவர் சங்கரசுப்புவிடம் கேட்டோம்... ‘‘நேர்மறையான எண்ணங்கள் மூளை நரம்பு இணைப்புகளின் வளர்ச்சியைத் தூண்டி அறிவாற்றல், விழிப்புணர்வுத் திறன், எதையும் ஆராய்ந்து சிந்திக்கும் திறன், வித்தியாசமான கண்ணோட்டம் மற்றும் அணுகும் முறை போன்றவற்றை வளர்க்கிறது. இதனால் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்து வாழ்கிறார்கள்.

எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் வாழ்க்கையை அனுபவிக்கத் தயங்குகிறார்கள். இருக்கிற பொருளைவிட, இல்லாத ஒன்றின் மேல் மனம் லயிக்கிறது. எனக்கு மட்டும் ஏன் எல்லாம் கெட்டதாகவே நடக்கிறது? என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். அப்போது நம்பிக்கையின்மையும் இயலாமையும் சேர்கிறது. நிம்மதி கெடுகிறது. நிம்மதி கெட்டால் மன அழுத்தமும், மனச்சோர்வும் அழையா விருந்தாளிகளாய் கூடவே வந்து சேரும்.

நேர்மறை எண்ணம் கொண்டவர்களோ வாழ்க்கையில் வெற்றியை நோக்கி பயணிக்கிறார்கள். நிம்மதியை அனுபவிக்கிறார்கள். எப்பொழுதும் நம்முடைய குறைகளை நொந்துகொண்டு இருக்காமல் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும்போது சந்தோஷம் கிடைப்பது மட்டுமல்ல, நம்முடைய திறமைகளையும் வளர்த்துக் கொள்ள முடியும்.  வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் மன அழுத்தம், மனச்சோர்வு, இதய நோய்கள், சளி, காய்ச்சல் போன்றவை குறைவாக இருப்பதாகவும், அவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.’’

ஏன் நேர்மறை எண்ணங்கள் அவசியமாகின்றன?

‘‘அலுவலகத்திலும் வீட்டிலும் நம்முடைய வாழ்க்கை பல கவலைகளையும் பிரச்னைகளையும் கொண்டதாக உள்ளது. இது பெரியவர்களுக்கு மட்டுமில்லை. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கும் உள்ளதுதான். இன்று பள்ளியிலும் கல்லூரியிலும் போட்டி, பொறாமைகள் அதிகரித்துவிட்டன. கல்விச்சுமையும் முன்பைவிட பல மடங்கு அதிகமாகிவிட்டது. தேர்வுகால எதிர்பார்ப்புகளும் நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த பாரத்தை தாங்க முடியாமல் பல மாணவர்கள் துவண்டு நம்பிக்கை இழக்கும்பொழுது மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனால் பதற்றநிலைக் கோளாறு(Anxiety  Disorder) மற்றும் மனச்சோர்வு போன்ற மனநோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்த காரணங்களால்தான் தேர்வு முடிவுகள் வரும் நேரத்தில் பல மாணவர்கள் தற்கொலை முடிவுகளுக்கும் செல்கிறார்கள். இன்னும் பல மாணவர்கள் பெற்றோரை எதிர்ப்பதும், தீய வழிகளுக்கும் செல்வதும் உண்டு.  இவர்களுக்கு மனநிலை மருத்துவ சிகிச்சையும் ஆலோசனையும் அவசியமாகிறது.’’ நேர்மறை சிந்தனைகளை எப்படி வளர்த்துக் கொள்வது?

‘‘சிந்தனைகளை வரைமுறைப்படுத்த வேண்டும். நாம் தினம் மனதில் நம்முடனே பல விஷயங்களை இப்படிச் செய்யலாமா? அப்படிச் செய்யலாமா? என்று விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த சுய விவாதங்களையும் அவற்றின் விளைவுகளையும் புரிந்துகொள்ள முயன்றால் ஒரு நல்ல அணுகுமுறையைக் கண்டறிய முடியும். இந்த வேலையை என்னால் செய்ய முடியுமா? முடியாதா? என்று யோசிக்கும்போது என்னால் முடியாது என்று தீர்மானித்தால் முயற்சிக்கும்

ஆர்வம் கூட இல்லாது போகும். ஆனால், பல சமயங்களில் என்னால் முடியும் என்ற எண்ணத்தை உறுதியாக நம்பினால் நம்மால் கண்டிப்பாக அதைச் செய்யும் வாய்ப்பு பெருகும்.சுய சிந்தனைகளை கவனித்துப்பழகினால், நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எப்படி யோசிக்கிறோம் என்று புரிந்து அதைத் திருத்திக் கொள்ள முடியும். ஒரு தவளையின் கதை கேட்டிருப்பீர்கள். மரம் ஏற முடியும் என்று தீர்மானித்து அது ஏறத் தொடங்கியது. கீழே இருந்த மற்ற தவளைகளோ அதனிடம் ஏறாதே உன்னால் முடியாது என்றுகூற, அந்த தவளையோ சற்றும் அசராமல் மரத்தின் உச்சிக்கு ஏறியது.

எப்படியென்றால், அந்த தவளைக்குக் காது கேட்காது என்று அந்தக் கதை முடியும். கீழே உள்ள மற்ற தவளைகள் எல்லாம் தன்னை உற்சாகப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அது இன்னும் வேகமாக அதன் இலக்கைத் தொட்டது. நம் மனமும் அதுபோலத்தான். முடியும் என்று தெரிந்தாலும் முடியாது என்று ஒருபுறம் அலறிக்கொண்டே இருக்கும். அதைப் புறக்கணித்து நேர்மறை அறிவுரைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் மட்டும் செவி சாய்த்தால் முன்னேற்றம் நிச்சயம்.’’

எவ்வாறு இதை செயல்படுத்துவது?

‘‘ஆக்கப்பூர்வமான மேற்கோள்களை படியுங்கள். அவற்றை எழுதி கண் பார்வைபடும் இடங்களில் ஒட்டிவைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நல்ல குணாதிசயங்களையும் நல்ல நிகழ்வுகளையும் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நல்ல இசை கேட்பது, புத்தகம் வாசித்தல் போன்றவற்றை வளர்த்துக் கொள்ளலாம். உங்களைச் சுற்றி தன்னம்பிக்கை மற்றும் நல்ல பழக்கம் உடையவர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை உடைய நண்பர்களோடு அதிகம் பழகுங்கள். சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் எதிர்மறை உரையாடல்களை தவிர்த்து, நகைச்சுவை உரையாடல்கள், நல்ல தகவல்களைத்தரும் நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கலாம்.

மனநலம், உடல்நலம் இரண்டுக்கும் உடற்பயிற்சி, யோகா, தியானம் சிறந்தது. அலுவலக பணிச்சுமைகளை சிறிய பாகங்களாக பிரித்து செய்யலாம். சோர்வும் குறையும். நம் உழைப்பின் முன்னேற்றமும் தெரியும். இந்த கணத்தை அனுபவியுங்கள். வரப்போகும் பிரச்னைகளைப் பற்றி கவலைப்பட்டால் அவை தீரப்போவது இல்லை. வரும் பொழுது சமாளியுங்கள். தினமும் நடந்த ஒரு சந்தோஷமான நிகழ்வை டைரியில் எழுதி வைத்துப் பாருங்களேன். வாரத்தின் முடிவில் அதைப் படித்தால், குறைந்தது ஏழு நல்ல நிகழ்வுகளாவது இருக்கும். அதைப் படித்துப் பார்க்கும் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும் இல்லையா? அது பெரிய விஷயம்தானே?!! இவைகளை செய்ய முடியாத அளவுக்கு மனச்சோர்வு இருந்தால் மன நல ஆலோசனையோ, சிகிச்சையோ பெறத் தயங்காதீர்கள்!’’

- என்.ஹரிஹரன்