முடிமாற்று அறுவை சிகிச்சைவிளம்பரத்தில் பார்க்கும் ஹேர்ஆயில் அனைத்தையும் முயற்சி செய்தும் முடிவளராமல் தளர்ந்து போனவர்களுக்கான வரமாக வந்ததுதான் முடிமாற்று அறுவை சிகிச்சை.  எனினும், சென்னையில், சென்றவருடம் முடிமாற்று அறுவைசிகிச்சையினால் மரணித்த மருத்துவர் சந்தோஷ்குமாரை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம்.

அதன்பின்னர் இந்த விபரீத முயற்சியில் யாரும் இறங்கியிருக்கமாட்டார்களா என்ன?

வழுக்கைத்தலைக்காக செய்து கொண்டதையும் தாண்டி, தற்போது வித்தியாசமான தோற்றத்திற்காகவும் செய்து கொள்ளப்படும் முடிமாற்று அறுவைசிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில் நுட்பத்தைப்பற்றி, முடிமாற்று மற்றும் ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. ராமச்சந்திரன் விளக்கும்போது...  

“நம்முடைய தலையில் இரண்டுவிதமான முடிகள் உள்ளன தலையின் முன்புறம் இருப்பது ‘ஆன்ட்ரோஜன்’ என்ற ஆண் ஹார்மோன் சார்ந்தது. இந்த ஹார்மோன் வகையைச் சாராதவைதான் தலையின் பின்பக்கம் மற்றும் பக்கவாட்டில் உள்ள முடிகள். பொதுவாக பரம்பரைத்தன்மையால் ஆண்களுக்கு தலையின் முன்பக்கம் உள்ள முடிகள் உதிர்வதால் வழுக்கையும், பெண்களுக்கு முடி அடர்த்தி குறைவும் ஏற்படுகிறது. ஆண்களின் வழுக்கையை மறைக்க முடியை நடுதல் முறைக்கு மாற்றாக தற்போது இரண்டு வகையான முடி மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறோம்.

FUT (Follicular Unit Transplantation) முறையில் தலையின் பின்புறம் முடி அடர்த்தியாக உள்ள இடத்திலிருந்து ஒரு சிறு துண்டு திசுவை அகற்றி, வழுக்கை உள்ள இடத்தில் பொருத்தப்படுகிறது. பின்னர் திசுவை அகற்றிய பகுதியில் தையல் போடுகிறோம். ஒருவாரத்தில் அந்த இடத்தில் மீண்டும் முடி வளர்ந்துவிடும். FUE (Follicular Unit Extraction) முறையில் திசுக்களை நேரடியாக அகற்றாமல் அங்கங்கே தனித்தனியாக மயிர்கால்களை அகற்றி வழுக்கைப் பகுதியில் நடுகிறோம்.

இதனால் அந்த இடத்தில் முடியின் அடர்த்தி குறைவாக இருக்குமே தவிர, பார்ப்பதற்கு வித்தியாசம் தெரியாது. இதே முறையைப் பின்பற்றி, தாடி, மீசை மற்றும் உடலின் மற்ற பகுதிகளிலிருந்து மயிர்க்கால்களை எடுத்து நடக்கூடிய புதிய முறையை தற்போது புகுத்தியுள்ளோம். இதற்கு சற்று பொறுமையும், நேரமும் தேவைப்படும் என்பதால் ஐந்து, ஆறு பேர் கொண்ட மருத்துவக்குழுவின் உதவியுடன் இந்த நவீன முடிமாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறோம்.

முழு பாதுகாப்பானதா?

கண்டிப்பாக.. தரமான மற்றும் இதற்கென்றே இருக்கும் பிரத்யேக மருத்துவமனையில், தேர்ந்த மருத்துவ நிபுணார்களால் முறையான சிகிச்சை மேற்கொள்ளும் பொழுது எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அழகு நிலையங்களிலோ, மசாஜ் மையங்களிலோ அனுபவமற்றவர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போதுதான் உயிரிழப்புகள் நேர்கின்றன. மற்றபடி இயற்கையான, நிரந்தரமான முறையில் முடிமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கொண்டுதான் இருக்கிறோம்” என்று நம்பிக்கை அளிக்கிறார்.