ஆன்லைன்ல இருக்கீங்களா பாஸ்



என்னிடம் அழைத்து வரப்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு 25 வயதிருக்கும். திருமணமாகி நான்கு மாதமாகிறது. கணவருக்கு வளைகுடா நாட்டில் வேலை. ‘‘எது கேட்டாலும் பேச மாட்டேங்கிறா. பயங்கரமா கோபப்படுறா. வீட்டுல எல்லா பொருளையும் போட்டு உடைக்கிறா. நேத்து ஒரு டிவியே போச்சு. எந்த வேலையும் செய்யாமல் விட்டத்தை பார்த்துட்டு உட்கார்ந்துக்கிறா. புருஷன்கிட்ட பேசறது ஒண்ணைத் தவிர வேற எதிலேயும் ஆர்வம் இல்லை. பயமா இருக்கு சார்...’’ என்றனர் அந்தப் பெண்ணை அழைத்து வந்த அவரது பெற்றோர். வெளியே காத்திருந்தனர் மாமனார் மற்றும் மாமியார். மிகவும் முயன்றுதான் அந்தப் பெண்ணின் வாயிலிருந்து விஷயத்தை வரவழைக்க முடிந்தது.

திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் கணவன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். வாழ்வில் ஒரு புரிதல் வருவதற்கு தம்பதியருக்குள் பிரிதல் வந்துவிட்டது. திருமணமாகி ஜோடியாக பைக்கில் செல்லும் இளம் தம்பதியரை காணும் போதெல்லாம் கண்கள் கலங்கி ஏங்கித் தவிக்கிறார் இந்த இளம்பெண். தனிமையின் இரவுகளை தாங்க முடியவில்லை அவரால். இப்படி உணர்ச்சிக் கலவையாக என் முன் அமர்ந்திருந்த பெண்ணுக்கு ஓரிரு வார்த்தைகளில் எப்படி ஆறுதல் சொல்வது?

இதை அட்ஜெஸ்ட்மென்ட் டிஸார்டர் (Adjustment disorder) என்று புரிந்துகொண்டேன். இங்கே கணவர் வீட்டில் அவரால் அனுசரித்துக்கொள்ள முடியவில்லை. பொதுவாகவே, திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு கணவன் உடன் இருக்கும்போதே புதிய இடத்தில் தன்னை தகவமைத்துக் கொள்ளத் தடுமாற்றம் ஏற்படும். பழகப் பழகதான் சில மாதங்களில் அவர் அந்த சூழலுக்கு இணக்கமாவார்.

ஆனால், ஒரே மாதத்தில் கணவரும் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டால் - மேற்கண்ட பெண்ணின் தவிப்பை யோசித்துப் பாருங்களேன். ‘‘கஷ்டமா இருக்கு சார். என்னன்னே தெரியலை. நான் கோபப்படுறது தப்புன்னு தெரியுது. ஆனால், என்னால வீட்டுல நிம்மதியா இருக்க முடியலை. மனசு சரியே இல்லை’’ சொல்லும்போதே அந்த இளம்பெண்ணின் கண்ணில் பொலபொலவென கண்ணீர். வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவரின் இக்கட்டான சூழல், குடும்ப பொருளாதார சூழல்...

இவை எல்லாமே அந்தப் பெண்ணுக்கு புரிந்திருக்கிறதுதான். ஆனாலும், திருமணம் என்ற ஒன்று வாழ்வில் ஒருமுறைதான் நடக்கும். அது எனக்கு நடந்துவிட்டது. அந்த சூடு தணிவதற்குள் அருகில் அவன் இல்லை. இதற்கு யாரை நோவது என்று அந்தப் பெண் தன்னைத்தானே நொந்து கொண்டிருக்கிறார்.

தன்னிடம் இதற்கான கேள்விகளை கேட்டுக்கொண்டு பதில் கிடைக்காமல் சமூகத்தின் முன், குடும்பத்தின் முன் கேள்விகளை வைக்கிறார். அங்கும் திருப்தியான பதில் இல்லை. இந்த ஆற்றாமை கோபமாக, கண்ணீராக, வேதனையாக வெடிக்கிறது. மிக நீண்ட ஆற்றுப்படுத்தலுக்குப் பின் பலவித யோசனைகளுடன் அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தேன்.

என் நெருங்கிய நண்பர் அவர். கேரளாவைச் சேர்ந்தவர். நீண்டநாள் என்னிடம் உதவியாளராக இருந்தார். என்னிடம் பணிபுரிந்தபோது வெளிநாட்டில் செவிலியராக பணிபுரியும் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்தப் பெண்ணும் நம்மூரைச் சேர்ந்தவர்தான். அவரது பெற்றோர் இங்கே இருக்கிறார்கள். திருமணம் நல்லபடியாக நடந்தது. நண்பரும் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.

அங்கேயே வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்கள். நண்பரின் மனைவி கர்ப்பம் தரித்தார். நண்பருக்கு மகிழ்ச்சிதான். ஆனால், மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தனிமையில் தவித்துப்போனார் அவர். வேலைக்கும் செல்ல வேண்டும். வீட்டில் தனியாக இருக்கும் மனைவியையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

நினைத்துப் பாருங்கள். இங்கே நம் குடும்பத்தில் ஒரு பெண் கர்ப்பவதியானால் என்னென்ன செய்கிறோம். பார்த்துப் பார்த்து சமைப்பது பரிமாறுவதில் தொடங்கி சீமந்தம், வளைகாப்பு என்று ஒரு புதிய உயிர் உலகுக்கு வருவதை திருவிழாவாகவே கொண்டாடி அல்லவா வரவேற்கிறோம். ஆனால், சுமார் ஒன்பது மாதங்கள் தன்னந்தனியாக போராடி, ஒருவழியாக அந்த உயிரை நலமாக பெற்றெடுத்திருக்கிறார்கள் தம்பதியர். வேறு வழியும் இல்லை அவர்களுக்கு. இங்கிருந்து ஒரு நபர் அந்த நாட்டுக்குப் போக வர செலவு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும். 

பணம் கூட பிரச்னை இல்லை. இங்கே நண்பரின் தந்தைக்கு புற்றுநோய். அவரது மனைவி அவரை அருகிலிருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்ணின் பெற்றோரும் மிகவும் வயதானவர்கள். இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள். அதனால், இங்கிருந்து யாரும் செல்ல முடியவில்லை. ‘‘மோகன் சாரே, வளர வாமிட்டிங் வருன்னு என்னோட பாரியாக்கு. இப்ப ஏதானோ மாத்திரை கொடுக்க வேண்டியது’’ என்று அவரது மனைவி கருத்தரித்தபோது போன் செய்து என்னிடம் மனைவியின் வாந்திக்கு மாத்திரை கேட்டான் நண்பன்.

குழந்தை பிறந்த அன்று மீண்டும் எனக்கு போன் செய்தார் நண்பர். ‘‘மோகன் சாரே, ரொம்ப சந்தோஷம். ஆண் குட்டியாணு. சிசேரியன்தான். பட்க்ஷே, ரெண்டு பேரும் சுகம். ஒண்ணும் பிரச்னை இல்லை சாரே. நான் பார்த்துக்கிறேன்...” என்றவர் சில வினாடிகள் மௌனமானார். எதிர்முனையில் அவர் லேசாக விசும்புவது கேட்டது. எதற்குமே அவ்வளவு சீக்கிரம் கண் கலங்காத அவர், விசும்பி அழுவது நெஞ்சை பிசைந்தது.

என்னதான் நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் வாழ்வின் மிக முக்கியமான தருணங்களில் நாம் சொந்த பந்தங்கள் புடைசூழ இருப்பது இந்திய சமூகத்தில் வழக்கம் இல்லையா? இந்த உறவுகள் சூழவுள்ள மனோபலம் மலையையும் அசைத்துவிடும்தானே.

என்ன இருந்தாலும் சிசேரியன் என்பதும் ஒரு ஆபரேஷன் தானே... ஆலோசனைக்குக் கூட சொந்த பந்தங்கள் இல்லாத சூழலில் அந்த நண்பன் தன்னந்தனியாக எப்படி எல்லாம் பரிதவித்திருப்பான். அந்த அரை மணி நேரம் எப்படியெல்லாம் உள்ளுக்குள் அழுதிருப்பான். இதுதான் நண்பர்களே என்.ஆர்.ஐ. என்று நாமெல்லாம் கௌரவமாகச் சொல்லும் நண்பர்களின் நிலைமை!

சமீபத்தில் லண்டனிலிருந்து போன். இவரும் நண்பர்தான். பிரபல மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணர். முகநூல் தொடர்பில் இருப்பவர். ‘‘மாப்ள, நேத்து என் வீட்டுல செஞ்ச பிரியாணியை போட்டோ பிடிச்சி போட்டதுக்கு 40 லைக் போட்டிருந்தாங்கடா. ரொம்ப ஹேப்பிடா மச்சி...’’ என்று குழந்தையைப் போல குதூகலித்தான் நண்பன்.

“இதென்னடா பெரிய விஷயம்...” என்றேன் சாதாரணமாக. என்னவோ தெரியவில்லை, எமோஷனலாகிவிட்டான் அவன். ‘‘நண்பா, உனக்கு இது சின்ன விஷயமா இருக்கலாம். கடல் கடந்து இருக்கிற எங்களுக்கு இது பெரிய விஷயம். ஒரு லைக்கோ கமெண்ட்டோ எவ்வளவு பெரிய சந்தோஷம் தெரியுமா? பக்கத்து வீட்டுல நீங்க எல்லாம்  இருந்து பேசிக்கிற உணர்வை தருது தெரியுமா. நீங்க எல்லாம் பெருமையா எங்களை நினைக்கிறீங்க. ஆனால், எத்தனை விஷயங்களை நாங்க மிஸ் செய்யுறோம் தெரியுமா?’’ என்றான்.
நண்பன் சொல்வது உண்மைதான்.

எனது வாட்ஸ் அப் குரூப்பில் சுமார் 50 மருத்துவர்கள் இருக்கிறோம். அதில் 25 பேர் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்தில் தீவிரமாக இருப்பவர்கள். அதிலும்  10 பேர் மிகத்தீவிரம். அவர்கள் அத்தனை பேரும் வெளிநாட்டில் இருப்பவர்களே. காலையில் குட்மார்னிங் தொடங்கி நாய்க்குட்டிக்கு பெயர் வைத்தது, நாட்டு மருந்து சாப்பிட்டது எனப் படுக்கச் செல்லும் வரை இவர்களின் அலப்பறை சில நேரங்களில் என்னை கடுப்படிக்கச் செய்யும்.

ஆனாலும், அவர்களின் தனிமையை நினைத்து சமாதானம் கொள்வேன். என்னதான் வெளிநாட்டிலிருந்தாலும் உடன் படித்த, பழகிய நண்பர்களுடன், உறவினர்களுடன் விஷயங்களைப் பகிரும்போது இங்கே இப்போது இந்தியாவில் நம்முடன் இருப்பது போன்ற உணர்வை அது அவர்களுக்கு கொடுக்கிறது.

பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் சிதறிக் கிடக்கும் மனங்களை ஒருங்கிணைக்கும் ஓர் ஊடகமாக இணையம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தானோ என்னவோ, ‘சாப்பிட்டீங்களா பாஸ்’ என்பதுபோல இப்போதெல்லாம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாகவும் ஆகிவிட்டது ‘ஆன் லைனில் இருக்கீங்களா பாஸ்’ என்பதும்! பொருளாதார யுத்தத்துக்காக உறவுகளைப் பிரிந்து, கண்காணாத இடத்திலிருப்பவர்களுக்கு ஆறுதல் தரும் தாய்மடியாக இருப்பது ஆன்லைன்தான். அதற்காக ஆன்லைன் எல்லாமே தந்துவிடுமா என்ன?!

சம்பாத்தியத்துக்காக குடும்பத்தைப் பிரிந்து சென்று அங்கே அவர்கள் தவிப்பது ஒருபக்கம் எனில், இங்கே அவர்களின் பெற்றோர் படும் பாடு வேறு மாதிரியானது; மிக வேதனையானது. உடல் மற்றும் மன ரீதியான இவர்களின் பிரச்னை பெரும்பாலும் வெளியுலகம் அறிந்திராத ஒன்று.

தள்ளாத முதுமை, அது சார்ந்த நோய்கள் என ஒருபக்கம்... தாங்கவியலாத தனிமை இன்னொரு பக்கம் என இவர்களை வாட்டி எடுக்கிறது. திடீரென்று நமக்கு ஏதாவது ஆகிவிட்டால் வெளிநாட்டிலிருந்து மகன் வர முடியுமா? என்ற கேள்வியில் தொடங்கி தான் யார்? எதற்காக வாழ்கிறோம்? இனி என்ன செய்வது? போன்ற பலவித கேள்விகளால் மிகுந்த மனச் சோர்வுக்கு ஆளாகிறார்கள்.

இத்தனை நாள் வேலை, வேலை என்று ஓடிவிட்டு இப்போது நிறைய ஓய்வு கிடைக்கிறது. ஆனால், கூடிக்களிக்க குழந்தைகள் இல்லை, அவர்கள் பெற்ற பேரக் குழந்தைகளும் இல்லை. வாழ்க்கையில் என்ன சாதித்தோம் என்கிற பூதாகரமான கேள்விகள் அவர்களைக் கொல்கிறது. வெறுமை தரும் சோகம் அவர்களை தற்கொலை வரை தூண்டுகிறது.

இதைத்தான் எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம் (Empty Nest syndrome) என்கிறோம். பறவைக் கூட்டிலிருந்து கடைசிப் பறவையும் பறந்த பிறகு தாய்ப் பறவையின் மனநிலைக்கு ஈடான மனநிலை இது! வட இந்தியாவில் நாக்பூர், புனே போன்ற நகரங்களில்  வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வயதான பெற்றோர் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளை அடிக்கடி பார்க்க முடிகிறது.

இவர்களுக்கு உதவவே அங்கு என்.ஆர்.ஐ.பி.ஓ.(Non resident Indians parents organisation) என்கிற அமைப்பு புனேவிலும், என்.ஆர்.ஐ.பி.ஏ. (Non resident Indians parents association) பெங்களூருவிலும், ஏ.பி.ஐ.ஆர்.ஓ குஜராத்திலும் செயல்படுகின்றன.

என்.ஆர்.ஐ-க்களின் வயதான பெற்றோருக்கு உடல், மனம் மற்றும் உணர்வுரீதியான ஆதரவு அளிப்பதே இந்த அமைப்புகளின் நோக்கம். உயிருக்கு ஆபத்தான எத்தனையோ நோய்கள், எதிர்பாராத விபத்துக்கள் இதுபோன்ற வயதான பெற்றோரைத் தாக்கும்போது உடன் உதவிக்கரம் நீட்டுவது நண்பர்களும் இதுபோன்ற அமைப்புகளும்தான். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தூரத்திலா மகனும், மகளும் இருக்கிறார்கள்? உயிரைக் காக்க முடியாமல் மரணித்துவிட்டால் நிலைமை இன்னும் சிரமம்.

வெளிநாட்டிலிருந்து மகன்/மகள் வரும் வரை உடலை பாதுகாத்து வைப்பது போன்ற நெருக்கடி நேர பணிகளையும் இதுபோன்ற அமைப்பினர்தான் செய்கின்றனர். கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இழக்கவே கூடாத எத்தனையோ உறவுகளின் அருகாமை, ஆதரவை இழப்பது பெற்றோர்கள் மட்டுமில்லை, அவர்களின் பிள்ளைகளும்தான்.

நண்பர்களே, கடல் கடந்து செல்லலாம்தான். சம்பாதிக்கலாம்தான். ஆனால், அந்நிய மண் ஒருபோதும் தாய் மண் ஆகாது. உங்கள் வேர் ஒருபோதும் அந்நிய மண்ணில் உயிர்ப்புடன் இருக்காது. வெளிநாட்டுக்குச் செல்லுங்கள். குறிப்பிட்ட காலம் பணியாற்றுங்கள். அது அதிகபட்சம் 5 அல்லது 10 ஆண்டுகளாக மட்டும் இருக்கட்டும். உலகம் முழுவதும் சுற்றினாலும் உசிலம்பட்டியில் தலைசாய்த்துப் படுக்கும் நிம்மதி உங்களுக்கு வேறு எங்கும் கிடைக்காது என்பதை நினைவில் நிறுத்துங்கள்! (Processing... Please wait...)