கண்தானம்... இன்னும் சில சந்தேகங்கள்!



இந்தியாவில் சுமார் 5 மில்லியனுக்கும் மேலான மக்கள் கருவிழிக் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கண்தானம் மூலம் மிகச் சுலபமாக பார்வையை மீட்டுத்தர முடியும். மற்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளில்கூட வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கலாம். ஆனால், கருவிழி மாற்று சிகிச்சையில் அது வெற்றிகரமாக அமைய 90 சதவிகித வாய்ப்பு உண்டு. பார்வையின்றிப் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தில் வெளிச்சம் ஏற்றவும் இந்தக் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை பெரியளவில் உதவும்.

கண்தானம் என்றதும் இறந்தவர்களின் கண்களை நோண்டி, கண்களை எடுத்துக்கொண்டு செல்வார்கள் போல என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் ஏதுமில்லை. இறந்தவர்களின் கண்களில் இருந்து கருவிழிகள் மட்டுமே அகற்றி எடுத்துச் செல்லப்படும். அதை எடுத்தபிறகு அவர்களது உருவத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பயப்பட வேண்டாம்.

கார்னியா என்றழைக்கப்படுகிற கருவிழி கன்களின் கருமையான பகுதியின் முன்னால் உள்ள ஒருவகையான டிரான்ஸ்ஃபரன்ட் படிமம். ஒளியை உள்வாங்கி விழித்திரையின் வழியே பார்வையைக் குவியச் செய்வதில் கருவிழிகளின் வேலை மிக முக்கியம். கருவிழிகளின் டிரான்ஸ்ஃபரண்ட் தன்மை குறைந்துவிட்டால் அதுபார்வையிழப்புக்குக் காரணமாகும். கருவிழி மாற்று சிகிச்சையில் ஒளிபுகாத கருவிழியை நீக்கிவிட்டு, தானமாகப் பெறப்பட்ட நல்ல கருவிழியைப் பொருத்துவார்கள்.

கருவிழி ஏன் ஒளிபுகா தன்மையை அடைகிறது?
*  தொற்றுகளின் காரணமாக
* அடிபட்டுக் காயங்கள் ஏற்படுவதன் காரணமாக
* கண்களில் செய்யப்படுகிற அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு முறையான பராமரிப்போ, கவனிப்போ இல்லாததன் காரணமாக
* ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக
* பரம்பரைத் தன்மை காரணமாக யாரெல்லாம் கண் தானம் செய்யலாம்?

கண் தானம் செய்ய வயது வரம்பே இல்லை. ஒரு வயதுக் குழந்தைகூட தானம் கொடுக்கலாம். குழந்தைகள் தவிர்த்து மற்றவர்கள், கண்களைத் தானம் கொடுப்பதாக உறுதிமொழி ஏற்க வேண்டும்.  அதைத் தம் குடும்பத்தாரிடம் முறையாகத் தெரிவித்து விடுவது சிறந்தது. கண்ணாடி அணிந்திருப்பவர்களும் கண்தானம் செய்யலாம். ஒருவேளை இறந்தவர் கண்தானப் பத்திரத்தில் கையெழுத்திடாவிட்டால் அவரது குடும்பத்தார் சம்மதத்துடன் இறந்தவரின் கண்களை தானமாகக் கொடுக்கலாம்.

இறந்தவரின் கண்கள், அடுத்த 6 மணி நேரத்துக்குள் தானமாகக் கொடுக்கப் பட வேண்டும். எனவே உடனடியாக அருகிலுள்ள கண்தான மருத்துவமனைக்குத் தகவல் சொல்ல வேண்டியது முக்கியம். தன் கண்களைத் தானமாகக் கொடுக்க வேண்டும் என்பது இறந்தவரின் விருப்பமாக இருக்கும் பட்சத்தில், இந்த விஷயத்தில் தாமதம் செய்வது அவரின் ஆசையை நிராசையாக்கலாம்.

கண்தான மருத்துவமனையிலிருந்து நபர்கள் வரும்வரை இறந்தவரின் கண்களை சுத்தமான, ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும். அந்தத் துணி காய்ந்துவிடாதபடி கண்களுக்கு நேரே மின்விசிறி சுழலாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இறந்தவரின் தலையை 6 இன்ச் அளவுக்கு உயர்த்திக் கிடத்தி வைத்திருப்பது, கண்களை எடுக்கும்போது ரத்தக் கசிவு அதிகமாக இல்லாமல் தடுக்கும்.

யார் தானம் கொடுக்க முடியாது?
* உயிருடன் இருப்பவர்கள்
* எய்ட்ஸ் மாதிரியான குணப்படுத்த முடியாத தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்
* செப்டிசீமியா உள்ளவர்கள்.
(முற்றும்!)