மகன்களைப் பெற்ற பெற்றோருக்கு மட்டும்...ஆண்டுதோறும் சாலை விபத்தில் பலியாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேல் 15 வயதில் இருந்து 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று ஒரு புள்ளிவிபரம் கூறியிருக்கிறது.

அதிலும் சாலை விபத்துக்களில் தமிழகம் எப்போதும் இந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கிறது என்பது இன்னும் கவலைக்கிடமான செய்தி. இத்தனைக்கும் காரணம் இளைஞர்களைக் கவரும் சூப்பர் பைக்குகள்... மகன்களுக்காக பெற்றோர் ஆசையாக வாங்கிக் கொடுக்கும் சூப்பர் பைக்குகளேதான்!

சமீபத்தில் டெல்லி மாண்டி ஹவுஸ் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற விபத்தில் ஹிமான்ஷூ பன்சால் என்ற இளைஞர் பலியானார். தங்களது மகனுக்கு சூப்பர் பைக் வாங்கிக் கொடுக்காமல் இருந்திருந்தால் அவன் ஒருவேளை உயிரோடு இருந்திருப்பான் என்று அவனது பெற்றோர் கண்ணீருடன் பேட்டியளித்தார்கள். சூப்பர் பைக்குகள் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்குமாறுப் பெற்றோருக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்கள். இதுபற்றி தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் தரிடம் பேசினோம்...

‘‘நமது நாட்டில் ஒரு நிமிடத்துக்கு ஒரு சாலை விபத்தும், அதன் காரணமாக 4 நிமிடத்துக்கு ஒரு முறை உயிரிழப்பும் ஏற்படுகிறது. இவ்வாறு நடைபெறுவதற்கு சாலை விதிமுறைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இன்மையும், 2 சக்கர வாகனங்கள் மற்றும் பஸ், லாரி ஆகிய கனரக வாகனங்கள் தடையில்லாமல் செல்லும் வகையில், தேவையான சாலை வசதிகள் செய்யப்படாமல் இருப்பதையும் முக்கிய காரணங்களாகச் சொல்லலாம்.

மேலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாகனங்கள் அதிகரித்து வரும் அளவுக்கு சாலை வசதிகள் அமைக்கப்படாமல் இருப்பதும் இந்த வேதனைக்குக் காரணமாக இருக்கிறது. ஜெர்மனி போன்ற நாடுகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப, சாலை வசதி உடனுக்குடன் செய்து தரப்படுகிறது.

நமது நாட்டில் ‘மகன் காலேஜுக்குப் போறான்’, ‘சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டான்’ என்பதைக் காரணம் காட்டி 300 CC, 550 CC என அதிவேகமுள்ள பைக்குகளை வாங்கிக் கொடுக்கின்றனர். நவீன ரக பைக் கிடைத்த சந்தோஷத்தில் பக்குவம் இல்லாத காரணத்தால் சாலை விதிகளைப் பின்பற்றாமலேயே செல்கின்றனர்.

உயிருக்கு உத்தரவாதம் தரும் ஹெல்மெட் அணிவதும் இல்லை. குறிப்பாக, இரவு நேரங்களில், தேசிய நெடுஞ்சாலைகளில் மது அருந்திவிட்டு அதிவேகத்தில் வண்டி ஓட்டுகின்றனர். அது மட்டுமில்லாமல், பல சமயங்களில் 3 அல்லது 4 நண்பர்களை தனக்கு பின்னால் உட்கார வைத்துச் செல்கின்றனர்.

முக்கியமாக இப்போது வரும் நவீன ரக பைக்குகள் பெரிதாகவும், எடை அதிகமாகவும் இருக்கின்றன. அதற்கு ஏற்ற மாதிரி இளைய தலைமுறையினருக்கு உடல் அமைப்பும், பலமும் இல்லை. எனவே, அதிவேகமாக வண்டியை ஓட்டும்போது கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வரும் கனரக வாகனங்களில் மோதியும், கீழே விழுந்தும் உடல் முழுவதும் அடிபட்டு கோமாஸ்டேஜில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர்.

இவ்வாறு, அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுபவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் கவலையுடன் காத்திருப்பதைப் பார்க்கும்போது மனம் உடைந்துபோய்விடும். விபத்தில் இருந்து மீண்டு வந்தாலும் கை, கால்கள் ஊனமடைந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

ஆகவே, தங்களுடைய மகனுக்கு அதி நவீன பைக் வாங்கித் தர விரும்பும் பெற்றோர் இந்த விஷயங்களை எல்லாம் யோசிக்க வேண்டும். மகன்களுக்கும் பக்குவமாகச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். வாகனம் ஓட்டும் முறை, விதிமுறைகளைப் பின்பற்றுதல், ஹெல்மெட், குறைந்த வேகம் கொண்ட பைக் என்று பல விஷயங்களிலும் கவனம் செலுத்தச் சொல்ல வேண்டும்’’ என்கிறார் அக்கறையுடன்!
- விஜயகுமார்