நினைப்பது முடியும் !



நேர்மறை எண்ணங்களின் உளவியல் ரகசியம்
டாக்டர் ஷில்பா சிங்கி

மனசு போல வாழ்க்கை என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம்... எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று கவிஞர்களின் வர்ணனைகளைக் கேட்டு ரசித்திருப்போம்... எதை எண்ணுகிறாயோ, அதையே அடைகிறாய் என்று தன்னம்பிக்கைப் பேச்சாளர்களின் வார்த்தைகளைக் கேட்டு மெய்சிலிர்த்திருப்போம்... எல்லாம் சரிதான்....
எண்ணங்கள் ஒருவரின் தொழில் ரீதியான வாழ்க்கையில் வெற்றிக்கு உதவுவதாக ஏற்றுக் கொள்ளலாம்தான். ஒருவரின் ஆரோக்கியத்துக்கும் நேர்மறை எண்ணங்கள் உதவுமா?

‘நிச்சயம் உதவும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

‘ஒருவரின் ஆயுட்காலம், நோயிலிருந்து தப்பிப் பிழைத்தல், இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, புற்றுநோய் விளைவு, பிரசவம், வலியை சகித்துக்கொள்ளும் தன்மை மற்றும் அனைத்து ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களிலும் எண்ணங்கள் மிகமுக்கியப் பங்காற்றுகின்றன. எங்களுடைய ஆய்வில் எதிர்மறை எண்ணங்கள் உடையவர்களைவிட நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களிடம் காணப்பட்ட விளைவுகள் ஆரோக்கியமாக இருந்தது என்று கூறியிருக்கிறது டென்மார்க் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் சமீபத்திய அறிக்கை ஒன்று.

உதாரணத்துக்கு, மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் 55 சதவீதம் மரணத்திலிருந்து மீண்டு இருப்பதாகவும் இந்த ஆய்வில்  கூறப்பட்டுள்ளது.

இன்டர்னல் மெடிசன் சிறப்பு மருத்துவரான ஷில்பா சிங்கியிடம் நேர்மறை எண்ணங்களின் தாக்கம் ஆரோக்கியத்தில் எப்படிபிரதிபலிக்கிறது என்று கேட்டோம்...“ஒரு நோயாளியின் மனதில் விதைக்கப்படும் அல்லது தோன்றும் எண்ணங்களின் விளைவு அவரது உடலில் வெளிப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு நோயாளியின் மனதில் தோன்றும் எண்ணங்கள் நேர்மறையாக இருந்தால் மன அழுத்தம் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அந்த நோயிலிருந்து அவரால் வேகமாகவும் குணமடைய முடியும்.

அதேநேரம், எதிர்மறை எண்ணம் அதிகமானால் நோயின் தாக்கம் இன்னும் தீவிரமாகும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின் மன அழுத்தத்தினால் தசைகள் இறுக்கம் அடைந்து உடல்வலி, தலைவலி, மூட்டுவலி, முதுகுவலி, தூக்கமின்மை, சோர்வு, செரிமானக்கோளாறு மற்றும் ரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்படுகிறது.

எதிர்மறை எண்ணம் உடையவர்கள் கோபம், எரிச்சலால் கத்தும்போது இயல்பாகவே ரத்தக்கொதிப்பு, இதயத்துடிப்பு போன்றவை அதிகரிக்கும். ஏற்கெனவே ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இதனால் பக்கவாதம், மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உண்டு.

ஒருவர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நேர்மறை எண்ணங்கள் உதவுவதைப் போலவே, பாதிப்புகளிலிருந்து மீண்டுவரவும் நேர்மறை எண்ணங்கள் பக்கபலமாக இருப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மனதில் நம்பிக்கையோடு இருக்கும் நோயாளி தன்னை கவனித்துக்கொள்ளும் மருத்துவர், செவிலியர், உறவினர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதால் ஆபத்தான அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னும் வேகமாக குணமடைந்துவிடுவார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், நேர்மறை எண்ணங்கள் கொண்ட முதியவர்கள் ஆரோக்கியமான மனநிலையுடனும், திடமான உடலமைப்போடும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். Science Direct என்னும் அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட மருத்துவ அறிக்கை ஒன்றும் இதே கருத்தினை வழிமொழிகிறது.

இந்த நேர்மறை எண்ணங்கள் அவரை கவனித்துக் கொள்பவருக்கும், பார்க்க வருகிறவருக்கும் கூட அவசியமாக இருக்க வேண்டும். முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நோயாளியின் முன்பாகவே தன்னுடைய அனுபவங்களையும், நோயைப்பற்றியும் அலசி ஆராய்பவர்களால் நோயாளிக்கு மேலும் கஷ்டம் அதிகரிக்கும். அதனால், நோயாளிகள் முன்பு நல்ல விஷயங்களைப் பேசுவதே அது அவருக்கு நோயிலிருந்து விரைவில் குணம்பெற்று வீடு திரும்ப உதவி செய்யும்’’ என்கிறார் அழுத்தமாக!
- உஷா நாராயணன்