டியர் டாக்டர்




நீரிழிவு அதிகமாகி வருகிறது என்ற அச்சுறுத்தல் இருக்கும் சூழலில், ‘நீரிழிவைத் தடுக்க தடுப்பூசி’ என்ற செய்தி நம்பிக்கை டானிக். அதேபோல, அரிசியைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் உலாவரும் நிலையில் அரிசியின் உண்மை நிலையை அலசி ஆராய்ந்திருந்ததும் பாராட்டத்தக்கது.
- சுகந்தி நாராயணன், வியாசர் நகர்.

‘பெற்றோரின் சண்டைகள் குழந்தைகளை பாதிக்கும்’ கட்டுரை சமூகத்துக்கு ஒரு நல்ல பாடம். வளரும் பருவத்தில் குழந்தைகள் மனதில் என்ன விதைக்கிறோமோ, அதுதான் அவர்களது எதிர்காலத்தை உருவாக்கும் என்பதை பெற்றோர்கள் மறக்கக் கூடாது.
- தமிழரசி, நாமக்கல்.

ஆரோக்கிய வாழ்வுக்காக சித்தர்கள் எத்தனை வழிமுறைகளை வழங்கி இருக்கிறார்கள் என்பதை நினைத்தால்  பிரமிப்பாக இருந்தது. உணவு, தூங்கும் முறை, குளியல், பயன்படுத்த வேண்டிய பாத்திரங்கள் என்று ஒவ்வொன்றிலும் சித்தர்களுக்கு இருந்த ஞானம் இன்றைய நவீன மருத்துவத்தாலும்கூட புரிந்துகொள்ள முடியாது என்று சொன்னால் அது மிகையில்லை.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

அசைவப் பிரியர்களுக்கான ஆலோசனையையும், எச்சரிக்கையையும் தந்து அசத்திவிட்டீர்கள். டாக்டர் பாசுமணிக்கும், டயட்டீஷியன் உத்ராவுக்கும் கூடுதல் நன்றிகள்.
- புவனா, அம்மன் நகர்.

‘நாமளும் அங்க பிறந்திருக்கலாம்பா’ எனும் ஆசையை ஏற்படுத்தியது ‘சுகாதாரத்தில் டாப் 10 நாடுகள்’ பற்றிய அலசல். இந்தியா அந்தப் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டுமே என்று ஆதங்கமும் எழாமல் இல்லை.
- பாப்பாக்குடி இரா.செல்வமணி, திருநெல்வேலி.

‘புல்வெளியில் நடப்பது கண்களுக்கு நல்லது’ என்ற செய்தி யைப் படித்து வியந்து மகிழ்ந்தேன். கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது என்று இரண்டு வெவ்வேறு கட்டுரைகள் ஒரே இதழில் வெளியானது கர்ப்பிணி களுக்கு நிச்சயம் சந்தோஷத்தை வரவழைத்திருக்கும்.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை.

‘குங்குமம் டாக்டர்’ இதழைத் தொடர்ந்து படித்துவரும் மருத்துவ மாணவி நான். பலவகையிலும் பயனுள்ளதாகவும், எளிமையானதாகவும் இருக்கிறது என்பதே நான்
விரும்புவதற்குக் காரணம்!
- எஸ். வரலட்சுமி, பேரணாம்பட்டு.

தாய்ப்பாலின் அருமைகளை எடுத்துக்கூறிய, டாக்டர் வகிதா சுரேஷூக்கு நன்றி. இளம் தாய்மார்களும், இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி.
- ந.கலைவாணன், ராசிபுரம்