எந்த நாளும் இனிய நாளே!



 Morning Check list

‘‘காலையில் எழுந்ததும் என்ன செய்கிறோம், என்னவெல்லாம் செய்யாமல் தவிர்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த நாள் இனிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாறுகிறது’’ என்கிறார் உளவியல் மருத்துவர் சத்தியநாதன்.

அவர் சொல்லும் Do’s and Don’ts பட்டியல் இதோ... ‘‘காலையில் ஒருவர் துயில் எழும் நேரம், அவர் செய்யும் முதல் வேலை இந்த இரண்டையும் வைத்தே அவர் ஆரோக்கியமானவரா இல்லையா என்பதைச் சொல்லி விட முடியும். அந்த அளவுக்கு நாம் அதிகாலையில் எழுந்து என்ன செய்கிறோம் என்பது முக்கியமாக இருக்கிறது. நாம் தூங்கச் செல்லும் நேரமும் துயில் எழும் நேரமும் ரொம்பவும் முக்கியம். நாம் குறித்த நேரத்துக்குத் தூங்கும்போது நம் மூளை முழு ஓய்வு பெறுகிறது. மறுநாள் காலை உற்சாகத்துடன் ஒரு வேலையை தொடங்குவதற்கு வசதியாகவும் இருக்கிறது. அதனால், ஒருவர் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், அவர் செய்யவேண்டிய முதல் வேலை அதிகாலையில் எழுந்திருப்பதாகும். இதற்காக, இரவு தூங்கச் செல்லும் நேரத்தை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். தாமதமாக எழுந்திருப்பது நம்முடைய உடலைச் சோர்வடையச் செய்கிறது, மூளையின் திறனும் குறைகிறது. அதேபோல, அதிகாலையில் எழுந்தவுடன் டிவி, செல்போன், இணையம் என ஏதோ ஒரு பணியில் உடனடியாக ஈடுபடுகிறோம். இது தவறு. இரவு முழுவதும் நீண்ட நேரம் ஓய்வெடுத்த மூளையை இது தொந்தரவு செய்து, மீண்டும் சோர்வடையச் செய்யும்.

அதனால், அதிகாலையில் எழுந்தவுடன் சில நிமிடங்கள் படுக்கையிலேயே அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். ஆழமாக சில நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். பின்பு பதற்றம் இல்லாமல் மெதுவாக எழுந்து, பல் துலக்கிவிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் அருந்தியவுடன் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யலாம். பிறகு தேநீரையோ, காபியையோ தேடாமல் நன்றாக கொதிக்க வைத்த வெந்நீரில் சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சைச்சாறு போன்றவற்றை கலந்து தேநீருக்கு பதிலாக அருந்த வேண்டும். இது உங்கள் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும். அதன் பிறகு காலைக் கடனை கழிக்க வேண்டும். நம் உடல் கழிவை வெளியேற்ற உகந்த நேரம் அதிகாலைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன்பிறகு நிதானமாகக் குளிக்க வேண்டும். இதற்கிடையில் புத்தகங்கள், செய்தித்தாள் வாசிப்பது நல்லது. இது உங்கள் மனதை இலகுவாக்கும்.

காலை உணவுக்கு முன் கொய்யா, பப்பாளி, ஆப்பிள் என ஏதாவது ஒரு பழத்தினை சாப்பிட்டுவிட்டு காலை உணவு எடுத்துக்கொள்வது உடல்நலனை மேம்படுத்தும். அதன்பிறகு எடுத்துக் கொள்ளும் காலை உணவும் எளிதாக ஜீரணிக்க கூடியதாக இருக்க வேண்டும். ஒருவர் இவ்வாறு தினமும் தன்னுடைய நாளைத் தொடங்கினால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எந்த நோயும் நெருங்காமல் ஆரோக்கியமாக இருப்பார். இவையெல்லாம் உங்கள் மூளைக்குத் தேவையான பிராண வாயுவைக் கொடுத்து, உங்கள் மூளையை சிறப்பாக இயங்க வைக்கும்; வலிமையானதாக மாற்றும். உடலிலும் ரத்த ஓட்டம் சீராகி புத்துணர்வோடு இருக்கும்’’ என்கிறார் சத்தியநாதன்.

- க.இளஞ்சேரன் படம்: ஆர்.கோபால்