மெடிக்கலில் என்ன லேட்டஸ்ட்?




பொய் மனதுக்கும் உடலுக்கும் கேடு! ‘ஏதாவதொரு விஷயத்தை மற்றவர்களிடமிருந்து மறைக்கும்போது, நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது’ என்று American psychological association மருத்துவ இதழின் ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவித்திருக்கிறது. ‘குரங்கை நினைக்காமல் மருந்து சாப்பிட வேண்டும்’ என்ற ஒரு கதை நம் ஊரில் உண்டு. அதேபோல, ஒரு விஷயத்தை ஒருவரிடமிருந்து மறைக்க முடிவு செய்யும்போது, அவரைப் பார்க்கும்போதெல்லாம் நம்மையறியாமல் அந்த ரகசியத்தை நாம் நினைத்துக் கொண்டே இருப்பதாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள். இதுவே மன அழுத்தத்துக்குக் காரணமாகி தொடர்ந்து உடல்நல சீர்கேட்டுக்கும் வித்திடுகிறதாம்.

புற்றுநோயைத் தடுக்கும் குங்குமப் பூ
‘ஆசிய நாடுகளில் கர்ப்பிணிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் குங்குமப்பூ புற்றுநோயைத் தடுக்கக்கூடும்’ என்று இத்தாலிய மருத்துவ விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர். குங்குமப் பூவிலுள்ள Quercetin என்ற வேதிப்பொருளை ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்தபோது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அவை தடுத்தன. அதேநேரத்தில், ஆரோக்கியமான மனித செல்களின் வளர்ச்சியை Quercetin தடுக்கவில்லை. எனவே, புற்றுநோயைக் கட்டுப்படுத்த குங்குமப் பூவைப் பயன்படுத்தலாம் என இத்தாலியவிஞ்ஞானிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

ஆறுதல் தரும் வலைதளங்கள்
சமூக வலைதளங்கள் பற்றி நிறைய எதிர்மறையான கருத்துகள் உண்டு. ஆனால், அதன்மூலம் ஆரோக்கியரீதியாக ஒரு நன்மையும் இருக்கிறது என்று Nature human behaviour ஆய்விதழில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சமூக வலைப்பின்னலில் உள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவரது சுற்றமும் நட்பும் அடுத்த சில ஆண்டுகளுக்கு தங்களுக்குள் கருத்துப் பரிமாறி அந்த இழப்பை ஆற்றுப்படுத்திக் கொள்கின்றனர் என்று தெரிய வந்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் உள்ள சுமார் 15 ஆயிரம் கணக்குகளில், இறந்தவர்களைப் பற்றிய கருத்துப் பரிமாற்றத்தை ஆராய்ந்தபோதுதான் ஒருவர் இறந்ததும், அவரைச் சார்ந்த பலரும் அடிக்கடி நிலைத் தகவல்களையும், கருத்துக்களையும் பதிவிட ஆரம்பிப்பது தெரிய வந்துள்ளது என்கிறது இந்த ஆய்வு.
 
தொகுப்பு: க.கதிரவன்